ஏகாதிபத்தியத்தை எதிர்த்துப் போராடியப் புரட்சியாளன், பகத் சிங்!

சிவா லெனின் | இந்திய விடுதலை வரலாற்றினைப் புரட்சியாளன் ‘பகத் சிங்’-ஐ ஒதுக்கி விட்டு பதிவு செய்திட முடியாது. நாட்டின் விடுதலைக்காகப் போராடி, தனது 24-வது வயதில் தூக்கு மேடையை வீரத்தோடு முத்தமிட்ட மாவீரன்தான் பகத் சிங். மார்ச் 23, இன்று பகத் சிங்கின் நினைவு நாள்.

இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தில், பிரிட்டன் ஆட்சியாளர்களை எதிர்த்துப் போராடியக் குடும்பத்தில், 1907-ம் ஆண்டு செம்டம்பரில் பகத் சிங் பிறந்தார். இளம் வயதிலேயே ஐரோப்பிய புரட்சி இயக்கங்கள் குறித்து அறியும் ஆர்வம் மேலிட, அதிகம் படிக்கத் தொடங்கினார். அதன் விளைவு சீரிய பொதுவுடமைவாதியாய் தன்னை உருவாக்கிக் கொண்டார்.

இந்திய விடுதலை போராட்டமும் சிந்தனையும் மக்கள் மத்தியில் மேலோங்கியிருந்த நிலையில், பொதுவுடமை சிந்தனைகளால் கவரப்பட்ட பகத் சிங், இந்தியாவின் பல புரட்சி இயக்கங்களுடன் தொடர்பை ஏற்படுத்திக் கொண்டு, ‘இந்துஸ்தான் குடியரசு’ எனும் புரட்சி அமைப்பின் தலைவர்களில் ஒருவரானார். விடுதலைப் புரட்சியின் போது கைது செய்யப்பட்டு, 63 நாட்கள் சிறையில் இருந்த போது, பகத் சிங் சிறையில் இந்தியக் கைதிகளையும் பிரிட்டன் கைதிகளையும் ஏற்றத்தாழ்வோடு நடத்தப்பட்டத்தைக் கண்டித்து, அனைவரும் சம உரிமை பெறுவதற்கு உண்ணாவிரதம் மேற்கொண்டார். அதன் விளைவாக, பகத் சிங்கின் செல்வாக்கு மக்கள் மத்தியில் பரவிடத் தொடங்கியது. இந்தியாவில் அன்றையக் காலக்கட்டத்தில், சோசலிசக் கொள்கைகள் நாடு முழுவதும் பரவிடப் பகத் சிங்கின் போராட்டமும் புரட்சியும் பெரும் வழிவகுத்தது எனலாம்.

1919-ல், ஜாலியன்வாலா பாக் படுகொலை நடந்தபோது பகத் சிங்கிற்கு 12 வயதுதான். படுகொலை நடந்த சில மணி நேரங்களில், அவ்விடத்தைப் பார்வையிட்ட பகத் சிங், அங்கிருந்து மண்ணைக் கொண்டு வந்து வைத்துக் கொண்டார். இதற்கிடையில், தனது 14-வது வயதில் பகத் சிங் ஆங்கிலேயேர்களுக்கு எதிராக போராட முனைந்தார். ஆயுதமற்ற மக்கள் பலர் 1921, பிப்ரவரி 20-ம் நாள், குருத்வாரா நானா சாஹிப்பில் கொல்லப்பட்டத்தை எதிர்த்து பகத் சிங் இளையப் புரட்சி இயக்கத்தில் தன்னை இணைத்துகொண்டு, அகிம்சை சித்தாந்தம் வேண்டாம் எனக் கூறி, தாக்குதல் நடத்தி ஆங்கிலேயேர்களை இந்தியாவிலிருந்து வெளியேற்றும் போராட்டத்தில் ஈடுபட்டார்.

பகத் சிங்கின் ஒவ்வொரு செயல்பாடும் ஆங்கிலேயேர்களுக்குப் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்திய வேளையில், அவரது தாக்கம் இந்திய இளைஞர்களுக்கு உத்வேகத்தை அளித்ததோடு; போராட்ட எண்ணத்தையும் விதைத்தது. பகத் சிங்கினால் இளைஞர்கள் போராட்டக்காரர்களாக உருவெடுக்கூடும் என அஞ்சிய ஆங்கிலேயே அரசு, குண்டு வெடிப்பில் அவருக்குத் தொடர்பு இருப்பதாகக் கூறி, 1927-ம் ஆண்டு மே மாதத்தில் அவரைக் கைது செய்தது. ஐந்து வாரங்கள் சிறையில் இருந்து வெளியேறிய பகத் சிங், 1928-ல் தொழிலாளர் மற்றும் உழவர் கட்சியில் இணைந்தார். அச்சங்கத்தின் செயலாளராகப் பொறுப்பேற்று, 1928-ல் அகில இந்தியப் புரட்சியாளர் சந்திப்பினை நடத்தினார்.

இந்தியாவின் அரசியல் நிலைமையைப் பற்றி அறிக்கை அளிக்க ஆங்கிலேய அரசு 1928-ல் சைமன் ஆணையக் குழுவை அமைத்தது. அக்குழுவில் ஓர் இந்திய உறுப்பினர்கூட இல்லாததால், இந்திய அரசியல் கட்சிகள் அனைத்தும் அதனைப் புறக்கணித்தன. அவ்வாணையத்திற்கு எதிராக முதுபெரும் காங்கிரசு தலைவர் லாலா லஜபதி ராய், அகிம்சை வழியில் அமைதி பேரணியை நடத்தினார். அச்சம்பவத்தின் போது, வன்முறையைக் காவலர்கள் கடைபிடித்தனர். காவலர்களுக்குத் தடியடி நடத்த உத்தரவு பிறப்பித்ததோடு நில்லாமல், காவல் மேலதிகாரி ஜேம்ஸ் ஏ ஸ்காட், லாலா லஜபதி ராயையும் தாக்கினார். கடுமையாகத் தாக்கப்பட்ட லாலா லஜ்பதி ராய், 1928, நவம்பர் 17-ல் காலமானார். லஜபதிராயின் மரணத்துக்குக் காரணமான போலீஸ் அதிகாரி ஸ்காட் உயிரைப் பறிப்பதற்காகப் பகத் சிங்கும் அவரது நண்பர்களும் போட்ட திட்டம், ஜே.பி. சாண்டர்ஸ் என்னும் இன்னொரு அதிகாரியின் உயிரைப் பறித்துவிட்டது.

இதற்கிடையே, பிரிட்டிஷ் அரசாங்கத்தின் மக்கள் விரோத மசோதாக்கள் மீது எதிர்ப்பைக் காட்டும் வகையில் பகத் சிங்கும் பி.கே. தத்தும் சட்டசபைக்குள் நுழைந்து இரண்டு குண்டுகளை வீசினார்கள். இந்த வழக்கில் அவர்களுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. ஜே.பி. சாண்டர்ஸ் கொலை வழக்கில் சுகதேவ், இராஜகுருவுடன் பகத் சிங்குக்கும் சேர்த்துத் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டு, குறித்த தேதிக்கு ஒரு நாளுக்கு முன்பாக, மாலையில் தண்டனை நிறைவேற்றப்பட்டது. (வழக்கமாக அதிகாலையில்தான் தண்டனை நிறைவேற்றப்படும். ஆனால், பகத் சிங்கிற்கு மாலையில் தூக்குத்தண்டனை நிறைவேற்றப்பட்டது. தனது 24-வது வயதில் பகத் சிங் 1931-ம் ஆண்டு, மார்ச் 23-ம் நாள் தூக்கிலிடப்பட்டார்.

லால் லஜபதி ராயின் மரணத்திற்குக் காரணமான அதிகாரியைக் கொன்றது தொடர்பில், மகாத்மா காந்தி அக்கொலைச் சம்பவத்திற்குக் கண்டனம் தெரிவித்தார். மேலும், பகத் சிங்கின் தூக்குத் தண்டனையின் போது, ஆங்கிலேயர்கள் கேட்டத் தூக்குத் தண்டனையை அங்கீகரிக்கும் பத்திரத்திலும், காந்தி கையொப்பம் இட்டார். அகிம்சையைப் பின்பற்றும் காந்தி, இம்சையைத் தரும் தூக்குத்தண்டனைக்கு ஒப்புதல் அளிக்கலாமா என்பது போன்ற கருத்துக்கள் மக்களால் முனுமுனுக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது. ‘தி லெஜண்ட் ஆஃப் பகத் சிங்’ எனும் இந்தித் திரைப்படத்தில், இது தொடர்பிலான காட்சிகள் படமாக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

பகத் சிங் தூக்கிலிடப்பட்டு, சுமார் 87 ஆண்டுகள் கடந்தும், இன்னமும் அவர் ஒரு புரட்சியாளனாக உலக மக்கள் மத்தியிலும் போராட்டவாதிகள் மத்தியிலும் உயிர்க்கொண்டிருப்பதற்கு அவர் இந்திய விடுதலைப் போராளி என்பது மட்டும் காரணமல்ல. மாறாய், தீவிரச் சிந்தனையாளராகவும், இளம் வயதிலேயே வாசிப்பு தன்மையோடு, புரட்சி சிந்தனை மற்றும் செயல்பாட்டோடும் சோசலிசப் பாதையில் ஏகாதிபத்தியத்தின் அனைத்து வடிவங்களையும் எதிர்த்து போராடியப் புரட்சியாளனாய் உலா வந்ததுதான் பெரும் காரணம் எனலாம்.

இன்றைக்கும் உலக அரங்கில் புரட்சிக்குப் போராட்டவாதிகள் சே குவேராவின் படத்தை ஏந்துவது போல், இந்தியத் துணைக் கண்டத்தில் பகத் சிங் தான் உயிர்க்கொள்கிறார். ‘பகத் சிங்’ இந்தியத் துணைக்கண்டத்தின் சே குவேரா என்று இன்றளவும் போற்றப்படுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

“என் வாழ்க்கை, ஓர் உன்னத இலட்சியத்திற்காக ஒப்படைக்கப்பட்டிருக்கிறது, இந்திய விடுதலைதான் அந்த இலட்சியம். அதன் காரணமாக, வசதி வாய்ப்புகளுக்கும் உலகியல் ஆசைகளுக்கும் என் வாழ்வில் இடமில்லை!” என, திருமண ஏற்பாடுகளை தனது தந்தை மேற்கொண்டதை அறிந்தபோது, கடிதம் எழுதி வைத்துவிட்டு, புரட்சிப் பாதையை நோக்கி வீட்டைவிட்டு வெளியேறினார் பகத் சிங்.

பிரிட்டிசாரை வெளியேற்றி விட்டு இன்னொரு அதிகாரத் தரப்பிடம் ஆட்சியை ஒப்படைப்பதால் எவ்வித நன்மையும் விளையாது, சோசலிச மாற்றத்தால்தான் மக்கள் விடுதலையும் மக்கள் நன்மையும் நிலைகொள்ளும் எனும் சிந்தனையைப் பகத் சிங் விதைத்தார். மேலும், புரட்சி என்பது உலகத்தின் ஒரு சட்டம், அது மனித வர்க்க முன்னேற்றத்தின் இரகசியம் என்றும், அதில் புனிதத்துவச் சங்கிலிகள் பிணைக்கப்பட வேண்டிய அவசியமில்லை என்றும், தனிநபர் பழிவாங்கல் புரட்சிகரத்தின் நோக்கமல்ல என்றும் கூறினார்.

பகத் சிங் குறித்து கூறுகையில் அவரைச் சோசலிசு என்றும், மார்க்சிய – கம்யூனிசம் என்றும் குறிப்பிடுகிறார்கள். ஒரு புரட்சியாளனுக்கு உரிய சிந்தனையோடும் போராட்டத்தோடும், மனித விடுதலைக்குப் போராடிய மாவீரன்தான் பகத் சிங்.

பகத் சிங் சிறையில் இருக்கும் போது அவரைச் சந்தித்த அவரது தாயார், தனது அழுகையை அடக்கி கொண்டு, “ஒவ்வொருவரும் ஒருநாள் மடிய வேண்டியவரே, ஆனால், உலகம் நினைவில் வைத்துப் போற்றும் மரணம்தான் மிகச் சிறந்தது” என்று கூறினார்.

சிறையில் இருந்தபோது, பகத் சிங் அதிகமாகப் புத்தகங்கள் வாசித்தார். வாசிக்கும் ஒவ்வொரு புத்தகத்தில் இருக்கும் முக்கியமானவற்றைக் குறிப்பெடுத்து வைத்திருந்தார். அவரது அக்குறிப்புகள் பின்னர் புத்தகமாகவும் வெளிவந்தது.

அவர் சிறையில் இருந்த காலத்தில்தான், “தி டோர் டு டெத்” (The Door To Death) மற்றும் “ஐடியல் ஆஃப் சோசலிசம்” (Ideal Of Socialist) போன்ற புத்தகங்களை அவர் எழுதினார். சோசலிசம் மட்டுமின்றி பல்வேறு துறைகள் சார்ந்த புத்தகங்களையும் சிறையில் வாசித்த பகத் சிங்கிற்கு புத்தகமும் துப்பாக்கியும் தான் நெருங்கிய நண்பர்கள் எனலாம். தூக்கிலிடப்படுவதற்கு முன்னர், “தி ரிவோலுசனரி லெனின்” (The Revolutionary Lenin) எனும் புத்தகத்தைப் பகத் சிங் வாசித்தார்.

1931, மார்ச் 24-ம் தேதி, தூக்கிலிடப்பட வேண்டிய பகத் சிங் மற்றும் அவரது இரு தோழர்களும், 11 மணி நேரங்களுக்கு முன்னர், அதாவது, 23-ம் தேதியேத் தூக்கிலிடப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக தூக்கிலிடப்படுவது குறித்து எவ்வித கவலையும் கொள்ளாத அந்த மூன்று புரட்சியாளர்களையும், தூக்கு மேடை நோக்கி அழைத்துச் சென்றபோது அவர்கள் தங்களுக்கு மிகவும் பிடித்தமான புரட்சிப் பாடலைப் பாடிக்கொண்டே சென்றனர். அப்பாடல் :

நாங்கள் சுதந்திரமாக இருக்கும் ஒரு நாள் வரும் 
இது எங்கள் மண்ணாக இருக்கும்
 
இது எங்கள் வானமாக இருக்கும்
 
தியாகிகளின் உடல்கள் எரிக்கப்பட்ட நிலங்களில்
 
மக்கள் கூடுவார்கள்
 
மண்ணுக்காக உயிர்நீத்த அவர்களுக்கு
 
மரியாதை செலுத்துவார்கள்.”

மார்ச் மாதம் 23-ம் தேதி, 1931-ல், பகத் சிங் மற்றும் அவரோடு மேலும் இரு புரட்சியாளர்களான சுகதேவ் மற்றும் இராஜகுரு ஆகிய மூவரும் மனித விடுதலைகான புரட்சிக்காக விதைக்கப்பட்டார்கள். ‘பகத் சிங்’ காலத்தால் மறைக்க முடியாது மாபெரும் புரட்சியாளன், மக்கள் விடுதலையின் மாவீரன்.