கோவை சிறுமியின் வயிற்றிலிருந்து அரை கிலோ முடி, நெகிழி நீக்கம் – நடந்தது என்ன?

கோவையில் 13 வயது சிறுமியின் வயிற்றில் இருந்த அரை கிலோ தலைமுடி மற்றும் ஷேம்பு (Shampoo) பாக்கெட்டுகள் போன்ற நெகிழிக் குப்பைகள் அறுவை சிகிச்சையின் மூலம் அகற்றப்பட்டுள்ளது.

மனஅழுத்தத்தால் பாதிக்கப்பட்ட சிறுமி பெற்றோர்களுக்கு தெரியாமல் நெகிழி குப்பைகள் மற்றும் தலைமுடியை தொடர்ந்து சாப்பிட்டு வந்துள்ளார்.

கடந்த சில நாட்களாக வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த சிறுமியை கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்து மருத்துவ பரிசோதனை செய்துள்ளனர். அப்போது சிறுமியின் வயிற்று பகுதியை ஸ்கேன் (Scan) செய்த மருத்துவர்கள் கட்டி போன்ற ஒரு வடிவம் இருப்பதை கண்டறிந்துள்ளனர்.

இதனையடுத்து, கட்டியை உடனடியாக அகற்ற வேண்டுமென அறுவை சிகிச்சை நிபுணர் மற்றும் மருத்துவ குழு பரிந்துரைத்து, அறுவை சிகிச்சை மேற்கொண்டுள்ளது.

இந்நிலையில், அச்சிறுமியின் வயிற்றுப் பகுதியில் அறுவை சிகிச்சை செய்தபோது அவரது வயிற்றில் தலை முடியும் ஷேம்பு பாக்கெட் உள்ளிட்ட நெகிழி பொருட்களும் தென்பட்டுள்ளது. இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த மருத்துவர் குழு தலைமுடி மற்றும் நெகிழி குப்பைகளை வெற்றிகரமாக அகற்றியுள்ளனர்.

இதுகுறித்து அறுவை சிகிச்சை மேற்கொண்ட மருத்துவ நிபுணர் கோகுல் கிருபாசங்கர் பேசியபோது, ‘தனது உறவினர் இறந்த சோகத்தில் மனநலம் பாதிக்கப்பட்ட 13 வயது சிறுமி, கடந்த ஆறு மாதங்களாக தனது முடியை பிய்த்து சாப்பிட்டுள்ளார். முடி மட்டுமின்றி நெகிழிக் குப்பைகளையும் உட்கொண்டுள்ளார்.

இதை அவரின் பெற்றோர்களும் கவனிக்கவில்லை. அவருக்கு ஒவ்வாமை எற்பட்டு தொடர்ச்சியாக வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்பட்டுள்ளது. மருத்துவ பரிசோதனை செய்த பின்னர் உடனடியாக அறுவை சிகிச்சை மேற்கொண்டோம். அவரது இரைப்பையில் இருந்த அரை கிலோ முடி மற்றும் நெகிழி குப்பைகளை அகற்றினோம். இதுபோன்ற சம்பவங்கள் மருத்துவத்துறையில் மிக அரிதாக காணப்படும். எனது 10 வருட அனுபவத்தில் முதல்முறையாக இரைப்பையில் இருந்து அதிக அளவிலான குப்பைகளை அகற்றியுள்ளேன்’ என்றார்.

அறுவைசிகிச்சை முடிந்து மனநல ஆலோசனை பெற்று வரும் சிறுமி வசதியான குடும்பத்தைச் சேர்ந்தவர் என்றும், கோவையின் முக்கிய பள்ளியில் அவர் படித்து வருவதாகவும் மருத்துவர் வி.ஜி.மோகன் பிரசாத் தெரிவித்தார்.

‘குழந்தைகள் மன அழுத்தத்தில் இருந்தால் அவர்களை பெற்றோர்கள் மிகவும் அன்பாகவும் பாசத்தோடும் அனுகவேண்டும். வெறுப்பை தூண்டும் வகையில் அவர்களிடம் பேசக்கூடாது. மன அழுத்தத்தில் இருக்கும் குழைந்தகளிடம் பெற்றோர்கள் அதிக நேரம் செலவிட வேண்டும். அவர்களின் மன அழுத்தத்திற்கான காரணத்தை தெரிந்துகொண்டு, இனக்கமாக நடந்து கொண்டு குழந்தைகளை பாதுகாக்க வேண்டும்’ என்கிறார் இவர்.