கட்சியை விட்டு வெளியேறியவர்கள் துரோகம் இழைத்துள்ளனர் – அன்வார்

பக்காத்தான் ஹராப்பானின் வீழ்ச்சிக்குப் பின்னர், பி.கே.ஆர் தலைவர் அன்வார் இப்ராஹிம், கட்சியை விட்டு வெளியேறியவர்கள் ஊழல் மற்றும் அதிகார துஷ்பிரயோகம் உள்ளிட்ட தங்களின் பல போராட்டத்திற்கு துரோகம் இழைத்துள்ளனர் என்றார்.

மீதமுள்ள கட்சி உறுப்பினர்களுக்கு ஒரு வீடியோ செய்தியில், அன்வார் பி.கே.ஆர். அதன் கொள்கைக்கு சாதகமான கடினமான நிலைப்பாட்டை எடுத்திருப்பதை நினைவுபடுத்தினார்.

“நம் நாட்டை சீரழித்த பழைய குழுக்களுடன் கூட்டணி வைக்க எங்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது”.
“நாங்கள் எங்கள் கொள்கையுடன் இருக்கவே தேர்ந்தெடுத்தோம். எங்களை விட்டு வெளியேறியவர்கள் எங்கள் போராட்டத்திற்கு துரோகம் இழைத்துள்ளனர்” என்று அவர் கூறினார்.

கட்சியின் நோக்கம் எப்போதுமே ஊழலை நிராகரிப்பதும், மற்ற இனத்தவர்களின் உரிமைகளில் சமரசம் செய்யாமல் மலாய்-முஸ்லீம் நலன்களை நிலைநிறுத்துவதும், பொருளாதார வளர்ச்சியின் நியாயமான விநியோகத்தை உறுதி செய்வதும்தான் என்று அன்வார் மேலும் நினைவுபடுத்தினார்.

“சில தரப்பினரால் நம் நாட்டின் செல்வங்கள் கொள்ளையடிக்கப்பட நாம் அனுமதிக்கக்கூடாது,” என்று அவர் கூறினார்.

ஹராப்பான் அரசாங்கத்தை கவிழ்க்கும் முயற்சியில் ஒரு புதிய கூட்டணியைத் திட்டமிட்டதாகக் கூறப்படும் முன்னாள் பொருளாதார விவகார அமைச்சர் அஸ்மின் அலி மற்றும் முன்னாள் வீட்டுவசதி மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் ஜுரைடா கமருதீன் ஆகியோரை கடந்த வாரம் பதவி நீக்கம் செய்தது பி.கே.ஆர்.

ஆனால், அஸ்மின் அலி மற்றும் ஜுரைடா கமருதீனும் மற்ற ஒன்பது பி.கே.ஆர். பாராளுமன்ற உறுப்பினர்களுடன் சேர்ந்து கட்சியை விட்டு விலகுவதாக அறிவித்தார். அவர்கள் பின்னர் பெர்சத்துவில் சேர்ந்தனர். முகிதீன் யாசின் எட்டாவது பிரதமராக நியமிக்கப்படுவதை ஆதரித்ததாகவும் ஆதாரங்கள் பின்னர் தெரிவித்தன.