அம்னோ, பாஸ், டாக்டர் மகாதீருக்கு அளித்த ஆதரவிலிருந்து பின்வாங்குகின்றன

அம்னோ, பாஸ், டாக்டர் மகாதீருக்கு அளித்த ஆதரவிலிருந்து பின்வாங்குகின்றன

மாலை 6.45 மணி: அம்னோ மற்றும் பாஸ் டாக்டர் மகாதீர் முகமதுவுக்கு தங்கள் ஆதரவைத் திரும்பப் பெறுகின்றன.

மகாதீரின் திட்டமும் அவர்கள் டிஏபி-யுடன் ஒத்துழைக்க மாட்டார்கள் என்ற நிபந்தனைக்கு ஆதரவாக இருப்பதாக அம்னோ பொதுச்செயலாளர் அன்னுவார் மூசா கூறுகிறார்.

“நாங்கள் மகாதீருக்கு அளித்த ஆதரவு டிஏபி இல்லாமல் ஒரு கூட்டணியை அமைப்பதாகும். இப்போது அதை திரும்பப் பெற வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்” என்று அவர் செய்தியாளர் கூட்டத்தில் கூறுகிறார்.

இத்தகைய சூழ்நிலைகளில், பாரிசான் மற்றும் பாஸ் எம்.பி.க்கள் மாமன்னரிடம் பாராளுமன்றம் கலைக்கப்பட வேண்டும் என்றும் புதிய தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்றும் விரும்புவதாக தெரிவித்தனர், என்றார்.


பாராளுமன்றத்தை கலைக்க வேண்டுமா? பிரதமர் வேட்பாளர் யார்?

மாலை 6.10 மணி: இஸ்தானா நெகாரா – அம்னோவின் கோலா க்ராவ் பாராளுமன்ற உறுப்பினர் இஸ்மாயில் முகமது சைட், நேர்காணலில் மாமன்னர் எம்.பி.க்களிடம் இரண்டு கேள்விகளை கேட்டார் என்ற செய்தியை வெளிப்படுத்தினார்.

மாமன்னரால் நேர்காணல் செய்யப்பட்ட எம்.பி.க்கள், தங்கள் பிரதமர் வேட்பாளராக யாரை தேர்ந்தெடுக்கிறீர்கள் என்று கேட்கப்பட்டுள்ளனர்.

புதிய அரசாங்கம் அமைக்கப்பட வேண்டுமா அல்லது பாராளுமன்றம் கலைக்கப்பட வேண்டுமா என்றும் மாமன்னர் கேட்டார் என்று அவர் கூறினார்.

இருப்பினும், ரகசியத்தன்மையை மேற்கோள் காட்டி அவர் தனது தேர்வை வெளிப்படுத்தவில்லை.

மக்களின் விருப்பத்தின் அடிப்படையில் நாங்கள் செயல்படுகிறோம் – அஸ்மினின் குழு கூறுகிறது

டாக்டர் மகாதீர் முகமட் பதவிக்காலம் முடியும் வரை பிரதமராக பணியாற்ற தனது குழுவின் ஆதரவை அஸ்மின் அலி மீண்டும் வலியுறுத்துகிறார்.

முன்னதாக புத்ராஜெயாவில் மகாதீரை சந்தித்த பின்னர் இன்று மாலை ட்விட்டரில், ஒரு நிலையான அரசாங்கத்தை உருவாக்கும் மக்களின் ஆசைகள், அதிக ஒற்றுமை, மற்றும் பொருளாதார வளர்ச்சி, ஆகியவற்றின் அடிப்படையில் தான் தனது குழுவின் நடவடிக்கைகள் அமைந்திருப்பதாகக் கூறுகிறார்.

“இது தான் 14வது பொதுத் தேர்தலில் மக்கள் வழங்கிய உண்மையான ஆணை என்று நாங்கள் நம்புகிறோம். எங்கள் குழுவில் பல்வேறு இனங்கள், மதங்கள் மற்றும் புவியியல் இடங்களையும் கொண்டுள்ளோம். அவை இனம், மதம் மற்றும் கலாச்சார இடையிலான புரிதலுக்கு முன்னுரிமை அளிக்கின்றன,” என்று அவர் கூறினார்.

அவரும், 10 முன்னாள் பி.கே.ஆர். எம்.பி.க்களும் இப்போது மாமன்னர் சுல்தான் அப்துல்லா சுல்தான் அஹ்மத் ஷாவுடன் நேர்காணளுக்கு காத்திருக்கிறார்கள் என்று கூறுகிறார்.

“நாங்கள் எடுத்துள்ள நடவடிக்கை ஊக்கமளிக்கும் முன்னேற்றங்களைக் காட்டுகிறது. பிரச்சினைகளை நாங்கள் ஒவ்வொன்றாக கையாளுகிறோம்,” என்று அவர் மேலும் கூறுகிறார்.

காலித், சலாவுதீன், ஹுசாம், குலா ஆகியோர் பி.கே.ஆர். தலைமையகத்திற்கு வருகிறார்கள்

மாலை 5.10 மணி: பி.கே.ஆர் தலைமையகம் – அமானா தலைவர்கள் காலித் சமத், சலாவுதீன் அயூப் மற்றும் ஹுசம் மூசா, மற்றும் டிஏபி தலைவர் எம். குலசேகரன் ஆகியோர் பி.கே.ஆர். தலைமையகத்திற்கு வருகிறார்கள்.

பக்காத்தான் கூட்டம் இன்று பிற்பகுதியில் இங்கு நடைபெறும் என்று அறியப்படுகிறது.

மகாதீர் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களைச் சந்தித்தார்

மாலை 5 மணி: பிரதமர் துறை, புத்ராஜெயா – டாக்டர் மகாதீர் முகமது இன்று பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களை சந்தித்ததாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

அவர்களில் ஜி.பி.எஸ் தலைவர் அபாங் ஜோஹரி ஓபன், பெர்சத்து தலைவர் முகிடின் யாசின், பி.கே.ஆர். தலைவர் அன்வார் இப்ராஹிம், டிஏபி பொதுச்செயலாளர் லிம் குவான் எங், அம்னோ தலைவர் அகமட் ஜாஹித் ஹமிடி, பாஸ் தலைவர் அப்துல் ஹாடி அவாங், அமனா தலைவர் மொஹமட் சாபு மற்றும் கோம்பக் எம்.பி. அஸ்மின் அலி ஆகியோர் அடங்குவர்.

மகாதீர் நாளை வாரிசன் தலைவர் ஷாஃபி அப்தாலை சந்திப்பார் என்று தெரிகிறது.

C4 அம்னோவை அரசாங்கத்தில் சேர்ப்பதை எதிர்க்கிறது

மாலை 5 மணி: The Centre to Combat Corruption and Cronyism (C4) கண்காணிப்புக் குழு, ஒரு பின்கதவு அரசாங்கத்தை அமைப்பதற்கான எந்தவொரு முயற்சியையும் எதிர்க்கிறது, நிராகரிக்கிறது என்றது.

“அத்தகைய (ஒரு அரசாங்கத்தை) உருவாக்குவதில் எந்த சட்டங்களும் மீறப்படவில்லை என்றாலும், முந்தைய ஊழல் ஆட்சியை நிராகரித்ததன் அடிப்படையில் தான் மக்கள் பக்காத்தான் ஹராப்பான் அரசாங்கத்திற்கு வாக்களித்தனர் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்”.

“எனவே, முந்தைய ஆட்சியினர் மற்றும் தற்போதைய எதிர்க்கட்சியினர், ஊழல் நிறைந்த வஞ்சகர்களைக் கொண்ட ஒரு அரசாங்கத்தை அமைப்பதற்கும், வாக்காளர்களின் ஆணையை மீறி செய்யும் எந்தவொரு முயற்சியும் ஒரு துரோகச் செயலாகும். இது கடுமையாக எதிர்க்கப்பட வேண்டும்” என்று அது மேலும் கூறுகிறது.

மக்கள் மற்றும் தேசத்தின் நலனை எல்லாவற்றிற்கும் மேலாக வைக்குமாறு ஹராப்பான் எம்.பி.க்களை C4 கேட்டுக்கொள்கிறது.

“மாமன்னரின் ஞானத்தினால் இந்த நாட்டை அழிப்பதில் துரோக அரசியல்வாதிகளின் ஆசைகளுக்கு அனுமதிக்க வேண்டாம் என்று நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்.

“ஜனநாயகத்தை பாதுகாக்க, மாமன்னரிடம் நாங்கள் வேண்டிக்கொள்கிறோம். அப்படியே ஹராப்பான் ஒரு புதிய நிர்வாக அரசாங்கத்தை மறுசீரமைக்க முடியாமல் போனால், வாக்காளர்கள் தங்கள் புதிய அரசாங்கத்தை தேர்வு செய்ய அனுமதிக்க வேண்டும்,” என்று அவர் மேலும் கூறுகிறார்.

பாஸ் அரண்மனையை விட்டு வெளியேறினர்

மாலை 4.17 மணி: இஸ்தானா நெகாரா – பாஸ் தலைவர் அப்துல் ஹாடி அவாங் புறப்பட்ட சுமார் 30 நிமிடங்களுக்குப் பிறகு, ஏராளமான பாஸ் எம்.பி.க்களை ஏற்றிச் செல்லும் பஸ் அரண்மனையை விட்டு வெளியேறியது.

முன்னதாக, மாலை 4 மணியளவில், குவா முசாங் எம்.பி. தெங்கு ரஸலீ ஹம்சா வெளியேறுவதைக் காண முடிந்தது.

தலைமை நீதிபதியும் அட்டர்னி ஜெனரலும் இஸ்தானா நெகாரா சென்றனர்

காலை 10.47 மணி: அட்டர்னி ஜெனரல் டாமி தாமஸ் இஸ்தானா நெகாரா வந்து சேர்ந்தார். அவரது கார் கேட் 2 வழியாக அரண்மனைக்குள் நுழைகிறது.

தலைமை நீதிபதி தெங்கு மைமுன் துவான் மாட் காலை 10.30 மணியளவில் வந்ததாகவும் அறியப்படுகிறது.

அவர்கள் இருவரும் மாமன்னர் சுல்தான் அப்துல்லா சுல்தான் அஹ்மத் ஷாமை சந்திக்கின்றனர்.

கு லி இஸ்தானா நெகாராவுக்கு வருகிறார்

காலை 10.45: குவா முசாங் எம்.பி. தெங்கு ரஸலீ ஹம்சா இஸ்தானா நெகாரா வந்து சேர்ந்தார்

முன்னாள் துணைப் பிரதமர் வான் அஜிசா பிரதமர் அலுவலகத்திற்கு வருகிறார்

காலை 10.30: முன்னாள் துணை பிரதமர் டாக்டர் வான் அஜிசா வான் இஸ்மாயில் புத்ராஜெயாவில் உள்ள பிரதமர் அலுவலகத்திற்கு வருகிறார்.

அரசியல் கொந்தளிப்பு மூன்றாம் நாளும் தொடர்கிறது

டாக்டர் மகாதீர் பிரதம மந்திரி அலுவலகத்திற்கு வந்தார்

காலை 9.40: டாக்டர் மகாதீர் முகமது புத்ராஜெயாவில் உள்ள பிரதமர் அலுவலகத்திற்கு (PMO) வருகிறார்.

நேற்று மாமன்னரால் நியமிக்கப்பட்ட பின்னர் இடைக்கால பிரதமராக பதவியேற்ற முதல் நாள் இது.

நேற்று, அட்டர்னி ஜெனரல் டாமி தாமஸ் இடைக்கால பிரதமராக பணியாற்ற கால அவகாசம் ஏதும் இல்லை என்று தெளிவுபடுத்தினார்.

புதிய பிரதமரை நியமிக்கும் வரை மகாதீர் தனது விருப்பப்படி அமைச்சரவை உறுப்பினரை நியமிக்கும் முடிவை எடுக்க முடியும்.

காலை 9.24: காலை 10.30 மணியளவில் முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் PWTC-யில் ஒரு முக்கியமான கூட்டத்தில் கலந்து கொள்வார்.

இந்த விவகாரத்தை அவரது வழக்கறிஞர் முகமட் ஷாஃபி அப்துல்லா இன்று காலை கோலாலம்பூர் உயர் நீதிமன்றத்தில் தெரிவித்தார் .

காலை 9.15 மணி: இடைக்கால பிரதமர் டாக்டர் மகாதீர் முகமது, தனது இல்லத்தை விட்டு வெளியேறுகிறார். இருப்பினும், மகாதீர் ஊடகங்கள் கூடியிருந்த A கதவு வழியாக செல்லவில்லை. அதற்கு பதிலாக, மகாதீர் B கதவு வழியாக வெளியேறி, பிரதமர் அலுவலகத்திற்கு செல்வதாகத் தெரிகிறது.

இதற்கிடையில், பெர்சத்து தலைவர் முகிதீன் யாசின் காலை 9.36 மணிக்கு மகாதீர் இல்லத்திலிருந்து புறப்பட்டார்.

தலைவர்கள் மகாதீரின் இல்லத்திற்கு வரத் தொடங்கினர்

காலை 8.50: இடைக்கால பிரதமர் டாக்டர் மகாதீர் முகமதுவின் வீட்டிற்கு பெர்சத்து தலைவர் முகிதீன் யாசின் முதன்முதலில் வந்து சேர்ந்தார்.

காலை 8:05 மணிக்கு கார் உள்ளே நுழைந்தது. அதைத் தொடர்ந்து காலை 8.10 மணிக்கு முக்ரிஸ் மகாதீர் மற்றும் காலை 8.20 மணிக்கு ரினா ஹருன் வந்தனர்.

அமைச்சரவையின் கலைப்பு கோவிட்-19 கட்டுப்படுத்தும் முயற்சிகளை பாதிக்கவில்லை

காலை 8 மணி: அமைச்சரவை கலைக்கப்படுவது கோவிட்-19 பாதிப்பைக் கையாள்வதில் அரசாங்கத்தின் முயற்சிகளை பாதிக்காது என்று சுகாதார இயக்குநர் ஜெனரல் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா தெரிவித்தார்.

” கோவிட்-19 பாதிப்பு குறித்த அனைத்து சுகாதார பிரச்சினைகள் மற்றும் சவால்கள் வழக்கம் போல் தொடரும்” என்று அவர் மலேசியாகினிக்கு தெரிவித்தார்.

இன்றுவரை, 22 பேரில் 20 நோயாளிகள் பாதிப்பில் இருந்து குணமடைந்து மீண்டுள்ளனர்.

அரசியல் கொந்தளிப்பு மூன்றாம் நாளும் தொடர்கிறது

காலை 7.40 மணி: 20 மாத பாக்காத்தான் ஹராப்பான் அரசாங்கத்தின் சரிவைக் கண்டு நாட்டில் அரசியல் அமைதியின்மை இன்று மூன்றாம் நாளுக்கு நுழைகிறது.

டாக்டர் மகாதிர் முகமது இரு பிரிவினரால் ஆதரிக்கப்படுகிறார், ஆனால் எந்த கட்சியும் தெளிவான பெரும்பான்மையுடன் காணப்படவில்லை.

ராஜினாமாவைத் தொடர்ந்து நேற்று மாமன்னரால் இடைக்கால பிரதமராக நியமிக்கப்பட்ட பின்னர் மகாதீர் தற்போது அரசாங்கத்தின் ஒரே உறுப்பினராக உள்ளார்.

அனைத்து அமைச்சரவைகளும் காலியாக உள்ளன, புதிய அரசாங்கத்தை அமைப்பது நிலுவையில் உள்ளது. புதிய பிரதமர் நியமிக்கப்படும் வரை டாக்டர் மகாதீர் நாட்டை வழிநடத்துவார்.