147 சீன பிரஜைகள் மலேசியாவுக்குள் நுழைய தடை

கொரோனா வைரஸ் பாதிப்புக்குள்ளான மாகாணத்தைச் சேர்ந்த 147 சீன பிரஜைகள் மலேசியாவுக்குள் நுழைய தடை

கொரோனா வைரஸ் தொடங்கிய ஹூபே மாகாணத்தைச் சேர்ந்த மொத்தம் 147 சீனர்கள் மலேசியாவிற்குள் நுழைய மறுக்கப்பட்டுள்ளனர்.

ஜொகூர் பாருவில் உள்ள சுங்க, குடிவரவு மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட (Customs, Immigration and Quarantine) வளாகத்திற்கு இன்று வருகை புரிந்த உள்துறை அமைச்சர் முகிதீன் யாசின், இது ஜனவரி 27 தொடங்கி, கடந்த எட்டு நாட்களின் விவரங்களின் அடிப்படையில் செய்யப்பட்டது என்றார்.

சீன நாட்டினருக்கு பின்வரும் நுழைவுகளில் அனுமதி மறுக்கப்பட்டது:

போர்ட் கிள்ளான் / Port Klang – 65
சுல்தான் அபுபக்கர் வளாகம் (ஜோகூர்) / Sultan Abu Bakar Complex (Johor) – 30
கோலாலம்பூர் சர்வதேச விமான நிலையம் / Kuala Lumpur International Airport 2 – 14
பினாங்கு சர்வதேச விமான நிலையம் / Penang International Airport – 9
சண்டகான் சர்வதேச விமான நிலையம் / Sandakan International Airport – 6
கோத்தா கினபாலு சர்வதேச விமான நிலையம் / Kota Kinabalu International Airport – 5
தவாவ் விமான நிலையம் / Tawau Airport – 5
தஞ்சங் பெலேபாஸ் துறைமுகம் / Tanjung Pelepas Port – 4
லங்காவி சர்வதேச விமான நிலையம் / Langkawi International Airport – 3
கோத்தா கினபாலு துறைமுகம் / Kota Kinabalu Port – 3
கோலாலம்பூர் சர்வதேச விமான நிலையம் / Kuala Lumpur International Airport – 1
புக்கிட் கயு ஹித்தாம் / Bukit Kayu Hitam – 1
சிபித்தாங் / Sipitang – 1

கொரோனா வைரஸ் பாதிப்பின் மையப்பகுதியான வுஹான், ஹூபேயின் தலைநகரம் ஆகும்.

சுகாதார அமைச்சின் ஆலோசனையின் அடிப்படையில் உள்துறை அமைச்சகத்தின் பயணக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக என்று முகிதீன் கூறினார்.

அனைத்து சீன குடிமக்களுக்கும் மலேசியாவிற்குள் நுழைய அரசாங்கம் ஏன் ஒட்டுமொத்த தடை விதிக்கவில்லை என்ற கேள்விக்கு, “உலக சுகாதார அமைப்பு உலகளாவிய அவசரநிலையை அறிவித்திருந்தாலும், சீனாவிலிருந்து வருபவர்களுக்கு இது ஒரு முழுமையான தடை என்று அறிவுறுத்தவில்லை. சுகாதார அமைச்சின் முடிவில் நாங்கள் செயல்படுகிறோம்,” என்று அவர் கூறினார்.

தற்போது, பயணத் தடை ஹூபியிலிருந்து வரும் சீன நாட்டினருக்கு மட்டுமே உள்ளது என்றார். நிலைமை மோசமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சு கருதினால் குடிவரவுத் துறை தனது தடையை விரிவுபடுத்தும் என்றும் அவர் கூறினார். இருப்பினும், தற்போது மலேசியாவின் நிலைமை மேம்பட்டு வருவதாக அவர் கூறினார்.

“தனிமைப்படுத்தப்பட்ட நபர்களின் எண்ணிக்கை குறைந்துவிட்டதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது,” என்று அவர் கூறினார்.

மலேசியா தனது முதல் நான்கு உறுதிப்படுத்தப்பட்ட பாதிப்புகளை ஜனவரி 25 அன்று பதிவுசெய்தது, மேலும் மூன்று பாதிப்புகள் ஜனவரி 29 அன்று பதிவாகியுள்ளது. ஜனவரி 30 ஆம் தேதி வரை உறுதிப்படுத்தப்பட்ட மொத்த பாதிப்புகள் எட்டு ஆகும்.