வுஹானில் இருந்து மலேசியர்களை வெளியேற்ற விமானம் சீனா புறப்பட்டது

141 மலேசியர்களையும் அவர்களது குடும்பத்தினரையும் நாட்டிற்கு அழைத்து வரும் நோக்கில் 12 பேர் கொண்ட விமானம் சீனாவின் வுஹானுக்கு புறப்பட்டது.

ஏர் ஏசியா ஏ.கே .8294 விமானம் இன்று மாலை 4.30 மணிக்கு KLIA2 இலிருந்து வுஹானின் தியான்ஹே சர்வதேச விமான நிலையத்திற்கு புறப்பட்டது.

கொரோனா வைரஸ் (2019-nCoV) பாதிப்பை எதிர்த்துப் போராடுவதற்கான அதன் முயற்சிகளுக்கு உதவுவதற்காக ஒன்பது மலேசிய கையுறை உற்பத்தியாளர்கள் சீன அரசுக்கு நன்கொடையாக வழங்கிய 18 மில்லியன் கையுறைகளில் முதல் பகுதி அந்த விமானத்தில் கொண்டுசெல்லப்படுகிறது.

நாடு திரும்பும் அந்த 141 மலேசியர்களும் சுகாதார பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள் என்று மீண்டும் வலியுறுத்தப்பட்டுள்ளது. அங்கிருந்து ஆரோக்கியமானவர்கள் மட்டுமே கோலாலம்பூருக்கு விமானத்தில் ஏற அனுமதிக்கப்படுவார்கள். வைரஸ் அறிகுறிகளை வெளிப்படுத்துபவர்கள் வுஹானில் சிகிச்சைக்காக வைக்கப்படுவார்கள்.

மலேசியா வந்ததும், அனைத்து பணியாளர்களும், பயணிகளும் KLIA-இல் உள்ள விமான பேரிடர் பிரிவில் (ADU) இரண்டாவது சுகாதார பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள்.

கொரோனா வைரஸ் நோய் அறிகுறிகள் காணப்பட்டால், அவர்கள் உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்படுவார்கள். பரிசோதனையில் அறிகுறிகள் எதுவும் இல்லாதவர்கள் கண்காணிப்பு நடவடிக்கைக்காக, கண்காணிப்பு மையத்திற்கு அனுப்பப்படுவார்கள், மேலும் 14 நாட்களுக்கு தனிமைப்படுத்தப்படுவார்கள். இந்த செயல்முறைகள் குறித்து தனிமைப்படுத்தப்பட்டவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கும் தெரிவிக்கப்படும்.