பிகேஆர் காங்கிரஸ்: தியான் சுவா பேச்சுக்குக் கூட்டத்தினர் எதிர்ப்பு

இன்று பிகேஆர் காங்கிரஸ் இறுதி நாள் கூட்டத்தில் பேசிய உதவித் தலைவர் தியான் சுவா, மிகுந்துவரும் கண்மூடித்தனமான வெறித்தனத்திலிருந்து கட்சியைக் காப்பது தலைவர் அன்வார் இப்ராகிமுன் கடமை என்றுவலியுறுத்தினார்.

தியான் சுவா பேச எழுந்தபோதே கூட்டத்தில் இலேசான சலசலப்பு. நேற்று பிகேஆர் காங்கிரஸ் அஸ்மினைச் சாடும் மேடையாக மாறிவிட்டதாகக் கூறி வெளிநடப்புச் செய்தவர்களில் தியான் சுவாவும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தியான் சுவா, தனதுரையில், இன்று கட்சி வெற்றி பெற்றுள்ளது என்றால் அதற்கு பலரின் அர்ப்பணிப்புத்தான் காரண்ம் என்பதை மறந்துவிடக்கூடாது என்றும் அப்படி கட்சிக்குப் பங்களித்தவர்களில் அஸ்மினும் ஒருவர் என்றும் சொன்னார்

அவர் அஸ்மின் பெயரைக் குறிப்பிட்டதும் கூட்டத்தில் கூச்சல் , குழப்பம் ஏற்பட்டது.

மேடையில் அமர்ந்திருந்த அன்வார் எழுந்து நின்று கூட்டத்தினரை அமைதிப்படுத்தினார்.

கூட்டத்தில் அமைதி நிலவியதும் சுவா பேச்சைத் தொடர்ந்தார். போராட்டத்திலிருந்து விலகி ஓடுவது தன் வழக்கமல்ல என்றாரவர்.

அன்வார் இப்ராகிம்தான் அடுத்த பிரதமர் என்பதில் மாறுபட்ட கருத்து கிடையாது. அது பக்கத்தான் ஹரப்பான் தலைவர் மன்றம் செய்த முடிவு.

அன்வாருக்குத் தன்னுடைய விசுவாசத்தையும் அவர் பிரதமர் ஆவதைத் தான் ஆதரிப்பதையும் கொடி பிடித்து பறைசாற்ற வேண்டும் என்ற அவசியமில்லை என்றாரவர்.

கட்சியில் தனிநபர் ஆளுமை வழிபாடு பெருகி வருகிறது. அதனால் கட்சி உடைவதைத் தடுத்து காக்க வேண்டும் என்று அன்வாரை அவர் கேட்டுக் கொண்டார்.