பொருளாதாரம் ஆபத்தான நிலையில் உள்ளது: சிதம்பரம் குற்றச்சாட்டு

புதுடில்லி: ”நாட்டின் பொருளாதாரம் ஆபத்தான நிலையில் உள்ளது. ஆனால், அதற்கு சிகிச்சையளிக்க வேண்டிய டாக்டர்கள் திறமையற்றவர்களாக உள்ளனர்,” என, முன்னாள் மத்திய நிதி அமைச்சர் சிதம்பரம் கூறினார்.

ராஜ்யசபாவில் நேற்று பட்ஜெட் மீதான விவாதத்தை துவக்கி வைத்து, முன்னாள் மத்திய நிதி அமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான சிதம்பரம் பேசியதாவது:நம் பொருளாதாரம், வேலை வாய்ப்பின்மை, நுகர்வு வீழ்ச்சி என, இரண்டு மிகப் பெரிய பிரச்னைகளில் சிக்கி தவிக்கிறது. இதை சரி செய்ய வேண்டிய அரசோ, ‘அப்படியெல்லாம் எதுவும் நடக்கவில்லை’ என, மறுப்பதையே வாடிக்கையாக வைத்துள்ளது. மக்களின் கைகளில் அதிகமாக பணம் புழங்க வேண்டிய நேரமிது.

அதை விடுத்து, வரி பயங்கரவாதத்தை கட்டவிழ்த்து விடும் வகையில், வரித்துறை அதிகாரிகளிடம் அளவுக்கு அதிகமான அதிகாரத்தை கொடுப்பது, சரியான நடவடிக்கை அல்ல. நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு ஒரு விஷயத்தை நினைவுபடுத்த விரும்புகிறேன். கடந்த, 2013 நவம்பரில், நரேந்திர மோடி, பா.ஜ.,வின் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டபோது, ஒரு விஷயத்தை கூறினார்.

‘பொருளாதார நிலை சிக்கலில் உள்ளது. இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகளை அளிக்க வேண்டும். எனவே, அரசியல் கட்சி தலைவர்கள், மலிவான அரசியலில் ஈடுபடுவதை தவிர்த்து, பொருளாதார நிலைமை சீரடைவதற்காக உழைக்க வேண்டும்’ என, மோடி பேசினார்.

அவரது பேச்சை, நிதி அமைச்சருக்கு தற்போது நினைவுபடுத்த விரும்புகிறேன். அமைப்பு ரீதியிலான பிரச்னையில் பொருளாதாரம் சிக்கியுள்ளது; அதை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மோடி அரசில் பொருளாதார ஆலோசகராக பதவி வகித்த அரவிந்த் சுப்ரமணியம், ‘பொருளாதாரம் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளது’ என்றார். என்னுடைய கருத்து என்னவென்றால், நோயாளி, தீவிர சிகிச்சை பிரிவுக்கு வெளியில் படுக்க வைக்கப்பட்டுள்ளார். திறமையற்ற டாக்டர்கள், நோயாளிக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர்.

பொருளாதாரம் ஆபத்தான நிலையில் இருக்கும்போது, திறமையற்றவர்களை வைத்து, அதை சரி செய்ய நினைப்பது, மிகவும் ஆபத்தானது. திறமையான டாக்டர்களான, ரிசர்வ் வங்கி முன்னாள் கவர்னர்கள் ரகுராம் ராஜன், உர்ஜித் படேல், முன்னாள் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியம், நிடி ஆயோக் அமைப்பின் முன்னாள் துணைத் தலைவர் அரவிந்த் பனகரியா போன்றோர், வேலையை விட்டுச் சென்று விட்டனர். பண மதிப்பிழப்பு நடவடிக்கையை அமல்படுத்தியது, ஜி.எஸ்.டி., வரி விகிதங்களை கட்டமைத்தது ஆகியவை தான், பொருளாதார சீர்குலைவுக்கு முக்கிய காரணமாக இருந்தன.

கடந்த ஆறு காலாண்டுகளாக பொருளாதாரம் வீழ்ச்சியை நோக்கி செல்கிறது. பிரச்னை என்ன என்பதை எதிர்க்கட்சிகள் கூறும்போது, அரசு தரப்பு, அதை திறந்த மனதுடன் ஏற்று, விவாதிக்க முன் வர வேண்டும்.நாடு முழுவதும் உள்ள மக்களிடையே தற்போது ஒருவிதமான பயம் நிலவுகிறது. நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், தன் நீண்ட உரையில், பொருளாதாரத்தின் நிலை பற்றியும், அதன் மேலாண்மை பற்றியும் எதுவுமே கூறவில்லை. இவ்வாறு, அவர் பேசினார்.