மலேசியா – பாக்கிஸ்தான் பரஸ்பர உறவு

இன்று தொடங்கி மலேசியாவிற்கு இரண்டு நாள் பணி நிமித்தம் வருகை புரிந்திருக்கிறார் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான். இது இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால சகோதர உறவை மேலும் மேம்படுத்த உதவுகிறது.

இது, ஆகஸ்ட் 2018-இல் பிரதமர் பதவி ஏற்றதிலிருந்து, கான் இங்கு மேற்கொண்ட இரண்டாவது பயணமாகும். வெளியுறவு அமைச்சர் மக்தூம் ஷா மஹ்மூட் குரேஷி மற்றும் பாதுகாப்பு அமைச்சர் ஜுபைதா ஜலால் உள்ளிட்ட இஸ்லாமாபாத்தில் இருந்து ஒரு உயர் மட்ட தூதரகக்குழுவை உள்ளடக்கியுள்ளது இப்பயணம்.

இன்று இரவு இங்கு வரவுள்ள இம்ரான் கான், செவ்வாய்க்கிழமை காலை புத்ராஜெயாவில் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமதுவை சந்திக்க உள்ளார்.

பிராந்திய அமைதி மற்றும் பாதுகாப்பு குறித்து கான் Institute of Advanced Islamic Studies (IAIS)-இல் உரை நிகழ்த்த திட்டமிடப்பட்டுள்ளது.

ஊழலை எதிர்த்துப் போராடுவது மற்றும் இஸ்லாமியஎதிர்ப்பு (Islamophobia), பாலஸ்தீனம் மற்றும் ரோஹிங்கியாக்களின் அவலநிலை போன்ற முஸ்லீம் உம்மத் தொடர்பான பிரச்சினைகளில் இருவருக்கும் ஒரே மாதிரியான கருத்துக்கள் இருப்பதால் இரு தலைவர்களும் நட்பைப் பாராட்டி பகிர்ந்து கொள்கிறார்கள்.

இவர்களின் சந்திப்பு பரஸ்பர நலன் சார்ந்த விஷயங்கள் மற்றும் மார்ச் 2019-ல் டாக்டர் மகாதீரின் உத்தியோகபூர்வ இஸ்லாமாபாத் பயணம் குறித்து விவாதிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மலேசியா-பாகிஸ்தான் உறவுகளை மேம்படுத்த இரு தலைவர்களும் ஒப்புக் கொண்டுள்ளனர். பாமாயில், விவசாய பொருட்கள், சில்லறை விற்பனை, ஹலால் பொருட்கள், வாகன பாகங்கள், ஆற்றல், அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் தொலைத்தொடர்பு முதலீடு ஆகியவற்றின் வர்த்தகத்தில் இருதரப்பின் ஒத்துழைப்பை இதன் வழி எதிர்ப்பார்க்கலாம்.

மலேசியா மற்றும் பாக்கிஸ்தான் நவம்பர் 2007-இல் Malaysia-Pakistan Closer Economic Partnership Agreement (MPCEPA) உடன்பாட்டை கையெழுத்திட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

மலேசியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான மொத்த வர்த்தகம் 2018 ஆம் ஆண்டில் RM5.91 பில்லியனாக இருந்தது, இது 2017 ஆம் ஆண்டில் RM5.76 பில்லியனுடன் ஒப்பிடும்போது 2.5 சதவீதம் அதிகரித்துள்ளது.

பாகிஸ்தான் நாட்டினர் பெரிய எண்ணிக்கையில் இங்கு வாழ்கின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. – பெர்னாமா