இந்திய சர்க்கரை இறக்குமதியை திடீரென அதிகரித்த மலேசியா

‘காஷ்மீரை ஆக்கிரமித்துள்ளது இந்தியா’ என்று பிரதமர் மகாதீர் தெரிவித்த கருத்தையடுத்து, சுத்திகரிக்கப்பட்ட பாமாயிலை இறக்குமதி செய்ய இந்திய அரசு சில கட்டுப்பாடுகளை விதித்தது. இதனால் மலேசியாவுக்கு கணிசமான பொருளாதார இழப்பு ஏற்படும் என்று கூறப்படும் நிலையில், இந்தியாவில் இருந்து வாங்கும் கச்சா சர்க்கரையின் அளவை திடீரென அதிகரித்துள்ளது மலேசியா. இது சர்வதேச வர்த்தக தளத்தில் பல்வேறு தரப்பினரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது.

காஷ்மீர் விவகாரம், குடியுரிமை திருத்தச் சட்டம் உள்ளிட்டவை தொடர்பில் இந்திய அரசை தொடர்ந்து விமர்சித்து வந்தார் பிரதமர் மகாதீர் முகமட். இதையடுத்து மலேசியாவிலிருந்து இந்தியா பாமாயில் இறக்குமதிக்கான கட்டுப்பாடுகளை விதித்தபோதும் கொள்கைப்படியே செயல்பட முடியும் என மகாதீர் பதிலடி கொடுத்தார்.

இந்நிலையில் திடீர் திருப்பமாக, நடப்பு காலாண்டில் இந்தியாவில் இருந்து ஒரு லட்சத்து 33 ஆயிரம் டன் அளவிலான கச்சா சர்க்கரையை வாங்க இருப்பதாக மலேசியாவின் எம்எஸ்எம் நிறுவனம் தெரிவித்துள்ளது. நாட்டின் மிகப்பெரிய சர்க்கரை சுத்திகரிப்பு நிறுவனங்களில் இதுவும் ஒன்று. கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் இந்நிறுவனம் இந்தியாவில் இருந்து 88 ஆயிரம் டன் சர்க்கரை மட்டுமே இறக்குமதி செய்திருந்தது.

இந்தியாவுக்கும் மலேசியாவுக்கும் இடையே மறைமுக வணிகப் போர் துவங்கி இருப்பதாக ஊடகங்கள் கூறி வரும் நிலையில், மலேசியாவின் முன்னணி நிறுவனம் ஒன்று திடீரென வழக்கத்தைவிட சரிபாதிக்கும் மேலான அளவில் கூடுதல் சர்க்கரை கொள்முதல் செய்ய வேண்டியதன் அவசியம் என்ன? இந்தியத் தரப்பில் விலை குறைக்கப்பட்டதா? அல்லது மலேசியாவில் சர்க்கரையின் தேவை அதிகரித்துள்ளதா? என்ற கேள்விகளுக்கு மலேசியத் தரப்பில் இதுவரை எந்த விளக்கமும் இல்லை.

மொத்தம் 200 மில்லியன் மலேசிய ரிங்கிட் மதிப்பிலான சர்க்கரையை மலேசிய நிறுவனம் கொள்முதல் செய்யப் போகிறது. இதையடுத்து மலேசிய பாமாயிலை இறக்குமதி செய்ய இந்தியா விதித்துள்ள கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுமா? அல்லது நீக்கப்படுமா? எனும் கேள்வியும் எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.

ஏற்றுமதியால் கிடைக்கும் ஆதாயங்களை இழக்க விரும்பாத மலேசியா

இந்தியா, மலேசியா இடையேயான வர்த்தக உறவில் இதுவரை மலேசியாவுக்குதான் ஆதாயங்கள் அதிகம் என்கிறார்கள் பொருளியல் நிபுணர்கள்.
இருதரப்பு வணிகத்தில் மலேசியாவில் இருந்து இந்தியா இறக்குமதி செய்யும் பொருட்களின் மதிப்பை விட, ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களின் மதிப்பு குறைவுதான்.

இந்தியா கடந்த மார்ச் வரையிலான ஓராண்டு காலத்தில் சுமார் 6.4 பில்லியன் டாலர்கள் மதிப்பிலான பொருட்களை மலேசியாவுக்கு ஏற்றுமதி செய்துள்ளது. அதேசமயம் 10.8 பில்லியன் டாலர் மதிப்பிலான பொருட்களை அந்நாட்டில் இருந்து இறக்குமதி செய்துள்ளது.

எனவே மலேசியாவுக்கு சாதகமாக அமைந்துள்ள இந்த வர்த்தக மதிப்பு இடைவெளியைக் (Trade Plus) குறைக்க வேண்டும் என இந்தியத் தரப்பில் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வந்தது. அதன் காரணமாகவே மலேசியா தற்போது கூடுதல் சர்க்கரை வாங்குவதாகக் கூறப்படுகிறது.

கடந்த 2019-ல் சுமார் 1.95 மில்லியன் டன் கச்சா சர்க்கரையை இந்தியாவிடம் இருந்து வாங்கியுள்ளது மலேசியா. உலகளவில் சர்க்கரையை அதிகம் உற்பத்தி செய்யும் நாடுகளில் இந்தியா முன்னணியில் இருப்பதாக அனைத்துலக சர்க்கரை உற்பத்தி அமைப்பு தெரிவித்துள்ளது.

பாமாயில் வர்த்தகத்துக்குப் பாதிப்பு

இது ஒருபுறமிருக்க இந்தியாவின் மறைமுகத் தடையால் மலேசியாவுக்கு உடனடியாக பாதிப்பு ஏற்படுமா, அதன் தாக்கம் எப்படிப்பட்டதாக இருக்கும்?
இந்தியா வாங்கும் மலேசிய பாமாயிலின் அளவு குறையத் தொடங்கியுள்ளது. இதனால் குறைந்தபட்சம் சுமார் 2 மில்லியன் டன் அளவிலான தனது சுத்திகரிக்கப்பட்ட பாமாயிலை விற்பதற்கு மலேசியா புதிய சந்தையை, வாடிக்கையாளரைத் தேடிப் பிடிக்க வேண்டிய கட்டாயம் ஏற்படும் என்றும், இதன் சர்வதேச சந்தை மதிப்பு சுமார் 1.4 பில்லியன் டாலர்கள் (5.7 பில்லியன் மலேசிய ரிங்கிட்) என்றும் நிபுணர்கள் தெரிவிப்பதாக மலேசிய ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. – bbc.com/tamil