மலேசிய மண்ணில் தனித்தமிழை உயிர்ப்பித்த அறிஞர்கள்! – பாகம் 1

சிவாலெனின் | தமிழுக்குத் தொண்டு செய்வோர் இம்மண்ணில் மறைவதில்லை. அவர்கள் இல்லாவிட்டாலும் அவர்களின் தமிழ்ப்பணியை அவர்கள் வழியில் தோன்றிய தமிழுணர்வாளர்கள் தனித்துவமாக முன்னெடுப்பார்கள் என்பது இயல்பு.

தமிழுக்கும் தமிழினத்திற்கும் பங்காற்றியவர்கள் பலர் இம்மண்ணில் வாழ்ந்து மறைந்துள்ளனர். அவர்களில் தனித்தமிழ் பற்றாளர்களாகவும் மொழி மற்றும் இனத்தின் உணர்வாளர்களாகவும் உயிர்ப்பித்தவர்களில் பாவலர் ச.சி.குறிஞ்சிக்குமரனாரும் ஐயா அபு.திருமாலனாரும் தனித்துவம் பெற்றவர்களாவர்.

மலேசியத் தமிழர்களும் இனமொழி உணர்வாளர்களும் அவர்களை அறிந்திருக்க வேண்டியதோடு அவர்கள் வழியில் தமிழ்ப்பணியையும் மேற்கொள்ள வேண்டும். அவ்வகையில் அவ்விருவர் குறித்து இங்குப் பதிவு செய்வதில் பெருமிதம் கொள்கிறோம்.

 

பாவலர் ச.சி.குறிஞ்சிக்குமரனார்

ச.சி.சுப்பையா என்னும் இயற்பெயரைக் கொண்ட பாவலர் ச.சி.குறிஞ்சிக்குமரனார் மலேசிய மண்ணில் தமிழ் வளர்த்த முதுபெரும் பாவலராவார். மலேசியாவில் தனித்தமிழ் வளர்ச்சிக்குத் தன் வாழ்நாள் முழுவதும் பாடுப்பட்டு பணியாற்றியத் தமிழ்நெஞ்சர் அவர்.

தமிழகத்திலேயேப் பலர் மொழிஞாயிறு பாவாணர்தம் தமிழ்ப்பணி அறியாமல் இருக்கும் சூழலில், பாவாணருக்கு மலேசிய மண்ணில் மன்றம் அமைத்து தமிழ்ப்பணி புரிந்த ச.சி.குறிஞ்சிக்குமரனாரின் தமிழ்ப்பணி இன்றைக்கும் தமிழுணர்வாளர்களிடயே விருட்சமாக உயிர்ப்பித்துக் கொண்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

மலேசியத் திராவிடக்கழகம், மலேசியத் தமிழ்நெறிக் கழகம் உள்ளிட்ட தமிழ்நெறி சார்ந்த அமைப்புகளின் வளர்ச்சிக்குப் பாடுப்பட்ட பாவலர், 1960-ல் பாவாணர் தமிழ் மன்றம் அமைத்து தனித்தமிழ் வளர்ச்சிக்கு வித்திட்டார். அன்றையக் காலக்கட்டத்தில் அந்த அமைப்பை அவர் நானூறு உறுப்பினர்களுடன் தோற்றுவித்தார் என்பது வரலாறு.

பாவாணரின் ஒப்பியன் மொழிநூல் படித்த இவர், பாவாணர் மீதும் அவர் கொள்கைகளின் மீதும் மிகுந்த பற்றுடையவர் ஆனார். பாவாணரின் தமிழ்ப்பணிக்குப் பல நிலையிலும் துணை நின்றார். பாவாணர் குறிஞ்சிக்குமரனாருக்கு நூற்றுக்கும் மேற்பட்ட மடல்கள் எழுதியுள்ளதாக அறிய முடிகிறது.

மலேசியத் திராவிடக் கழகம் மற்றும் மலேசிய இந்திய பேராயக்கட்சி (மஇகா) ஆகியவற்றில் உறுப்பியம் பெற்றிருந்தாலும், அவை மொழிதூய்மைக்கும் தனித்தமிழ் வளர்ச்சிக்கும் துணைப்புரியாது என்பதை உணர்ந்துதான் திருமாலனார் பாவாணர் மன்றம் அமைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

சித்த மருத்துவத்துறையில் வல்லுநராக விளங்கிய பாவலர் குறிஞ்சிக்குமரனார் தமிழுணர்வுக் கொண்டு மலேசியாவில் தமிழ் உணர்வாளர்கள் பலர் உருவாகத் தக்க பணிகளை முன்னெடுத்தவராவார். பிற மொழி கலப்பு இன்றி பேசுவதிலும் எழுதுவதிலும் தனித்துவம் பெற்றிருந்த இவர் பன்னூல் ஆசிரியராகவும் விளங்கினார்.

குறிஞ்சிக்குமரனாரால் அமைக்கப்பட்ட அம்மன்றம், ஈப்போ வட்டாரத்தில் அரசியல் சார்பற்று, இனம், மொழி, கலை, பண்பாடு ஆகியவற்றின் வளர்ச்சிக்கும் மேம்பாட்டிற்கும் மட்டுமின்றி; தனித்தமிழ் வளர்ச்சிக்கும் வித்திட்டத்து. மேலும், மலேசியத் தமிழர்கள் மத்தியில் தனித்தமிழை உயிர்ப்பிக்க, பாவாணரின் நூல்கள், தென்மொழி இதழ்கள் பெரும் பங்காற்றின.

தனித்தமிழ் மீது தீராதக் காதல் கொண்ட குறிஞ்சிக்குமரனார், தமிழகத்திலிருந்து தனித்தமிழ் உணர்வு மிக்க பலரை அழைத்து மதித்துப் போற்றி அனுப்பியவர். தமிழகத்திலிருந்து பேராசிரியர் அ.ச.ஞானசம்பந்தன், முனைவர் அ.சிதம்பரநாதன் உள்ளிட்ட அறிஞர்களை மலேசியாவிற்கு வரவழைத்து இலக்கியப் பொழிவுகளுக்காக மேடை அமைத்துத் தந்த பெருமையும் ஐயா குறிஞ்சிக்குமரனாரையே சேரும்.

தமிழ்நாட்டின் இராமநாதபுர மாவட்டத்தின் திருப்பத்தூரை அடுத்து, இரணசிங்கபுரம் என்ற ஊரில் வாழ்ந்த சாத்தையா, சிட்டாள் ஆகியோருக்கு 05.05.1925 காரிக்கிழமை ச.சி.குறிஞ்சிக்குமரனார் முதல் மகனாகப் பிறந்தார்.

தந்தை வழியில் சித்தமருத்துவத்தோடு, வர்மம், சிலம்பம், போர்முறைகள் போன்றவற்றைக் கற்றுத்தேர்ந்த குறிஞ்சிக்குமரனார், 1930-களில் திருப்பத்தூர் புலவர் தமிழ்ப்பள்ளியில் புலவர்கள் காதர்மீரான், பிரான்மலை இருவரிடமும் தமிழ் இலக்கியம், இலக்கணம், கவனகம், கணியம், கணிதம் போன்றவற்றைப் பயின்றார்.

1938-ல், தமிழகத்திலிருந்து மலேசிய மண்ணில் கால்பதித்த குறிஞ்சிக்குமரனார் தமிழவேள் கோ,சாரங்கபாணி அவர்களின் “தமிழ் முரசு” நாளிதழ் வழி தன்மானப் பற்றாளராகவும் பெரியாரின் “விடுதலை” மற்றும் “பகுத்தறிவு” போன்ற இதழ்களின் மூலம் தன்மான உணர்வாளராகவும் மெய்மம் கொண்டார்.

இன, மொழி, தனித்தமிழ் பற்று மட்டுமின்றி குறிஞ்சிக்குமரனார் தொழிலாளர் வர்க்கத்தின் குரலாகவும் ஒலித்துள்ளார். தோட்டத் தொழிலாளர்களின் இன்னல்களையும் அவர்களின் நிலையையும், மேலாளர்களின் கொடுமைகளையும் குறிஞ்சிக்குமரனார் அப்போது ஈப்போவில் வெளிவந்த “சோதி” என்னும் இதழில் மதிவாணன், சம்மட்டி, துலாக்கோல் போன்ற புனைபெயர்களில் கட்டுரையாக எடுத்துரைத்துள்ளார். அச்சமயம் அவர் பேராக் தோட்டத் தொழிலாளர் சங்கத்தில் இடம் பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழீழ விடுதலையில் நம்பிக்கை கொண்டிருந்த இவர் தென்மொழி இதழை மலேசியாவில் ஆயிரக்கணக்கில் விற்பனை செய்வதற்கு உரிய வழிகளை வகுத்தார்.  பாவலரேறு பெருஞ்சித்திரனார் அவர்கள் 1974-ல் மலேசியாவிற்கு வருகை அளித்தபோது அவரை வரவேற்று சொற்பொழிவாற்ற செய்தார். மேலும், முனைவர் வ.சுப.மாணிக்கம், முனைவர் மு.தமிழ்க்குடிமகன், கு.சா.ஆனந்தன் உள்ளிட்ட தமிழகத்து அறிஞர்களை உரையாற்றச் செய்த பெருமைக்குரியவராகவும் திகழ்கிறார்.

“பாண்டியத் தலைவன்”, ”கோமான் குமணன்” போன்ற இலக்கிய நாடகங்களை எழுதியுள்ள குறிஞ்சிக்குமரனாரின் தமிழ்ப்பணியைப் போற்றி மதித்து அவர் வாழுங்காலத்திலேயே “தமிழ்ச்செல்வர்”, ”சித்த மருத்துவர் செந்தமிழ்ப்புலவர்”, ”பாவலர் செந்தமிழ்க்குறிஞ்சி”, ”செந்தமிழ்க் கவிமணி”, ”தமிழனல்” என்றெல்லாம் அவருக்கு விருதுகள் சூட்டப்பட்டது. இருந்தபோதிலும், மலேசியத் தமிழர்களிடையே அவர் தனித்தமிழ் அறிஞராகவே போற்றிப் புகழப்படுகிறார்.

மலேசியாவில் தனித்தமிழ் வளர்ச்சிக்குத் தன் வாழ்நாள் முழுவதும் அரும்பணியாற்றிய நனிசிறப்பு மிக்க பாவலர் ச.சி.குறிஞ்சிக்குமரனார் 18.10.1997-ல், தனது தமிழ்த்தொண்டுக்கு ஓய்வு கொடுத்திருந்தாலும் அவரது தனித்தமிழ்ப் பணியும் தமிழ்ப்பணியும் இன்னமும் அவரது வழிதோன்றல்களின் மூலமாக தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டுத்தான் வருகிறது என்பதில் நாம் பெருமிதம் கொள்ளத்தான் வேண்டும்.

அபு.திருமாலனார்

தமிழ்மொழியைத் தனது வாழ்வின் மூச்சாக எண்ணி அம்மொழிக்காக தம்மை ஈகம் செய்த நல்லோரில், மலேசிய மண்ணின் முகவரியாக, இந்நாட்டில் தமிழுக்கும் தமிழினத்திற்கும் பாடாற்றியத் தமிழ்நெஞ்சர்தான் ஐயா அபு.திருமாலனார்.

மலேசியத் தமிழ்க்கூறு நல்லுலகில் அரைநூற்றாண்டு காலமாக தமிழுக்கும் தமிழருக்கும் அயராது பாடாற்றிய மெய்ப்பொருளறிஞர் என அனைவராலும் போற்றப்படும் தனித்தமிழ் பாவலர் ஐயா அபு.திருமாலனாரை மறந்துவிட்டு, இந்நாட்டின் தனித்தமிழ் வரலாற்றை எழுதிட முடியாது என்பது ஒப்புக்கொள்ள வேண்டிய வரலாறு.

பாவலரேறு ஐயா பெருஞ்சித்திரனாரின் தனித்தமிழ்ப் பாசறையில், மெய்மம் கொண்டு மலேசியாவில் எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்று முழங்கியவர். துறைதோறும் தமிழ் வளர வேண்டும் என்பதற்கு ஒப்ப, தமிழ்ப் பணியாற்றி தமிழுக்குத் தொண்டுகள் பல செய்தத் தமிழாய்ந்த அறிஞர் இவர்.

மலேசிய நாட்டில் இன்றளவும் மொழி, இனம், சமயம் என முக்கூறுகளும் பேசப்படுவதற்கும் தமிழைப் புறக்கணிக்காமல், மறவாமல் காத்து வருவதற்கு வித்திட்டவர்களில் இவர் முதன்மையானவர் என்றால் அஃது மிகையல்ல. தமிழ்ப்பணியோடு பகுத்தறிவு பணியையும் ஆக்கப்பூர்வமாக முன்னெடுத்த இவர் நாராயணசாமி என்னும் தனது இயற்பெயரைத் தமிழின் மீது கொண்ட பற்றினாலும் தீராக் காதலினாலும் திருமாலன் எனத் தமிழ்ப்படுத்திக் கொண்டார்.

தமிழுக்காகவும் தமிழர்களுக்காகவும் தன் வாழ்வினை ஈகம் செய்த ஐயா திருமாலனார், 08.06.1931-ல், செலாமா ஓலிரூட் தோட்டத்தில் பிறந்தவராவார். மு.அரிபுத்திரன் – சி.அன்னப்பூரணியம்மாள் இணையரின் இரண்டாவது மகனாவார். தமிழைச் சுவாசித்து வாழ்ந்திருந்த பாவலர் 1962-ல், தனது வாழ்க்கைத் துணையாக கெ.மீனாட்சியம்மையாரைக் கரம்பிடித்தார்.

பள்ளிப்படிப்பில் முதல்நிலை மாணவராக இருந்த பாவலர், தனது எட்டாவது வயதிலேயே இராமாயண, மகாபாரதங்களை இசைக்கூட்டி கேட்பார் என்பது குறிப்பிடத்தக்கது. அன்றையக் காலக்கட்டத்தில், மலேசியாவில் தமிழர்கள் படும்பாட்டையெல்லாம் கண்டு வருந்திய ஐயா திருமாலனார், அத்துயரைத் தீர்க்க வழிவகைகளைத் தேடிய வண்ணம் இயங்கிக் கொண்டிருந்தார்.

தமிழ்ப்பணியோடு பகுத்தறிவு பணியையும் செழிப்புற செய்த பாவலர், தனித்தமிழ் உணர்வை ஊட்டியதோடு சாதியொழிப்பு, மதவொழிப்பு, மூடநம்பிக்கை ஒழிப்பு உட்பட தொழிலாளர் ஒற்றுமைக்காகவும் அரும்பணியாற்றினார். மேலும், தமிழர் சங்கம், தமிழ் இளைஞர் மணிமன்றம் போன்ற பொது அமைப்புகளிலும் ஈடுப்பட்டு தமிழுக்கும் தமிழ் சமூகத்திற்கும் உழைத்தார்.

தமிழையும் பகுத்தறிவையும் தனது வாழ்வியல் பிடிப்பாக மெய்மம் கொண்டு இயங்கிய ஐயா திருமாலனார், செலாமாவில் 1970-ல் திராவிடக் கழகக் கிளை அமைத்து, அதற்கு 13 ஆண்டுகள் தலைமையேற்று திறன்பட செயல்பட்டதோடு, 1983-ல் மலேசியத் தமிழ்நெறிக் கழகத்தையும் தோற்றுவித்து தமிழின் நனிசிறப்பிற்குப் பங்காற்றினார்.

மொழி, இனம், சமயம் ஆகியவற்றையும் கடந்து, நாடகங்களை இயக்கவும் பாடல்களை எழுதி அதற்குச் சுயமாக இசை அமைக்கும் புலமையையும் அவர் பெற்றிருந்தார். அவர் பாவத்தின் பரிசு, சூழ்ச்சி, மலர்ந்த வாழ்வு ஆகிய நாடகங்களையும் திருந்திய திருமணம், பரிசுச்சீட்டு, சந்தேகம், பாட்டு வாத்தியார் பக்கிரிச்சாமி, என்று விடியும் மற்றும் மீண்டும் இருள் ஆகிய நெடுநாடகங்களையும் எழுதியுள்ளார்.

மேலும், செலாமா தமிழ்ப்பள்ளி கட்டிடநிதிக்காக 1951-ல் “பதிபக்தி” என்னும் நாடகத்தை ஐயா திருமாலனார் எழுதி, இயக்கி, இசையமைத்து நடித்தது, செலாமா வரலாற்றில் பொன்னெழுத்துகளால் பொறிக்கப்பட வேண்டியவை எனப் போற்றப்படுகிறது.

பாவலர் அவர்கள் சுமார் 300-க்கும் மேற்பட்ட தனியிசைப்பாடல்களைத் தமிழ்கூறும் நல்லுலகிற்காக படைத்துள்ளார். அதுமட்டுமின்றி, கட்டுரைகள், ஆய்வுக்கட்டுரைகள், விளக்கக் கட்டுரைகள், மறுப்புக் கட்டுரைகள் மற்றும் 200-க்கும் மேற்பட்ட கவிதைகளையும் படைத்துள்ளார்.

பாவலரின் நூல்களாக கனல் (பாநூல்), இனப்பற்று (கட்டுரை நூல்), தமிழ்நெறி விளக்கம் (பொழிவு நூல்), தேவையற்றது எழுத்துச் சீர் திருத்தம் மற்றும் தமிழர் வாழ்வறத்தில் தாலி ஆகிய அனைத்தும் தமிழர் வாழ்வியல் பொக்கிசமானவைகளாகும்.

வாழ்வில் தனது ஒவ்வொரு அசைவிலும் நகர்விலும் தமிழுக்காகவே வரலாறாய் வாழ்ந்த மெய்ப்பொருளறிஞர் ஐயா அபு.திருமாலனார், 1995, ஏப்ரல் 29-ம் தேதி தமிழுக்காகவும் தமிழர்களுக்காகவும் சிந்திப்பதை நிறுத்திக் கொண்டார். அவர் மறைந்தாலும் அவரது தமிழ்ப்பணி இன்றைக்கும் தமிழ்நெறிக் கழகத்தால் தொடர்ந்து உயிரூட்டப்பட்டுக் கொண்டுதான் இருக்கிறது.