புதிய அரசாங்கத்தில் நமது நிலை என்ன? – இராகவன் கருப்பையா

அரசியலில் நிரந்தரமான நண்பனும் இல்லை, நிரந்தரப் பகைவனும் இல்லை என்ற கூற்றுக்குக் கடந்த ஒரு வாரக் காலமாக நாட்டில் நடந்தேறிய அரசியல் நாடகத்தைத் தவிர வேறு எதுவுமே சிறந்த உதாரணமாக இருக்க முடியாது.

திடீர்த் திருப்பம், ஆச்சரியம், மர்மம், அச்சம், ஆவல், வெறுப்பு, சோகம், கோபம், மகிழ்ச்சி, அதிர்ச்சி, முதலிய அனைத்து அம்சங்களையும் கொண்ட ஒரு மெகா சீரியலைத் தொடர்ந்து 7 நாட்களுக்குப் பார்த்ததைப் போன்ற உணர்வுதான் நாட்டு மக்களுக்கு.

கடந்த மார்ச் 24ஆம் தேதி துன் டாக்டர் மகாதிர் தமது பிரதமர் பதவியை ராஜினாமா செய்ததில் இருந்து பி.கே.ஆர். தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம், அதன் முன்னாள் துணைத் தலைவர் அஸ்மின் அலி, அம்னோ தலைவர் அஹ்மட் ஸாஹிட், அதன் முன்னாள் உதவித் தலைவர் ஹிஷாமுடின் மற்றும் பாஸ் கட்சித் தலைவர் ஹாடி அவாங் முதலியோர்தான் அந்தப் பதவிக்கான பந்தயத்தில் இருந்தார்களேத் தவிர தான்ஸ்ரீ முஹிடின் யாசின் அந்தப் பட்டியலில் கடைசி இடத்தில் கூட இல்லை.

கடைசி 2 நாட்களில் ஏற்பட்ட திடீர்த் திருப்பத்தைத் தொடர்ந்து சற்றும் எதிர்பாராத வகையில் அவர் பிரதமர் பதவியில் அமர்ந்தது நாட்டு மக்களுக்கு அதிர்ச்சி கலந்த ஆச்சரியம்தான்.

நஜிப் ஆட்சியின் போது துணைப் பிரதமராக இருந்த அவர் 1MDB ஊழல் தொடர்பாகக் கேள்வி எழுப்பியதால் பதவியிலிருந்து நீக்கப்பட்டது நாம் அறிந்த ஒன்றே.

இப்போது அதே கட்சியினருடன் கூட்டுச் சேர்ந்து ஆட்சி அமைத்துள்ளதுதான் மக்களுக்குப் பேரதிர்ச்சி.

நிலைமை இவ்வாறு இருக்க, இந்தியர்களின் எதிர்காலம் இந்தப் புதிய அரசாங்கத்தின் கீழ் எவ்வாறு இருக்கும் என்பதுதான் நம் மனதைத் தற்போது வருடிக்கொண்டிருக்கும் மிகப்பெரிய கேள்விக்குறி.

60 ஆண்டுகளுக்கும் மேல் அல்லோலப்பட்டு அலைக்கழிக்கப்பட்ட சமுதாயமாக இந்நாட்டில் காலத்தைக் கடத்திய நமக்குக் கடந்த 2018ஆம் ஆண்டு மே 9ஆம் தேதி விடிவெள்ளி என்றுதான் நினைத்தோம். ஆனால் பெருத்த ஏமாற்றம்தான் மிஞ்சியது என்பதை யாராலும் மறுக்க முடியாது. திடீரென நாம் அனைவரும் அனாதைகளாகிக் கேட்பாரற்றுப் போய்விட்ட தோற்றம் உருவானது.

இந்தியர்களின் நலனைக் கவனிப்பதற்குப் பிரதமர் இலாகாவின் கீழ் ‘மித்ரா‘ எனும் அமைப்பு உருவாக்கப்பட்ட போதிலும், உண்மையிலேயே உதவித் தேவைப்படுவோர், குறிப்பாக B40 தரப்பினர் எந்த அளவுக்கு அதனால் பயனடைந்தனர் என்பதும் கேள்விக்குறிதான்.

அசிங்கமான அரசியலை நம்பி இனிமேலும் நம் எதிர்காலத்தைப் பணயம் வைப்பதில் கொஞ்சம் கூட அர்த்தமில்லை என்பது நாம் கற்றுக்கொண்ட கசப்பான பாடம்.

ஆக முஹிடின் யாசின் தலைமையிலான அரசாங்கத்தின் கீழும் நமது சோகக்கதை தொடராமல் இருப்பதற்கு இப்போதே மிகக் கவனமாக, செம்மையாக நம்மை நாம் தயார்படுத்திக்கொள்வது அவசியமாகும்.

எதிர்பார்ப்புகளைக் குறைத்துக்கொண்டு ‘நம் கையே நமக்குத் துணை’ எனும் கோட்பாட்டை ஒவ்வொருவரும் கடைபிடிக்க வேண்டும்.

கடுமையாக உழைத்தால் மட்டும் போதாது, திறமையாகவும் உழைக்க முற்பட்டால்தான் இந்நாட்டில் நமது துயரத்தைத் தகர்த்தெரிந்து தலைநிமிர முடியும்.

கல்வி ஒன்றே நமது எதிர்காலத்தை நிர்ணயிக்கும் என்பதில் கிஞ்சிற்றும் ஐயப்படக் கூடாது. இவ்வாரத்தில் எஸ்.பி.எம். தேர்வு முடிவுகள் வெளியாகவிருக்கும் வேளையில் கடந்த ஆண்டு நம் மாணவர்கள் மெட்ரிக்குலேஷன் வகுப்புகளில் போதிய இடம் கிடைக்காமல் பட்ட அவஸ்தையை நாம் இன்னும் மறக்கவில்லை. ஒவ்வொரு ஆண்டும் போராடிப் போராடி அலுத்துப் போனதுதான் மிச்சம்.

ஆக மெட்ரிக்குலேஷன் வகுப்புகளில் இடம் கிடைக்கவில்லை என்றால் மனம் தளரக் கூடாது. நிறைய தனியார் நிறுவனங்களும் கல்லூரிகளும் பகுதி அல்லது முழு உதவித் தொகை வழங்க காத்திருக்கின்றன. முடிந்த அளவுக்கு சுயமாக நாம்தான் அத்தகைய உதவிகளைத் தேடிப் போக வேண்டும்.

சுமார் 43 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அரசாங்கத்தில் நுழைந்துள்ள பாஸ், தீவிரச் சமயக் கொள்கைகளைப் பின்பற்றும் ஒரு இஸ்லாமியக் கட்சி என்பது நாம் அறிந்த ஒன்றே.

அதே வேளையில் கடந்த 22 மாதங்களாக எதிர் கட்சியாக இருந்த அம்னோவும் கூட ஏறக்குறையப் பாஸ் கட்சியைப் போலவே நடந்துகொண்ட அவலத்தையும் நாம் பார்க்கத்தான் செய்தோம்.

பக்காத்தானில் இருந்து பிரிந்து சென்ற முஹிடினின் பெர்சத்துவும் ஒரு மலாய்க்காரக் கட்சிதான் என்பதையும் நாம் நினைவில் கொள்ளவேண்டும்.

புதிய அரசாங்கத்தின் சூழல் இவ்வாறு இருக்க, நம் சமுதாயத்தின் நிலை எவ்வாறாக இருக்கப் போகிறது என்பதை நாம் ஒவ்வொருவரும் உடனே சீர்தூக்கிப் பார்ப்பது அவசியம் மட்டுமின்றி அதற்கான அவசரமும் இங்கே இப்போதே உள்ளது.