சீனாவில் கட்டாயப்படுத்தி தயாராகும் பொருட்கள் : இறக்குமதிக்கு தடை விதிக்க அமெரிக்கா முடிவு

வாஷிங்டன்: சீனாவின் ஜின்ஜியாங் மாகாணத்தில் சிறுபான்மையின தொழிலாளர்களை கட்டாயப்படுத்தி தயாரிக்கப்படும் பொருட்களின் இறக்குமதிக்கு தடை விதிக்க கோரும் மசோதா அமெரிக்க பார்லி.யில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

சீனாவின் ஜின்ஜியாங் மாகாணத்தில் உய்கர் முஸ்லிம் உள்ளிட்ட பல்வேறு சிறுபான்மை இனத்தவர் வசிக்கின்றனர். 10 லட்சத்திற்கும் அதிகமான இந்த சிறுபான்மையினரை முகாம்களில் அடைத்து கட்டாயப்படுத்தி பொருட்கள் தயாரிப்பதாக சீன அரசு மீது மனித உரிமை அமைப்புகள் குற்றம் சாட்டி வருகின்றன.

ஆனால் முகாம்களில் சிறுபான்மையின மாணவர்களின் மத தீவிரவாத போக்கை மாற்ற பயிற்சி அளித்து மாண்டரின் மொழி கற்பிக்கப்படுவதாகவும் கட்டாய பணியில் ஈடுபடுத்தவில்லை எனவும் சீனா கூறுகிறது.

இந்நிலையில் ஜின்ஜியாங்கில் தயாராகும் பொருட்களின் இறக்குமதிக்கு தடை விதிக்கும் நோக்கில் அமெரிக்க பார்லி.யில் உய்கர் கட்டாய தொழிலாளர் தடுப்பு மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது.இது குறித்து குடியரசு கட்சி செனட் உறுப்பினர் மார்கோ ருபியோ பேசும்போது ”ஜின்ஜியாங்கில் உலகின் மிகப் பெரிய மனித அவலம் நடைபெற்று வருகிறது. அங்குள்ள சிறுபான்மையினரை கட்டாயப்படுத்தி பொருட்கள் தயாரிக்கப்படுகின்றன. இது 2020ல் நடைபெறுவது வேதனை அளிக்கிறது” என்றார்.

மனித உரிமை மீறல் கண்காணிப்பு ஆணைய செயல் தலைவரும் ஜனநாயக கட்சி உறுப்பினருமான ஜிம் மெக்கோவர்ன் பேசியதாவது: ஜின்ஜியாங்கில் உய்கர் முஸ்லிம் உள்ளிட்ட சிறுபான்மையினரை கட்டாயப்படுத்தி பொருட்கள் தயாரிக்கப்படுகின்றன. அதற்கான ஆதாரங்கள் புகைப்படங்கள் வெளியே கசிந்துள்ளன. இது ஜின்ஜியாங்கில் தயாரிக்கப்படும் பொருட்களை ஏற்றுமதி செய்யும் சீன நிறுவனங்களுக்கும் அவற்றை வாங்கும் அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகளுக்கும் தெரியும்.எனவே ஜின்ஜியாங்கில் இருந்து இறக்குமதியாகும் ஜவுளி மொபைல்போன் கம்ப்யூட்டர் சாதனம் காலணி தேயிலை உள்ளிட்ட பொருட்களின் இறக்குமதிக்கு அமெரிக்கா தடை விதிக்க வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.

இதற்கிடையே ”இந்த நுாற்றாண்டில் சீன கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஜின்ஜியாங் பிரச்னை மிகப் பெரிய கறை” என அமெரிக்க வெளியுறவு துறை அமைச்சர் மைக் போம்பியோ தெரிவித்துள்ளார்.சீனா கண்டனம்’ மனித உரிமைகள் தொடர்பாக, அமெரிக்கா எதுவும் பேசத் தேவையில்லை. சீனாவின் உள்விவகாரங்களில் அமெரிக்கா தலையிட வேண்டாம்’ என, சீன வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

dinamalar