காஷ்மீர் பிரச்சனைக்கு குரல் கொடுத்த மகாதீருக்கு இம்ரான் கான் புகழாரம்

இந்தியாவின் ‘அநீதிக்கு’ எதிராக பேசியதற்காக இம்ரான் கான் டாக்டர் மாகாதீரை புகழ்ந்தார்.

காஷ்மீர் பிரச்சினை குறித்து பேசிய டாக்டர் மகாதீர் முகமதுவுக்கு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் நன்றியையும் பாராட்டுகளையும் தெரிவித்துள்ளார்.

இன்று புத்ராஜெயாவில் மலேசிய பிரதமருடன் ஒரு கூட்டு செய்தியாளர் கூட்டத்தில், இம்ரான் இதைத் தெரிவித்தார்.

“காஷ்மீர் மக்கள் இப்போது என்ன எதிர்நோக்குகிறார்கள் என்பதைப் பற்றி பேசிய பிரதமர் மகாதீருக்கு நான் நன்றி சொல்ல விரும்புகிறேன். மிகவும் தீவிரவாதத்தன்மை அரசாங்கம் இந்தியாவில் பொறுப்பேற்று, காஷ்மீர் மக்களை ஆறு மாதங்களாக திறந்த சிறையில் அடைத்துள்ளது. இது எல்லா சுதந்திரங்களையும் பரித்துள்ளது. தலைமைத்துவத்தை சிறையில் அடைத்துள்ளது. இளைஞர்களை சிறையில் அடைத்துள்ளது. அவர்கள் காணாமல் போயுள்ளனர்”.

“இதில், நீங்கள் எங்களுடன் நின்று, நடந்துகொண்டிருக்கும் அநீதியைப் பற்றி பேசிய விதம் குறித்து, பாகிஸ்தான் மக்கள் சார்பாக, நான் உங்களுக்கு நன்றி சொல்ல விரும்புகிறேன்,” என்று இம்ரான் கூறினார்.

கடந்த செப்டம்பரில் ஐ.நா பொதுச் சபையில் தனது உரையின் போது, ஜம்மு-காஷ்மீர் குறித்து மகாதீர் தனது கருத்துக்களால் இந்தியாவை சீண்டியுள்ளார்.

“ஜம்மு-காஷ்மீர் தொடர்பான ஐ.நா. தீர்மானம் இருந்தபோதிலும், அந்த நாடு படையெடுத்து ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கைக்கு காரணங்கள் இருந்தாலும், அது தவறான ஒன்று தான்”.

“இந்த பிரச்சினை அமைதியான வழிமுறைகளால் தீர்க்கப்பட வேண்டும். இந்த பிரச்சினையை தீர்க்க இந்தியா பாகிஸ்தானுடன் இணைந்து செயல்பட வேண்டும். ஐ.நா.வை புறக்கணிப்பது, ஐ.நாவையும் சட்டத்தின் ஆட்சியையும் புறக்கணிக்க வழிவகுக்கும்” என்று அவர் கூறினார்.

மகாதீர் பாகிஸ்தானுக்கோ அல்லது இந்தியாவுக்கோ ஆதரவாக இருக்கவில்லை என்றாலும், அவரது பேச்சு இந்தியாவை தாக்கும் நோக்கில் கருதப்பட்டது.

இதனால் மலேசிய பாமாயிலை புறக்கணிப்பதாக இந்தியாவின் அச்சுறுத்தல் ஏற்பட்டது. இருப்பினும், மலேசியாவுக்கு பாகிஸ்தான் தன்னால் முடிந்த உதவியைச் செய்யும் என்று இம்ரான் கூறியிருக்கிறார்.

கே.எல் உச்ச மாநாட்டில்/ KL Summit, கலந்து கொள்ளாததற்கு இம்ரான் வருத்தப்படுவதாகவும் கூறினார்.
கடந்த டிசம்பரில் நடந்த கே.எல் உச்ச மாநாட்டில் கலந்து கொள்ள முடியாததற்கு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் வருத்தம் தெரிவித்துள்ளார்.

அம்மாநாடு “முஸ்லிம்களை பிளவுபடுத்தும்” நோக்கம் கொண்டதாக தனது நட்பு நாடுகளின் அழுத்தத்தை எதிர்கொண்டதாக அவர் ஒப்புக்கொண்டார்.

அவர் பெயர்களைக் குறிப்பிடவில்லை என்றாலும், உச்சமாநாடு ஒரு தனி முஸ்லீம் கூட்டணியை உருவாக்கும் என்று சவுதி அரேபியா கவலை கொண்டது என்று பரவலாக பேசப்பட்டது. குறிப்பாக கூட்டத்தில் அதன் ‘எதிரி’ நாடுகளான ஈரான், கத்தார் மற்றும் துருக்கி ஆகியவை கலந்து கொண்டதால் மற்ற முஸ்லீம் நாடுகள் கலந்து கொள்ள வேண்டாம் என்று சவுதி அரேபியா வற்புறுத்தியது என்று கூறப்படுகிறது.

இருப்பினும், இதுபோன்ற அச்சங்கள் ஆதாரமற்றவை என்பது தெளிவாகத் தெரிந்தது என்றும் இம்ரான் கூறினார்.

“டிசம்பரில் கோலாலம்பூரில் நடந்த மாநாட்டில் கலந்து கொள்ள முடியவில்லை என்பது எனக்கு எவ்வளவு வருத்தமாக இருந்தது என்று சொல்ல விரும்புகிறேன். பாக்கிஸ்தானுடன் மிகவும் நெருக்கமாக இருக்கும் எங்கள் நண்பர்கள், மாநாடு, முஸ்லிம் உம்மாவைப் பிரிக்கப் போவதாக உணர்ந்தார்கள். அது ஒரு தவறான கருத்து. ஏனெனில் அதுவல்ல மாநாட்டின் நோக்கம் என்று தெளிவாக தெரிகிறது.

வர்த்தகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் ஊடகங்கள் தொடர்பான பல புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டதோடு, ரோஹிங்கியா அகதிகள் நெருக்கடி போன்ற முஸ்லிம்களைப் பாதிக்கும் பிரச்சினைகள் குறித்த கலந்துரையாடல்களும் நடந்த அம்மாநாடு தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டதாக மகாதீர் முன்னதாகக் கூறியுள்ளார்.

இன்று செய்தியாளர் கூட்டத்தில், அடுத்த ஆண்டு மீண்டும் மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டால், அவர் கலந்து கொள்வார் என்று இம்ரான் கூறினார்.

இரண்டு நாள் பணி நிமித்த பயணத்தில் இருக்கும் இம்ரான், மலேசியாவுடன் வலுவான உறவுகளை வளர்ப்பதற்கான பாகிஸ்தானின் உறுதிப்பாட்டை வலியுறுத்தினார்.

“வர்த்தகம், முதலீடு மற்றும் பாதுகாப்புத்துறையில் கூட்டு சேர்வது, மற்றும் நெருக்கமான உறவை வளர்ப்பதே எங்கள் எண்ணம். எங்கள் உறவை வலுப்படுத்துவதே இதன் நோக்கம். இனி, எங்கள் ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கு நாங்கள் மேலும் முயல்வோம்” என்று அவர் கூறினார்.

முன்னதாக, மலேசியா, பாகிஸ்தானுடன் ஒப்படைப்பு ஒப்பந்தத்தில் (extradition treaty) கையெழுத்திட்டதை மகாதீர் வெளிப்படுத்தினார்.