மகாதீரின் எண்ணம் நிறைவேறுமா?

ஆங்கிலத்தில் கணிதம், அறிவியல் கற்பிப்பதை சரவாக் ஏற்கனவே அமல்படுத்துகின்றது என்று மாநில அமைச்சர் கூறுகிறார்.

ஏற்கனவே கணிதம் மற்றும் அறிவியலை ஆங்கிலத்தில் கற்பிக்கத் தொடங்கியுள்ள சரவாக், கல்வி அமைச்சின் எந்தவொரு நடவடிக்கையும் தங்கள் மாணவர்களை பாதிக்காது என்று சரவாக் மாநில அமைச்சர் கூறியுள்ளார்.

நடப்பு பள்ளி ஆண்டின் தொடக்கத்தில் இருந்து சரவாக்கில், இந்த கொள்கை, நடைமுறையில் உள்ளது என்று சரவாக் கல்வி, அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஆராய்ச்சி அமைச்சர் மைக்கேல் மன்யின் ஜாவோங் கூறினார்.

“ஆமாம், இந்த மாதத்தில் இருந்தே கணிதத்தையும் அறிவியலையும் கற்பிக்க நாங்கள் ஏற்கனவே ஆங்கிலத்தைப் பயன்படுத்துகிறோம். எனவே எங்களுக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை. டாக்டர் மகாதீர் நாட்டின் பிற பகுதிகளிலும் முன்பை போல பெற்றோரை ஒத்துக்கொள்ள வைக்க முடியுமா என்று எனக்கு சந்தேகமாக உள்ளது”, என்றார்.

கடந்த வெள்ளிக்கிழமை, பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் அறிவியல் மற்றும் கணிதம் பாடங்களை ஆங்கிலத்தில் கற்பிப்பதற்கான தனது யோசனையை முன்வைத்தார். இது 2003-ஆம் ஆண்டில் தனது முந்தைய பதவிக் காலத்தில் ஆங்கிலத்தில் அறிவியல் மற்றும் கணிதம் கற்பித்தல் (பிபிஎஸ்எம்ஐ)/ Teaching and Learning of Science and Mathematics in English programme (PPSMI) திட்டமாக அறிமுகப்படுத்தப்பட்டது.

மேலும் கருத்துத் தெரிவிக்கையில், மைக்கேல், தனது அமைச்சும் சரவாக் கல்வித் துறையும் முதல் ஆறு மாதங்களில் இந்த இரண்டு பாடங்களையும் ஆங்கிலத்தில் கற்பிப்பதற்கான திட்டத்தை உன்னிப்பாகக் கவனித்து வருவதாகக் கூறினார்.

தி போர்னியோ போஸ்ட்டின் கூற்றுப்படி, மாநிலத்தின் தொடக்கப் பள்ளிகளில் முதல் ஆண்டு மாணவர்களுக்கு கணிதம் மற்றும் அறிவியலை ஆங்கிலத்தில் கற்பிக்கும் திட்டத்தை செயல்படுத்த சரவாக் அரசு RM11 மில்லியனை செலவிட்டதாக மைக்கேல் கூறினார்.

இந்த செலவினம் 2,800க்கும் மேற்பட்ட ஆசிரியர்களுக்கு பயிற்சியளித்தல் மற்றும் புத்தகங்கள் மற்றும் பொருட்களை அச்சிடும் செலவை உள்ளடக்கியது என்றார்.

இந்த திட்டம் மாநிலத்தில் 1,026 தொடக்கப் பள்ளிகளை உள்ளடக்கியது. 220 தேசிய வகை தொடக்கப் பள்ளிகள் இந்த இரண்டு பாடங்களையும் ஆங்கிலத்தில் கற்பிக்க வேண்டாம் என்று முடிவெடுத்துள்ளன.