பின்கதவு அரசாங்கத்தை அமைப்பதற்கான நேர்மையற்ற அரசியல் – Patriot

பின்கதவு அரசாங்கத்தை Patriot ஆதரிக்காது!

ஒரு பின்கதவு அரசாங்கத்தை அமைப்பதற்கான நேர்மையற்ற அரசியல் முயற்சியால் வெறுப்படைந்துள்ளது என்று Persatuan Patriot Kebangsaan (Patriot) கூறியுள்ளது.

அதன் தலைவர் முகமட் அர்ஷாட் ராஜி, இன்று ஒரு அறிக்கையில், இது, மக்கள் ஆணைக்கு இழைத்தத் துரோகம் என்று கூறினார்.

“பெர்சத்து மற்றும் பி.கே.ஆர். கட்சியின் ஒரு பிரிவு, அம்னோ மற்றும் பாஸ் கட்சிகளுடன் இணைந்து ஒரு புதிய அரசாங்கத்தை உருவாக்க முயற்சிக்கின்றனர்”.

“இது அதிர்ச்சியளிக்கிறது. குறிப்பாக பாக்காத்தான் ஹராப்பான் கவுன்சில் கூட்டம் முடிந்து இரண்டே நாட்களுக்குப் பிறகு இது நடந்துள்ளது. அக்கூட்டத்தில் பிரதம மந்திரி பதவி விலகும் பிரச்சினைக்கு தீர்வு கண்டதாக அறிவிக்கப்பட்டது. அம்னோ மற்றும் பாஸ் ஆகியவற்றை உள்ளடக்கிய எந்தவொரு அரசாங்கத்தையும் Patriot ஆதரிக்காது”.

“ஹராப்பான் அரசாங்கம் சரிந்துவிட்டது என்பது உண்மை என்றால், பாராளுமன்றத்தை கலைப்பது தான் சரியான முடிவாக இருக்கும். கூட்டணி கட்சிகள் மக்களிடமிருந்து ஒரு புதிய ஆணையை நாட வேண்டும். அதுவே ஒரு முதிர்ச்சியான ஜனநாயகத்திற்கு சான்று”, என்று அர்ஷாட் கூறினார்.

அஸ்மின் அலியின் பி.கே.ஆர் பிரிவு, பாரிசான், பாஸ், பெர்சத்து, ஜி.பி.எஸ் மற்றும் வாரிசன் ஆகியவௌ நேற்று பேரரசர் யாங் டி-பெர்துவான் அகோங்கை சந்தித்ததைத் தொடர்ந்து ஹராப்பானுக்கு பதிலாக புதிய அரசாங்கத்தை அமைப்பது நிச்சயம் என்று தோன்றுகிறது.

MIC தலைவர் எஸ்.ஏ. விக்னேஸ்வரன் ஊடகங்களுக்கு பேட்டியளித்தபோது, பெர்சத்து கட்சி, ஹராப்பானை விட்டு வெளியேறும் என்றும், அஸ்மின் பி.கே.ஆரை விட்டு விலகினார் என்றும் கூறினார். இதை அஸ்மின் உறுதிப்படுத்தவில்லை.

இன்று காலை வரை இந்த விவகாரம் தொடர்பாக மகாதீர் அல்லது வேறு எந்த தரப்பினரிடமிருந்தும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியிடப்படவில்லை.

மகாதீர் பெர்சத்து கூட்டத்தில் மட்டுமே கலந்து கொண்டார். ஆனால் இஸ்தானா நெகாரா மற்றும் ஷெராட்டனில் கலந்து கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது. அங்கு மற்ற கட்சிகளின் தலைவர்கள் கூடியிருந்தனர்.