ஆஸ்திரேலியாவை அழித்து வரும் காட்டுத் தீயை அணைக்க ராணுவத்துக்கு அழைப்பு: பலி எண்ணிக்கை 23 ஆக உயர்வு

மெல்போர்ன்: ஆஸ்திரேலியாவில் வேகமாகப் பரவி வரும் காட்டுத் தீக்கு பலியானோர் எண்ணிக்கை 23 ஆக உயர்ந்துள்ளது. இந்த காட்டுத்தீயை அணைக்க ராணுவத்துக்கு பிரதமர் ஸ்காட் மோரிசன் அழைப்பு விடுத்துள்ளார்.
ஆஸ்திரேலிய  நாட்டின் கிழக்கு கிப்ஸ்லேண்ட், நியூ சவுத்வேல்ஸ், விக்டோரியா கடற்கரை ஒட்டிய பகுதிகளில் காட்டுத் தீ ஏற்பட்டு பெரும் சேதத்தை ஏற்படுத்தி வருகிறது. இதனால், இப்பகுதியில் வசிக்கும் ஆயிரக்கணக்கான மக்கள் பதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டு வருகின்றனர். இங்கு, ஒரே புகை மண்டலமாக இருப்பதால் மூச்சுத் திணறல் போன்றவற்றால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த தீயில் சிக்கி பலியானவர்கள் எண்ணிக்கை இதுவரை 23 ஆக அதிகரித்துள்ளது. இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடும் என்று அஞ்சப்படுகிறது.

விக்டோரியாவில் 50க்கும் மேற்பட்ட இடங்களில் காட்டுத் தீ பற்றி எரிந்து வருகிறது. இதில், 8  லட்சத்து 20 ஆயிரம் ஹெக்டேர் நிலப்பரப்பு கருகி நாசமாகி உள்ளது. இதனிடையே, நியூ சவுத்வேல்ஸ், விக்டோரியா ஆகிய பகுதிகளில் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டு உள்ளது. கிப்ஸ்லேண்ட் பகுதியில் வெப்பநிலை 40 முதல் 45 டிகிரி செல்சியஸ் வரை கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், காட்டுத் தீயை அணைக்க பிரதமர் மோரிசன் ராணுவத்துக்கு அழைப்பு  விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில், “தீயை அணைக்கும் முயற்சியில் ராணுவத்தை ஈடுபடுத்த இன்று முடிவு எடுக்கப்பட்டது. அதன்படி, சிட்னியில் இருந்து தீயை அணைக்கும் பணியில் கூடுதலாக விமானப்படைகளும்,  கடற்படையை சேர்ந்த 3,000 வீரர்களும் ஈடுபடுத்தப்படுவார்கள்,” என்றார். அதே நேரம், `காட்டுத்தீயை அணைக்கும் முயற்சியில் இந்தளவு அதிக ராணுவ வீரர்கள் அழைக்கப்படுவது இதுவே முதல் முறை’ என்று இந்நாட்டு பாதுகாப்பு அமைச்சர் லிண்டா ரெனால்ட் தெரிவித்தார்.

  • இந்தியா பயணம் ரத்து
    ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன் ஜனவரி 13 முதல் 16ம் தேதி வரை இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்ய இருந்தார். தற்போது அதை  ரத்து செய்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், `ஆஸ்திரேலியா முழுவதும் அழிவை ஏற்படுத்தும் காட்டுத்தீ வேகமாக  பரவி வருகிறது. மக்களை பாதுக்காப்பதில் அரசு முழு கவனம் செலுத்தி வருகிறது. இதனால், எனது இந்தியா, ஜப்பான் பயணம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது’’ என கூறப்பட்டுள்ளது.