பிலிப்பைன்சில் ஒவ்வொரு ஆண்டும் 4 செ.மீ. கடலில் மூழ்கும் கிராமம்

மணிலா,
பிலிப்பைன்ஸ் நாட்டின் தலைநகர் மணிலாவில் இருந்து 17 கி.மீ. தொலைவில் உள்ளது சிடியோ பரிஹான் கிராமம்.  ஒரு காலத்தில் தீவாக இருந்த இந்த கிராமம் தற்போது நிலப்பரப்பே கண்ணில் படாத வகையில் கடலில் மிதக்கும் கிராமமாக மாறியிருக்கிறது.

புவி வெப்பமயமாதல் பிரச்சினையால் கடல்நீர் மட்டம் அதிகரித்து வருவதால் சிடியோ பரிஹான் கிராமம் மெல்ல மெல்ல கடலில் மூழ்கி வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் சுமார் 4 சென்டிமீட்டர் அளவிற்கு இந்த கிராமம் கடலில் மூழ்கி கொண்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

அடிப்படை வசதிக்கே அல்லாடும் இந்த கிராமம் சூரிய மின்சக்தி மூலமே மின்சாரம் பெறுகிறது. இங்கிருக்கும் ஒரே ஒரு கிணறுதான் முக்கிய நீர் ஆதாரமாக உள்ளது. மக்கள் இந்த கிணற்று நீரையே, குடிக்கவும், குளிக்கவும், சமையலுக்கும் பயன்படுத்துகின்றனர். இந்த கிராமத்தில் இருந்த கோர்ட்டும், தேவாலயமும் கடந்த 2011-ம் ஆண்டு ஏற்பட்ட புயலில் அழிக்கப்பட்டுவிட்டன.

அந்த கிராமத்தில் உள்ள மக்கள் அனைவரும் பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கியவர்கள் என்பதால் வேறு எங்கும் செல்ல முடியாமல் இன்னல்களுக்கு மத்தியில் அங்கேயே வசித்து வருகின்றனர். கடலின் நீர்மட்டத்தின் உயரம் அதிகரிக்க அதிகரிக்க கிராம மக்கள் மூங்கில்களை கொண்டு வீட்டின் உயரத்தை உயர்த்தி வருகின்றனர்.

இது நிரந்தர தீர்வாகாது என்றும் விரைவில் இந்த கிராமம் முழுமையாக கடலில் மூழ்கி விடும் என்றும் சுற்றுச் சூழல் ஆர்வலர்கள் எச்சரிக்கின்றனர்.

-தினத்தந்தி