குடியுரிமை சட்ட போராட்டத்தில் போலீசாருடன் மாணவர்கள் மோதல் நாடாளுமன்றம் நோக்கி சென்ற ஊர்வலம் தடுத்து நிறுத்தம்

புதுடெல்லி, டெல்லியில் ‘ஜாமியா ஒற்றுமைக் குழு’ என்ற பெயரில் ஜாமியா மில்லியா இஸ்லாமிய பல்கலைக்கழக மாணவர்கள், முன்னாள் மாணவர்கள், ஜாமியா நகர மக்கள் ஆகியோர் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடாளுமன்றம் நோக்கி பேரணி புறப்படுவதாக அறிவித்தனர்.

இதற்காக ஜாமியா பல்கலைக்கழகம் அருகே பல பெண்கள் உள்பட நூற்றுக்கணக்கானவர்கள் திரண்டு ஊர்வலமாக செல்ல முயன்றனர். அப்போது பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டு இருந்த போலீசார், நாடாளுமன்றம் நோக்கி பேரணி செல்வதற்கு நீங்கள் அனுமதி வாங்கவில்லை என்று போராட்டக்காரர்களிடம் கூறினார்கள். ஆனால் அவர்கள் அனுமதி வாங்கியுள்ளதாக கூறினார்கள்.

எதிர்ப்பு கோஷம்

நூற்றுக்கணக்கான போலீசாருடன், கலவர தடுப்பு வாகனங்களும் சுற்றிலும் நிறுத்திவைக்கப்பட்டு இருந்தது. போராட்டக்காரர்கள் பல்கலைக்கழகத்தின் 7-ம் எண் வாசலில் இருந்து ஊர்வலத்தை தொடங்கினார்கள். மீண்டும் போலீசார் அவர்களிடம் ஊர்வலத்தை கைவிடும்படி கேட்டுக்கொண்டனர்.

அப்போது போராட்டக்காரர்கள், ‘நாங்கள் ஆவணங்களை காட்டமாட்டோம்’, ‘ஆங்கிலேயருக்கே அஞ்சாத நாங்கள் மற்றவர்களுக்கு ஏன் அஞ்ச வேண்டும்’ என்பது போன்ற கோஷங்களை எழுப்பினார்கள். ஆண்கள் கைகோர்த்தபடி மனித சங்கிலி போல நிற்க பெண்கள் முன்னேறி சென்றனர்.

போலீசாருடன் மோதல்

ஊர்வலத்தை போலீசார் தடுக்க முயன்றதால் அங்கு போராட்டக்காரர்களுக்கும், போலீசாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. பலர் தடுப்புகளை தாண்டி சென்றனர். இறுதியில் போலீசார் போராட்டக்காரர்களை ஜந்தர் மந்தர் வரை மட்டுமே ஊர்வலமாக செல்ல அனுமதித்தனர். அதுவரை போலீசாரும் பாதுகாப்புக்காக உடன் சென்றனர்.

ஜந்தர் மந்தரில் போராட்டக்காரர்கள் குடியுரிமை சட்டத்துக்கு எதிராகவும், இதனை மத்திய அரசு ரத்து செய்ய வலியுறுத்தியும் கோஷம் எழுப்பினார்கள்.