107 மலேசியர்களில் இருவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்

இன்று காலை சீனாவின் வுஹானில் இருந்து சிறப்பு விமானத்தில் மலேசியா வந்த 107 பேரில் இருவர் இங்கு சுகாதார பரிசோதனைகளில் தோல்வியடைந்து உடனடியாக கோலாலம்பூர் பொது மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.

கொரோனா வைரஸ் பாதிப்பின் மையப்பகுதியான வுஹானில் வசித்து வந்த அனைத்து 107 மலேசியர்களும் சீனாவில் மருத்துவ பரிசோதனையைக் கடந்துவிட்ட பின்பே மலேசிய விமானத்தில் ஏற்றப்பட்டானர் என்று துணைப் பிரதமர் டாக்டர் வான் அஜிசா வான் இஸ்மாயில் தெரிவித்தார்.

“நாடு திரும்புவதற்காக சீனாவில் உள்ள மலேசிய தூதரகத்தில் பதிவு செய்த நபர்களின் எண்ணிக்கை 141 என்று முன்பு அறிவிக்கப்பட்டிருந்தாலும், விமானத்தில் ஏறியவர்களின் எண்ணிக்கை 107 பேர் மட்டுமே” என்று வான் அஜிசா தேசிய பேரிடர் மேலாண்மை / National Disaster Management Agency (Nadma) நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

“விஸ்மா புத்ராவின் கூற்றுப்படி, விமானத்தில் ஏற திட்டமிடப்பட்ட பல மலேசியர்கள் இலம் சார்ந்த சிக்கல்கள் காரணமாக வுஹானை விட்டு வெளியேற முடியவில்லை.

“அவர்கள் விமானத்தில் ஏற முடியாமல் போனதற்கு முக்கிய காரணம், அவர்கள் வுஹானுக்கு வெளியே இருந்ததாலும், மேலும் நகரத்திற்கு அல்லது விமான நிலையத்திற்கு போக்குவரத்து வசதிகளைப் பெறுவதில் சிரமங்களை எதிர்கொண்டதனாலுமே ஆகும்,” என்று அவர் கூறினார்.

சுகாதார பரிசோதனையை கடந்த 105 மலேசியர்களை ஒரு நாளைக்கு இரண்டு முறை மேல் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள் என்றும், அவர்களை நிலாய், நெகேரி செம்பிலனில் உள்ள Akademi Kepimpinan Pendidikan Tinggi (AKEPT), Bandar Enstek எனும் இடத்தில் உள்ள ஒரு கண்காணிப்பு மையத்திற்கு அனுப்பப்பட்டு அங்கேயே வைக்கப்படுவார்கள் என்றும் வெளியேற தகுதியுடையதாக அறிவிக்கப்படும் வரை அவர்கள் அங்கே தனிமைப்படுத்தப்படுவார்கள் என்றும் வான் அஜிசா கூறினார்.

“மருத்துவ அதிகாரிகளைத் தவிர, குடும்ப உறுப்பினர்கள் உட்பட வெளி தரப்பினருடன் எந்த தகவல் தொடர்புகளும் அனுமதிக்கப்படாது. எனவே, இந்த கண்காணிப்பு செயல்முறையின் முக்கியத்தைப் புரிந்து கொள்ளுமாறும் அதற்கு முழு ஒத்துழைப்பை வழங்குமாறும் அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்களிடமிருந்து நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்,” என்று அவர் கூறினார்.

மேலும் இந்த இடம் முழுமையான காவல் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.