ஆஸ்திரேலிய ரக்பி அணிக்கு தலைமை தாங்கிய சிறுவன் குவாடன்

ஒற்றை வீடியோவால் உலகையே உலுக்கிய சிறுவன் குவாடன் ஆஸ்திரேலிய ரக்பி அணியின் சார்பில் சிறப்பு விருந்தினராக வரவேற்கப்பட்டு கவுரவப்படுத்தப்பட்டான்.

கான்பெர்ரா : ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகரை சேர்ந்த பெண் யர்ராகா பேல்ஸ். இவரது 9 வயது மகன் குவாடன் பெய்லெஸ், மரபணு நோயால் பாதிக்கப்பட்டு உடல் வளர்ச்சி குன்றி காணப்படுகிறான்.

அவலமான தோற்றம் காரணமாக குவாடனை, பள்ளியில் சக மாணவர்கள் தொடர்ந்து கேலி, கிண்டல் செய்து வருகின்றனர். இதனால் அவன் மிகவும் மனமுடைந்து போனான்.

இது குறித்து தனது தாயிடம் கூறி கதறி அழுத குவாடன், தனக்கு வாழ்வதற்கே பிடிக்கவில்லை என்றும் தற்கொலை செய்து கொள்ள தூக்குகயிறு அல்லது கத்தி போன்ற ஏதாவது ஆயுதம் தரும்படி கேட்டு மன்றாடினான்.

மகனின் கதறலையும், கண்ணீரையும் பார்த்து உடைந்துபோன யர்ராகா, மற்றவர்களை கேலி-கிண்டல் செய்வதால் ஏற்படும் விளைவுகள் குறித்து உலகிற்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில், தன் மகன் குவாடன் தற்கொலை செய்வதாக கூறி கதறி அழுத காட்சிகளை செல்போனில் வீடியோ எடுத்து பேஸ்புக்கில் பதிவிட்டார்.

உலகையே உலுக்கிய அந்த வீடியோ பல கோடிக்கணக்கான மக்கள் தங்கள் வலைதளப்பக்கங்களில் பகிர்ந்து சிறுவனுக்கு ஆதரவாக செய்திகளை வெளியிட்டும் வருகின்றனர்.

இந்நிலையில், ஆஸ்திரேலியாவின் தேசிய ரக்பி அணி சிறுவன் குவாடனை லீக் போட்டியில் தலைமை தாங்க அழைப்பு விடுத்தது.

இதையடுத்து குவிண்ஸ்லாந்தில் நேற்று நியூசிலாந்து எதிராக நடைபெற்ற ரக்பி போட்டியில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட குவாடன் ஆஸ்திரேலியாவின் இண்டிஜினியஸ் ஆல் ஸ்டார் ஆண்கள் ரக்பி அணியின் கேப்டன் ஜோயல் தாம்சனுடன் கைகோர்த்து மைதானத்திற்குள் நுழைந்தான். அப்போது மைதானத்தில் கூடியிருந்த பார்வையாளர்கள் சிறுவன் குவாடனை உற்சாகமாக வரவேற்றனர். இதனால் குவாடன் மகிழ்ச்சியில் தத்தளித்தான்.

maalaimalar