புதுக்கோட்டை மீனவர்கள் 4 பேர் படகுகளுடன் சிறைப்பிடிப்பு- இலங்கை கடற்படையினர் நடவடிக்கை

பொங்கல் பண்டிகை விடுமுறைக்கு பிறகு நேற்று காலை கடலுக்கு சென்ற நிலையில் மீனவர்கள் 4 பேர் சிறைப்பிடிக்கப்பட்டது மீனவர்கள் மத்தியில் பெரும் கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.

அறந்தாங்கி: புட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டினம், கோட்டைப்படினம் பகுதி மீன்பிடி துறைமுகங்களில் இருந்துக்கோது தினமும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்குள் மீன் பிடிக்க செல்கிறார்கள்.

இந்தநிலையில் நேற்று காலை ஜெகதாப்பட்டினத்தில் இருந்து 96 விசைப்படகுகளில் மீன்துறை அலுவலக அனுமதியுடன் மீனவர்கள் மீன் பிடிக்க சென்றனர். அவர்களில் பெரும்பாலானோர் இந்திய கடல் எல்லையான நெடுந்தீவு பகுதியில் வலைகளை விரித்து மீன் பிடித்துக்கொண்டு இருந்தனர்.

நள்ளிரவு 2 மணியளவில் இலங்கை கடற்படைக்கு சொந்தமான ரோந்து கப்பல் ஒன்று அந்த பகுதிக்கு மின்னல் வேகத்தில் வந்தது. இதைப்பார்த்த பல மீனவர்கள் கடற்படைக்கு பயந்து தங்களது வலைகளை சுருட்டிக்கொண்டு அங்கிருந்து புறப்பட்டனர்.

ஆனாலும் பால்ராஜ் என்பவருக்கு சொந்தமான விசைப் படகை சுற்றி வளைத்த இலங்கை கடற்படையினர் அதனை சிறைப்பிடித்தனர். இதனால் செய்வதறியாது திகைத்த அந்த படகில் இருந்த பாரதி (வயது 30), அசோகன் (28), சக்தி குமார் (30), மணி (33) ஆகிய 4 பேரும், நாங்கள் எங்கள் கடல் எல்லையில்தான் மீன் பிடித்தோம் என்று கூறினர்.

ஆனால் இது இலங்கைக்கு சொந்தமான பகுதி, இங்கு மீன்பிடிக்க உங்களுக்கு எந்த உரிமையும் இல்லை என்றனர். மேலும் எல்லை தாண்டி வந்ததாக கூறி அந்த படகில் இருந்த 4 மீனவர்களையும் கைது செய்தனர். அவர்களுக்கு சொந்தமான படகுகளுடன், மீனவர்கள் பிடித்து வைத்திருந்த விலை உயர்ந்த மீன்களுடன் இலங்கையில் உள்ள காங்கேசன் துறை முகாம் அலுவலகத்திற்கு கொண்டு சென்றனர்.

நாளை அவர்கள் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்படுவார்கள். அதன்பின்னரே புதுக்கோட்டை மீனவர்கள் விடுதலையாவார்களா? அல்லது சிறையில் அடைக்கப்படுவார்களா? என்பது தெரியவரும்.