கப்பல் பயணியரை மிரட்டுது, ‘கொரோனா’: இந்தியர்களை மீட்க தூதரகம் உதவிக்கரம்

ஜப்பான் அருகே, நடுக்கடலில் தத்தளிக்கும் கப்பலில், ‘கொரோனா’ பாதித்தோர் எண்ணிக்கை, 150ஐ கடந்தது. இந்தியர்களை மீட்க, ஜப்பானில் உள்ள, நம் நாட்டு துாதரகம் உதவிக்கரம் நீட்டியுள்ளது.

சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ள ஹாங்காங்கில் இருந்து, 3,700 பயணியருடன், ஜப்பான் சென்ற கப்பல், கொரோனா பீதியால், யோக்கோஹாமா துறைமுகம் அருகே, நடுக்கடலில் நிறுத்தப்பட்டது. இந்நடவடிக்கையால், ஏழு நாட்களாக, கப்பல் பயணியர் தவிக்கின்றனர். இதில், ஐந்து தமிழர்கள் உட்பட, 200 இந்தியர்களும் உள்ளனர்.கப்பலில் இருந்த, 64 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டதாக தகவல் வெளியான நிலையில், நேற்று முன்தினம் பாதித்தோர் எண்ணிக்கை, 125 ஆக உயர்ந்தது. கப்பலுக்கு வெளியே, தனிமைப்படுத்தி, அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

அக்கப்பலில் பணிபுரியும், மதுரை மாவட்டம், நாகமலைப்புதுக்கோட்டையைச் சேர்ந்த அன்பழகன், பல்வேறு தகவல்களை, ‘வாட்ஸ்ஆப் வீடியோ’ மூலம் வெளியிட்டார். இது, அரசின் கவனத்திற்கும் சென்றது. தற்போது அவர், கப்பல் நிர்வாகம் நன்றாக கவனிப்பதாக தெரிவித்துள்ளார்.

நேற்று அவர், நம் நிருபரிடம், மொபைல்போனில் கூறியதாவது: தற்போது முன்னெச்சரிக்கைக்காக மாஸ்க், கைகளை சுத்தமாக வைத்துக்கொள்ளும் மருந்துகள், காய்ச்சல் பாதிப்பை, சுயமாக உறுதி செய்ய, ‘தெர்மாமீட்டர்’ போன்றவற்றை தந்துள்ளனர். அடிக்கடி தண்ணீர் குடிக்க, அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.தற்போது, மேலும், 32 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக, கேப்டன் அறிவித்தார். அவர்கள், சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டனர். இதுவரை, 150க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஜப்பான், டோக்கியோ நகரில் உள்ள, இந்திய துாதரக அதிகாரிகள், மொபைல்போனில், என்னை தொடர்பு கொண்டு, நிலவரம் குறித்து கேட்டறிந்தனர்.இந்தியாவிற்கு அழைத்து வர, ஏற்பாடு செய்வதாக உத்தரவாதம் அளித்தனர். உதவிக்கு அழைக்க, மொபைல்போன் எண்களும் வழங்கினர். ஒரு வாரத்தில் வீடு திரும்புவோம் என, நம்புகிறேன்.இவ்வாறு, அவர் கூறினார்.

– dinamalar