முகிதீன் அறிவித்த ஊழியர் சேமநல நிதி EPF மீளப் பெறும் திட்டம் பிற்போக்குத்தனது

லிம் கிட் சியாங் | ஏப்ரல் 1 முதல் அடுத்த 12 மாதங்களுக்கு ஊழியர் சேமநல நிதி பங்களிப்பாளர்களை தங்களின் இரண்டாம் கணக்கிலிருந்து ஒரு மாதத்திற்கு RM500 வரை மீளப் பெற்றுக்கொள்ள அனுமதிக்கும் என்ற பிரதமர் முகிதீன் யாசினின் பரிந்துரை ஏமாற்றமளிக்கிறது. இது கோவிட்-19 நெருக்கடியால் பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கு உதவுவதற்கான நன்கு சிந்திக்கப்பட்ட திட்டம் அல்ல.

இதனால்தான் இது எல்லா இடங்களிலும் விமர்சனங்களைப் பெற்றுள்ளது.

பிரதம மந்திரி தனது திட்டத்தை மாற்றியமைக்க தேசிய பாதுகாப்பு கவுன்சில் மற்றும் அமைச்சரவையின் அவசரக் கூட்டத்தைக் கூட்ட வேண்டும். கோவிட்-19 நெருக்கடியால் பாதிக்கப்பட்ட மலேசியர்களுக்காக அரசாங்க இருப்புக்களிலிருந்து அரசாங்கம் பண உதவி வழங்குவதாக அறிவிக்க வேண்டும்.

பி.கே.ஆர் தலைவர் அன்வார் இப்ராஹிமின் பரிந்துரைக்கு நான் ஒப்புக்கொள்கிறேன். மத்திய அரசு நாட்டின் இருப்புக்களைப் பயன்படுத்த வேண்டும். அல்லது, கோவிட் -19 நெருக்கடியால் நிதி ரீதியாக பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்காக, ஊழியர் சேமநல நிதி சேமிப்பிலிருந்து அல்லாமல், மாநில எண்ணெய் மற்றும் எரிவாயு நிறுவனமான பெட்ரோலிய நேஷனல் (Petroleum Nasional Bhd (Petronas)), பங்களிப்பை அதிகரிக்க வேண்டும்.

Bantuan Sara Hidup (BSH) திட்டத்தின் மூலம் மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களுக்கு RM1,000 செலுத்துதலுடன் தொடங்கி அவசரகால நிதியை விநியோகிக்க வேண்டும் என்ற பக்காத்தான் ஹராப்பானின் பரிந்துரைக்கு அரசாங்கம் தீவிர கவனம் செலுத்த வேண்டும்.

இந்த திட்டத்திற்கு நிதியளிக்க அரசாங்கம் அதன் இருப்புக்களை தோண்டி எடுக்க வேண்டும், இதற்கு சுமார் RM8.2 மில்லியன் செலவாகும்.

மலேசிய தொழிற்சங்க காங்கிரஸ் (The Malaysian Trades Union Congress (MTUC)) முகிதீனின் பரிந்துரையை ஒரு பிற்போக்குத்தனமான நடவடிக்கையாக உள்ளது என கண்டித்துள்ளது. இது ஊழியர் சேமநல நிதி பங்களிப்பாளர்களின் நீண்டகால சேமிப்பைக் குறைக்கும் என கூறியுள்ளது.

மலேசியர்கள் அனைவரும் எம்.டி.யூ.சி பொதுச்செயலாளர் ஜே.சோலமனின் கருத்துக்கு உடன்படுவார்கள். நாட்டில் மில்லியன் கணக்கான தொழிலாளர்களுக்கு உதவ நிதி செலுத்துமாறு எம்.டி.யூ.சி அரசாங்கத்திடம் கேட்கும் நேரத்தில், அரசாங்கம் அதற்கு பதிலாக தொழிலாளர்களைக் அவர்களின் வருங்கால, வயதான கால சேமிப்பு வைப்பு நிதியில் இருந்து பணத்தை எடுத்து செலவழிக்க கேட்க முயல்கிறது என்று புகார் கூறினார்.

இது முகிதீன், அவரது அமைச்சர்கள் மற்றும் உயர் ஆலோசகர்கள் எடுத்திருக்கும் மற்றொரு தவறான முடிவாகும். அவர்கள் உண்மையிலேயே தொழிலாளர்களுக்கு உதவக்கூடிய மற்றும் உயிர்கள், வாழ்வாதாரங்கள் மற்றும் வேலைகளை காப்பாற்ற வடிவமைக்கப்பட்ட நிதி தொகுப்புகளை மீண்டும் கலந்தாலோசித்து வரையறுக்க வேண்டும்.

மலேசியாவில் உள்ள அனைத்து துறைகளுக்கும் உதவ சரியான மற்றும் பொருத்தமான திட்டங்களை முன்வைக்க அரசாங்கம் முனைய வேண்டும். திறனாகவும் சுறுசுறுப்புடன் செயல்பட வேண்டும் என்பதும் கட்டாயமாகும்.

கடந்த 24 மணி நேரத்தில் 212 புதிய கோவிட்-19 பாதிப்புகள் அதிகரித்துள்ளன. ஜனவரி பிற்பகுதியில் பாதிப்பு தொடங்கியதிலிருந்து இது மிக உயர்ந்த தினசரி அதிகரிப்பை காட்டுகிறது. இதனால் நாம் கோவிட்-19 பாதிப்பின் உச்சத்தை எட்டிவிட்டோம் என்று கூறமுடியாது. நடமாட்ட கட்டுப்பாடு ஆணை (MCO) மார்ச் 31க்கு மேல் நீட்டிக்கப்படாது என்றும் அர்தமாகிவிடாது.

பல மலேசியர்களுக்கு நடமாட்ட கட்டுப்பாடு ஆணையின் நோக்கம் மற்றும் கூடல் இடைவெளி (social distancing) ஏன் இருக்க வேண்டும் என்பது பற்றி இன்னும் முழுமையாக அறிந்திருக்கவில்லை. நடமாட்ட கட்டுப்பாடு ஆணையின் போது அதிகமான மலேசியர்கள் வீட்டில் தங்குவதை உறுதிப்படுத்த பின்வரும் இரண்டு எடுத்துக்காட்டுகள் உதவும் என்று நம்புகிறேன்.

முதலாவதாக, தென் கொரியாவின் ‘நோயாளி 31’ பற்றிய ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் உள்ளது. 35 வயதான ஒரு பெண்மணி “முற்றிலும் நன்றாக” இருப்பதாக உணர்ந்தார். ஆனால் தென் கொரியாவின் மொத்த 8,961 உறுதிப்படுத்தப்பட்ட கோவிட்-19 பாதிப்புகளில் 1,200 தொற்றுநோய்க்கு காரணமானவராக அவர் இருந்துள்ளார். இது தென் கொரியாவில் கோவிட்-19 கிருமி தொற்று சங்கிலியை உடைக்க சமூக கூடல் இடைவெளியின் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டுகிறது.

இரண்டாவதாக, கொரோனா வைரஸின் பரவலை எதிர்த்துப் போராடுவதற்கு கிரீஸ் ஒரு சில விதிவிலக்குகளுடன் நடமாட்டத்திற்கு ஒரு தடையை விதித்தது.

கோவிட்-19 நோய்த்தொற்றுகளின் அடிப்படையில் கிரீஸ் மலேசியாவை விட மிகவும் பின்னால் இருக்கிறது – மலேசியாவின் மொத்த 1,518 வழக்குகள் மற்றும் 14 இறப்புகளை ஒப்பிடும்போது கிரீஸில் ஞாயிற்றுக்கிழமை கடைசி 24 மணி நேரத்தில் 624 பாதிப்புகள், 15 இறப்புகள் மற்றும் 94 பாதிப்புகளின் அதிகரிப்பு மட்டுமே ஏற்பட்டுள்ளன.

கிரேக்க பிரதம மந்திரி கிரியாக்கோஸ் மிட்சோடாகிஸ் ஞாயிற்றுக்கிழமை நேரடி ஒளிபரப்பில் கிரேக்க செயல் முடக்கத்தை (lockdown) அறிவித்தபோது கூறியது இதுதான்:

“இத்தாலியில், ஒவ்வொரு இரண்டு நிமிடங்களுக்கும் ஒரு நபர் இறக்கிறார். உலகம் முழுவதும் நிலைமை மோசமடைந்து வருகிறது. இதுபோன்ற ஒரு சோதனைக்கு நம் நாட்டை அனுமதிக்காமல் இருப்பது எனது கடமை.”

இத்தாலியில் மருத்துவமனை படுக்கை பற்றாக்குறையினால் மருத்துவர்களின் எடுக்கும் துயரமான முடிவுகளைப் பற்றி அவர் குறிப்பிடுகையில்: “யார் வாழ்வார்கள், யார் இறப்பார்கள் என்பதை தீர்மானிக்கும் நிலைக்கு நாம் ஒரு போதும் வந்துவிடக் கூடாது. நான் ஒரு விஷயத்தை மட்டுமே தேர்வு செய்கிறேன்: கிரேக்கர்களின் உயிர்கள் மற்றும் ஆரோக்கியம். அதுவே எனக்கு மிக மிக்கியமானது.”

உலகளவில், கோவிட்-19 தொற்றுநோய் பற்றிய செய்தி கடுமையானதாகவே உள்ளது, இங்கிலாந்து இன்று நாட்டை முடக்குவதில் (locking down the country) மற்ற நாடுகளுடன் இணைகிறது.

கொரோனா வைரஸிலிருந்து திங்களன்று 602 புதிய இறப்புகள் ஏற்பட்டதாக இத்தாலி தெரிவித்துள்ளது. மொத்த இறப்பு 6,077 ஆக உயர்ந்துள்ளது. அந்நாட்டில் பாதிப்புகள் 63,928 ஆக உயர்ந்துள்ளது.

மொத்தம் 63,928 பாதிப்புகளுடன், இத்தாலி, சீனாவின் மொத்த 81,093 உறுதிப்படுத்தப்பட்ட கோவிட்-19 பாதிப்புகளை எட்டிப் பிடிக்கிறது. இது மிகவும் தீவிரமானது. சீனாவின் 1.4 பில்லியன் மக்கள்தொகையுடன் ஒப்பிடும்போது இத்தாலி 60 மில்லியனுக்கும் குறைவான மக்கள்தொகையைக் கொண்டுள்ளது.

இங்கிலாந்தில், கோவிட்-19வைரஸ் நோயால் இறந்தவர்களின் எண்ணிக்கை 54 அதிகரித்து, மொத்த இறப்பை 335 ஆக உயர்ந்துள்ளது. அந்நாட்டில் மொத்தம் 6,650 பாதிப்புகள் பதிவாகியுள்ளன.

அமெரிக்காவில், ஜான் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக தரவுகளின்படி, பாதிப்புகளின் எண்ணிக்கை 35,000ஐ தாண்டியுள்ளது, இறந்தவர்களின் எண்ணிக்கை 495 ஆகும்.

உலகளவில் கோவிட்-19 நோயால் 15,400க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர். ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் சேகரித்த தரவுகளின்படி, உலகெங்கிலும் உள்ள இந்த நோயால் பாதிக்கப்பட்ட 362,000 பேரில் 100,000 பேர் குணமடைந்து மீண்டுள்ளனர்.

திங்களன்று, உலக சுகாதார அமைப்பின் (WHO) இயக்குநர் ஜெனரல் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ், “தொற்றுநோய் துரிதப்படுகிறது” என்று எச்சரித்தார். இதனால் உலகளவில் பாதுப்புகள் 67 நாட்களில் 100,000ஐ எட்டும். மேலும் 11 நாட்களில் 200,000ஐ அடையும். மேலும் நான்கு நாட்களில் 300,000ஐ எட்டும் என்று எச்சரித்தார்.

ஒவ்வொரு மலேசியரும் கோவிட்-19க்கு எதிரான உலகப் போரில் ஒரு பங்கை வகிக்க முடியும் என்பதை முடிவு செய்ய வேண்டும். இத்தாலி, அமெரிக்கா, ஸ்பெயின், பிரான்ஸ், ஈரான் மற்றும் ஜெர்மனி போன்ற நாடுகளின் நிலைக்கு சென்றுவிடாமல் கோவிட்-19க்கு எதிரான போரில் வெற்றி பெறுவோம் என்று தீர்மானத்தை மலேசியா எடுக்க வேண்டும். அனைவரும் வீட்டில் தங்கியிருப்பதன் மூலம் கோவிட்-19 நோய்த்தொற்றின் சங்கிலியை உடைக்க முடியும். இதனால் கோவிட்-19 நோய்த்தொற்றுகள் மற்றும் இறப்புகளின் அதிகரிப்பைக் கட்டுப்பத்த முடியும்.

லிம் கிட் சியாங் – இஸ்கண்டார் புத்ரி எம்.பி. மற்றும் டிஏபி மத்திய குழு உறுப்பினர் ஆவார்.

இங்கே வெளிப்படுத்தப்பட்ட கருத்துகள் எழுத்தாளர் / பங்களிப்பாளரின் கருத்துக்கள் மட்டுமே. அவை மலேசியாகினியின் கருத்துக்களைக் குறிக்கவில்லை.