திருப்பூர் விபத்து: உறவினர்களின் கண்ணீரால் நனைந்த மருத்துவமனை – முழு தகவல்கள்

திருப்பூர் விபத்து: உறவினர்களின் கண்ணீரால் நனைந்த மருத்துவமனை – முழு தகவல்கள்

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அவிநாசி அருகே பிப்ரவரி 20 அதிகாலை ஏற்பட்ட சாலை விபத்தில் கேரளாவைச் சேர்ந்த 19 பேர் உயிரிழந்தனர்.

இறந்தவர்களின் உடல்கள் திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டு பிரேத பரிசோதனைக்கு பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

விபத்துக்குள்ளான கேரள மாநில அரசுப் பேருந்து, ஓட்டுநர் உட்பட 50 பயணிகளோடு பெங்களூரில் இருந்து நேற்று இரவு 8 மணிக்கு கிளம்பியுள்ளது. இந்த பேருந்து கோவை வழியாக கேரளாவிற்கு செல்லவிருந்தது. விபத்து ஏற்படுத்திய கண்டெய்னர் லாரி சுமார் 30 டன் எடை கொண்ட டைல்ஸ் கற்களோடு கேரளாவிலிருந்து கோவை வழியாக சேலம் நோக்கி சென்று கொண்டிருந்தது.

இன்று அதிகாலை 3 மணியளவில் பெரும் சத்தத்தோடு இந்த விபத்து நிகழ்ந்ததாக கூறுகின்றனர், விபத்து நடந்த பகுதிக்கு அருகே உள்ள வாகனங்கள் பழுது நீக்கும் மையத்தின் ஊழியர்கள்.

பெயர் குறிப்பிட விரும்பாத அந்த ஊழியர்கள் கூறுகையில், ”நாங்கள் வேலை முடிந்து தூங்கிக்கொண்டிருந்தோம். அதிகாலை சுமார் 3 மணியளவில் சாலையில் பெரும் சத்தம் கேட்டது. வெளியில் ஓடிவந்து பார்த்தோம், கண்டெய்னர் லாரி ஒன்று பேருந்தின் மீது மோதி, பேருந்தின் ஒருபுறம் முற்றிலுமாக சிதைந்து கிடைந்தது. அருகில் சென்று பார்த்தபோது, பேருந்தின் வலது புறம் அமர்ந்திருந்த ஓட்டுநர் உட்பட அனைவரும் ரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடந்தனர்.

தகவல் அறிந்து உடனடியாக வந்த காவல் துறையினரும், தீயணைப்புத் துறையினரும் மீட்புப் பணிகளை மேற்கொண்டனர். இருந்தும் பலர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துவிட்டனர். சிலரின் உடல்கள் சிதிலமடைந்து விட்டன, அவற்றை மூட்டையாக கட்டித்தான் எடுத்துச் சென்றனர். இதற்கு முன்னர், ஓட்டுநர்களின் கவனக்குறைவால் ஒன்றிரண்டு சிறிய விபத்துக்கள் இங்கு ஏற்பட்டுள்ளது. ஆனால், இதுபோன்ற விபத்து இங்கே இதுவரை நடந்ததில்லை” என்று தெரிவித்தனர்.

விபத்து ஏற்பட்ட ஆறு வழிச்சாலையில் அதிவேகமாக வந்து திரும்ப முயன்ற கண்டெய்னர் லாரி கட்டுப்பாட்டை இழந்து சாலையின் மையத் தடுப்பின் மீது ஏறியுள்ளது. இதனால், லாரியில் வைக்கப்பட்டிருந்த கண்டெய்னர் நிலைதடுமாறி வீசி எறியப்பட்டு, எதிரே வந்து கொண்டிருந்த பேருந்தின் மீது மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.

இந்த விபத்தில் லாரியின் ஓட்டுநர் காயங்களின்றி தப்பியோடிவிட்டார். ஆனால், பேருந்தின் ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்துவிட்டார்.

விபத்தில் மீட்கப்பட்டவர்கள் அனைவரும் அவினாசி, திருப்பூர் மற்றும் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனைகள் மற்றும் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

உயிரிழந்த 19 பேரின் உடல்களும் உடற்கூறாய்வுக்காக திருப்பூர் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்தது. இதனால், மருத்துவமனையின் பிணவறை முழுவதும் சிதைந்த உடல்களால் நிரம்பிக்கிடப்பதாக தெரிவித்தார் பிணவறையில் பணிபுரியும் ஊழியர் ஒருவர்.

‘கொண்டுவரப்பட்டுள்ள பல உடல்கள் அடையாளம் தெரியாமல் இருக்கின்றன. பிணவறை முழுவதும் கேரள மக்களின் ரத்தமாக இருக்கிறது’ என அவர் கண்கலங்கியபடி சென்றார்.

உயிரிழந்தவர்களில் 8 பேர் குறித்த விவரங்கள் பிற்பகல் வரை தெரியாமல் இருந்தது. பின்னர், உறவினர்களின் உதவியோடு உடல்கள் அடையாளம் காணப்பட்டன.

உறவினர்களிடம் ஆறுதல் சொல்ல திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு கேரள மாநிலத்தைச் சேர்ந்த அமைச்சர்களும், நாடாளுமன்ற உறுப்பினர்களும், சட்டமன்ற உறுப்பினர்களும் வந்து முகாமிட்டிருந்தனர்.

மேலும், சிகிச்சை மேற்கொண்டிருந்த சில பயணிகள் உறவினர்களோடு சொந்த ஊருக்கு கிளம்பிச்சென்றுவிட்டனர். திருப்பூர் அரசு மருத்துவமனையில் காலை 10 மணிக்கு துவங்கிய உடற்கூறாய்வு, மாலை 6 மணி வரை நடைபெற்றது. இறந்தவர்களின் உடல்கள் கேரள காவல்துறையினர் பாதுகாப்போடு சொந்த ஊர்களுக்கு எடுத்துச்செல்லப்பட்டது. இறப்பு சான்றிதழ்களை உடனடியாக வழங்க திருப்பூர் மாவட்ட நிர்வாகம் சிறப்பு ஏற்பாடுகள் செய்திருந்தது.

விபத்துக்கு காரணமாக கருதப்பட்ட கண்டெய்னர் லாரியின் ஓட்டுநர் ஹேமராஜ், ஈரோடு அருகே காவல்துறையினரால் இன்று பிற்பகல் கைது செய்யப்பட்டார். 38 வயதான இவர் கேரள மாநிலத்தின் ஒட்டப்பாலம் பகுதியைச் சேர்ந்தவர்.

காவல்துறையினரின் விசாரணையில், லாரியின் டயர் வெடித்ததால்தான் இந்த விபத்து ஏற்பட்டதாக இவர் தெரிவித்துள்ளார்.
விபத்துக்கான காரணங்கள் குறித்து தேசிய நெடுஞ்சாலைத்துறை மற்றும் போக்குவரத்துத் துறையினரிடம் விரிவான விசாரணை மேற்கொள்ளப்படும் என திருப்பூர் மாவட்ட ஆட்சியர் விஜயகார்த்திகேயன் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.