கோவிட்-19: இத்தாலியில் இன்று கிட்டத்தட்ட 800 பேர் இறந்துள்ளனர்

சனிக்கிழமையன்று மட்டும் இத்தாலி 793 கோவிட்-19 இறப்புகளை பதிவு செய்துள்ள நிலையில், உலக சுகாதார அமைப்பின் (WHO) தகவல்களின் படி, இந்த தொற்றுநோய் உலகளவில் 11,184 உயிர்களைக் கொன்றது என்று தெரிகிறது.

உலகளவில், ஒட்டுமொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை 266,073 ஆக அதிகரித்துள்ளது. இந்த கிருமி 182 நாடுகளுக்கும் பிரதேசங்களுக்கும் பரவியுள்ளது.

சீனாவுக்கு வெளியே, உறுதிப்படுத்தப்பட்ட பாதிப்புகளின் எண்ணிக்கை 184,657 ஆக அதிகரித்துள்ளது.

இத்தாலி, ஸ்பெயின், ஈரான், ஜெர்மனி, அமெரிக்கா மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளாகும். ஒவ்வொரு நாடும் 10,000க்கும் மேற்பட்ட பாதிப்புகளை பதிவு செய்துள்ளன. இந்த நாடுகளில் 130,000க்கும் மேற்பட்ட நோய்த்தொற்றுகள் உள்ளன.

இத்தாலி சனிக்கிழமை 6,557 புதிய பாதிப்புகளை பதிவுசெய்தது. பிப்ரவரி 21 ஆம் தேதி பாதிப்பு ஆரம்பத்தில் இருந்து இப்போது வரை மொத்தம் 53,578 பாதிப்புகளாகும். இதுவரை 4,825 பேர் உயிரிழந்தனர்.

ஸ்பெயினில், தொற்றுநோய்கள் சனிக்கிழமையன்று 25,000ஐ எட்டின. மொத்தம் 1,328 நோயாளிகள் இறந்தனர்.

பிரான்சில் 112 இறப்புகள் பதிவாகியுள்ளன. பாதிப்புகள் மொத்தம் 14,459 ஆக அதிகரித்துள்ளன. தீவிர சிகிச்சை பிரிவுகளில் 1,525 நோயாளிகள் உட்பட மொத்தம் 6,172 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் பாதி பேர் 60 வயதிற்குட்பட்டவர்கள்.

பிரிட்டனில் 5,018 பாதிப்புகளும், 233 பேர் உயிரிழந்துள்ளனர்.

சனிக்கிழமையன்று, சைப்ரஸ், பின்லாந்து, லிதுவேனியா, போஸ்னியா மற்றும் ஹெர்சகோவினா ஆகியவை கோவிட்-19 இலிருந்து முதல் மரணத்தை அறிவித்தன.