கோலாலம்பூரில் தவிக்கும் 200 மாணவர்களை மீட்க 2 விமானங்கள் செல்கிறது – மத்திய அரசு ஏற்பாடு

கோலாலம்பூரில் தவிக்கும் 200 மாணவர்களை மீட்க டெல்லி மற்றும் விசாகப்பட்டினத்தில் இருந்து 2 விமானங்கள் இன்று கோலாலம்பூர் செல்ல மத்திய அரசு ஏற்பாடு செய்துள்ளது.

புதுடெல்லி: கொரோனா வைரசை கட்டுப்படுத்த வெளிநாடுகளில் இருந்து வருபவர்களுக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது.

ஐரோப்பிய கூட்டமைப்பு நாடுகள், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாடுகள், இங்கிலாந்து, துருக்கி, ஆப்கானிஸ்தான், பிலிப்பைன்ஸ், மலேசியா நாடுகளைச் சேர்ந்தவர்கள், இந்தியர்கள் உள்பட யாரும் இன்று (புதன்கிழமை) இந்தியாவுக்குள் வரக்கூடாது என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

இந்த நிலையில் மலேசியா, பிலிப்பைன்ஸ் நாடுகளில் கணிசமான அளவுக்கு இந்திய மாணவர்கள் படித்து வருகிறார்கள். பிலிப்பைன்சில் கல்லூரிகள் மூடப்பட்டதால் 200 இந்திய மாணவர்கள் அங்கிருந்து விமானத்தில் புறப்பட்டனர். அந்த விமானம் கோலாலம்பூர் வந்த போது இந்தியாவில் தடை விதித்துள்ள தகவல் தெரிய வந்தது.

இதனால் அந்த 200 மாணவர்களும் கோலாலம்பூர் விமான நிலையத்தில் இறக்கி விடப்பட்டனர். அவர்களில் 70 பேர் மாணவிகள். இந்தியா திரும்ப விமானம் இல்லாததால் அவர்கள் தவித்தப்படி உள்ளனர்.

அந்த 200 மாணவ- மாணவிகளில் பெரும்பாலானவர்கள் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் என்று தெரிய வந்துள்ளது. அவர்கள் தங்களை இந்தியா மீட்க வேண்டும் என்று சமூக வலைத்தளங்கள் மூலம் தகவல்கள் வெளியிட்டனர்.

இதுபற்றி மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. அவர் இதுபற்றி விசாரித்து உரிய நடவடிக்கை மேற்கொள்வதாக உறுதியளித்தார்.

அதன்படி கோலாலம்பூரில் தவிக்கும் 200 இந்திய மாணவர்கள் மீட்கப்படுவார்கள் என்று மத்திய மந்திரி ஜெய்சங்கர் அறிவித்தார். இதையடுத்து டெல்லி, விசாகப்பட்டினத்தில் இருந்து 2 விமானங்கள் இன்று கோலாலம்பூர் செல்கிறது.

அங்குள்ள 200 மாணவர்களையும் ஏற்றிக்கொண்டு இன்று மாலை அல்லது இரவு அந்த விமானங்கள் டெல்லி திரும்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

maalaimalar