கேரளாவில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை உயர்வு

கேரளாவில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 3-ஆக அதிகரித்துள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை மந்திரி தெரிவித்துள்ளார்.

திருவனந்தபுரம்: சீனாவின் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் பரவத்தொடங்கிய கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 361 பேர் உயிரிழந்துள்ளனர்.

சீனாவில் மட்டும் 17,205 பேருக்கு இந்த வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என சீன அரசு அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது. இந்த வைரஸ் இந்தியா, அமெரிக்கா உள்ளிட்ட உலகின் பல்வேறு நாடுகளுக்கும் பரவியுள்ளது.

இதற்கிடையில், இந்தியாவில் கேரள மாநிலத்தில் முதன்முதலில் கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது கடந்த சில நாட்களுக்கு முன்னர் கண்டுபிடிக்கப்பட்டது. ஹூபேய் மாகாணத்தில் இருந்து திரிச்சூர் வந்த மாணவி ஒருவருக்கு முதலில் பரவிய இந்த வைரசுக்கு நேற்றுவரை 2 பேர் பாதிக்கப்பட்டிருந்தனர்.

இந்நிலையில், வுகான் நகரில் இருந்து சமீபத்தில் கேரளா திரும்பிய கன்ஜன்காட் மாவட்டம் கசர்காட் பகுதியை சேர்ந்த நபருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்த தகவலை உறுதி செய்துள்ள கேரள சுகாதாரத்துறை மந்திரி கே.கே.ஷைலஜா, வைரஸ் பாதிக்கப்பட்ட நபருக்கு தனி அறையில் வைத்து சிகிச்சை நடைபெற்று வருவதாகவும், தற்போது அவரது உடல் நிலை சீராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

இதனால், கேரளாவில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3 ஆக உயர்ந்து உள்ளது.