துணையமைச்சர், ஆனாலும் அந்தரத்தில் எட்மன் சந்தாரா! ~இராகவன் கருப்பையா

பிரதமர் முஹிடினின் புதிய அரசாங்கத்தில் கூட்டரசுப் பிரதேசத் துணையமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள டாக்டர் எட்மன் சந்தாரா எனும் சந்தரக்குமாரின் அரசியல் எதிர்காலம் சற்று நிலையற்றதாகவேத் தெரிகிறது.

அனைத்துலக தொழில்துறை அமைச்சர் அஸ்மின் அலி பி.கே.ஆர். கட்சியிலிருந்து வெளியேறிய போது, அவரைப் பின் தொடர்ந்த 10 நாடாளுமன்ற உறுப்பினர்களில் எட்மன் சந்தாராவும் ஒருவர்.

கடந்த மார்ச் 1-ம் தேதியன்று, நாட்டில் ஆட்சி மாறியபோது அந்த 11 பேரும் சுயேட்சைகளாகவே இருந்து பெரிக்காத்தான் கூட்டணிக்கு ஆதரவளித்தனர். ஆனால், இப்போது அவர்கள் கூண்டோடு முஹிடினின் பெர்சத்து கட்சியில் சேர்ந்தனர். பெர்சத்து ஒரு மலாய்க்காரக் கட்சி என்பதால், எட்மன் சந்தாராவின் நிலை என்னவென்றுத் தெரியவில்லை.

கடந்த 2015-ம் ஆண்டு அம்னோவிலிருந்து நீக்கப்பட்ட முஹிடின், அக்கட்சிக்கு எதிராக பக்காத்தான் ஹராப்பானில் ஒரு மலாய்க்காரக் கட்சி வேண்டும் என்ற நிலையில் துன் மகாதிருடன் சேர்ந்து 2016-ம் ஆண்டில் பெர்சத்துவைத் தோற்றுவித்தது குறிப்பிடத்தக்கது.

இரண்டு ஆண்டுகளுக்கு முன், பக்காத்தான் ஆட்சியமைத்த போது, வெறும் 13 நாடாளுமன்ற உறுப்பினர்களை மட்டுமே தன்வசம் வைத்திருந்த அக்கட்சி, பிறகு அம்னோவிலிருந்து மேலும் 13 பேரைச் சேர்த்துக்கொண்டது. இப்போது அஸ்மின் குழுவையும் உள்வாங்கிக்கொண்ட அந்தக் கட்சி, பெரிக்காத்தான் கூட்டணியில் வலுவான ஓர் அங்கம் வகிப்பதை நாம் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்.

இந்நிலையில், எட்மன் சந்தாராவை ஓர் இணை உறுப்பினராக அவர்கள் ஏற்றுக் கொண்டாலும், அது அர்த்தமில்லாதொரு அங்கத்துவமாகவே இருக்கும்.

அதேவேளையில், கூட்டணியில் இடம் பெற்றுள்ள ஒரே இந்தியக் கட்சியான ம.இ.கா.-வினரும் அவரை ஏற்றுக்கொள்ள வாய்ப்பில்லை. ஏனென்றால், அவர்களுடைய கோட்டாவுக்கே போட்டா போட்டி உச்சத்தில் உள்ளது.

கடந்த 14-வது பொதுத் தேர்தலில், ஜொகூரில் உள்ள சிகாமட் தொகுதியில் பி.கே.ஆர். கட்சி சார்பாக போட்டியிட்ட எட்மன் சந்தாரா, முன்னாள் ம.இ.கா. தலைவர் சுப்ரமணியத்தைத் தோற்கடித்தார், அவரை அத்தொகுதி மக்கள் ‘சுப்பர் ஹீரோ’ எனப் போற்றினர். ஆனால் தற்போது, அஸ்மினுடன் சேர்ந்து கட்சியை விட்டு வெளியேறி, புறவழியாக அரசாங்கத்தில் நுழைந்துள்ள அவர் மீது சிகாமாட் தொகுதி வாக்காளர்கள் சினமடைந்துள்ளதாகத் தெரிகிறது.

இந்நிலையில் இன்னும் 3 ஆண்டுகளில் நடைபெறவிருக்கும் 15-வது பொதுத் தேர்தலில், சந்தரக்குமாரின் நிலைப்பாடு ஒரு கேள்விக்குறிதான். அரசனை நம்பி புருஷனைக் கைவிட்ட கதையாகிவிடுமோ என எண்ணத் தோன்றுகிறது.

பதவி சுகபோகங்களுக்கு ஆசைப்பட்டு கட்சியை விட்டு வெளியேறிவர்கள் துரோகிகள் எனப் பி.கே.ஆர். தலைவர் அன்வார் இப்ராஹிம் மட்டுமின்றி தொகுதி வாக்காளர்களும் கூட அவரைச் சபிக்கும் நிலை இப்போது ஏற்பட்டுள்ளது வருத்தமான ஒரு சூழ்நிலைதான்.

தொகுதி வாக்காளர்களின் கோபத்திற்குள்ளாகி அவர்களுடைய வெறுப்பைச் சம்பாதித்துள்ளது மட்டுமின்றி, சார்ந்திருப்பதற்கு ஒரு கட்சி கூட இல்லாமல் சந்தரக்குமாரின் நிலை அந்தரத்தில் உள்ளதாகத் தெரிகிறது.

இதேச் சூழல் தொடர்ந்து நீடித்தால், அவருடைய அரசியல் வாழ்க்கை அடுத்தப் பொதுத் தேர்தலோடு அஸ்தமனம் ஆகிவிடும் அபாய நிலையும் உள்ளதை நாம் மறுக்க இயலாது.