சீனாவுடன் ஒற்றுமையை வெளிப்படுத்துகிறார் டாக்டர் மகாதீர்

கொரோனா வைரஸ் | பெய்ஜிங் கோவிட் -19 தொற்றுநோயை எதிர்கொள்ள, பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் சீனாவின் அதிபர் ஜி ஜின்பிங்குடன் தனது ஒற்றுமையைத் வெளிப்படுத்தியுள்ளார்.

இரு உலகத் தலைவர்களும் நேற்று அரை மணி நேரத்திற்கும் மேலாக தொலைபேசியில் பேசியதாக வெளியுறவு அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“இரு தலைவர்களும் பரஸ்பர புரிந்துணர்வுடனும், தொற்றுநோயைக் கட்டுப்படுத்துவதற்கும் சமாளிப்பதற்கும் நெருக்கமான ஒத்துழைப்பைப் பற்றியும் பேசினர், நோயின் தாக்கத்தைக் குறைக்கவும் பேசினர்.

பிரதமர் மகாதீர் சீனாவுக்கு மலேசியாவின் ஒற்றுமையையும் உறுதியான ஆதரவையும் தெரிவித்தார். இது தொடர்பாக ஜனாதிபதி ஜி மற்றும் அவரது அரசாங்கம் மேற்கொள்ளும் ஒவ்வொரு முயற்சிக்கும் தன் நம்பிக்கையைத் தெரிவித்தார் மகாதீர்.

நோய் பாதிப்பிற்கு மத்தியில் சீனா தங்கள் சொந்த குடிமக்களை கவனித்துக்கொள்வது போலவே அந்நாட்டில் மலேசியர்களையும் கவனித்துக்கொள்வதாக அமைச்சு தெரிவித்துள்ளது.

“சீன அதிபர் மலேசியாவின் நட்பையும் உதவியையும் பாராட்டினார். மேலும் கோவிட் -19 பாதிப்பை எதிர்த்துப் போராடுவதற்கான வலிமை சீனாவிற்கு உண்டு என்றும், மலேசியர்களையும் தற்போது சீனாவில் இருக்கும் பிற மக்களையும் தங்கள் சொந்த குடிமக்களைப் போலவே கவனித்துக்கொள்வார் என்றும் உறுதியளித்தார்” என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

சமீபத்திய புள்ளிவிவரங்களின்படி உலகளவில் 1,486 கோவிட்-19 இறப்புகளைக் காட்டியுள்ளன, இவற்றில் 1,483 (99.8%) சீனாவில் நிகழ்ந்துள்ளன.

பதிவான 65,209 பாதிப்புகளில் 64,627 (99.1%) சீனாவில் உள்ளன. மொத்த எண்ணிக்கையில், 5,954 பேர் நோயிலிருந்து மீண்டுள்ளனர்.

மலேசியாவில் 19 கோவிட்-19 பாதிப்புகள் உள்ளன – அதில் ஆறு மலேசிய குடிமக்கள் மற்றும் 13 சீனா பிரஜைகள் ஆகும். இங்கு இறப்புகள் ஏதும் இல்லை. 13 சீன நாட்டினரில் மூன்று பேர் இந்த நோயிலிருந்து மீண்டுள்ளனர்.