அவதியில் மக்கள் – அரசியலுக்கு ஓய்வு கொடுங்கள்

இராகவன் கருப்பையா – ரோம் நகர் பற்றி எரியும் போது ஃபிடில் வாசித்தாராம் நீரோ மன்னன் – இந்த கதையாக நம் நாட்டின் நிலைமை ஆகக்கூடாது.

கோவிட்-19 எனும் கொடிய அரக்கனை சமாளிப்பதற்கு நாடே போராடிக் கொண்டிருக்கும் சூழலில், திரை மறைவில் அரசியல் சித்து விளையாட்டு இன்னும் ஓயவில்லை என்றுதான் தெரிகிறது.

மலேசியாவில் இதுவரையில் 1,518 பேரை  தொற்றியுள்ள கோவிட்-19 கொடிய நோயினால் 2 வார கால நடமாட்ட கட்டுப்பாட்டு ஆணையின் கீழ் நாடே உறைந்து நிற்கின்றது.

இந்நிலையில் 4 தினங்களுக்கு முன் பிரதமர் முஹிடின் தனது பெர்சத்து கட்சியின் தலைமைச் செயலாளர் மர்சுக்கி யஹ்யாவை அதிரடியாக பதவி நீக்கம் செய்த நடவடிக்கை நாட்டு மக்களின் கவனத்தை திசை திருப்பியது.

இந்நோய் பரவியுள்ள மொத்தம் 168 நாடுகளில் மலேசியாவுக்கு 22ஆவது இடம் என்ற தகவல் நமக்கு கவலையையும் அச்சத்தையும் உண்டாக்குகிறது. இதனை கட்டுப்படுத்துவதற்கு எல்லா நாடுகளுமே முழு கவனத்தையும்  ஒருமைப்படுத்தி கடுமையாக போராடிக்கொண்டிருக்கிறது.

விரைவில் நடைபெறவிருக்கும் அந்த கட்சியின் தேர்தலில் தனது அணியின் நிலையை பலப்படுத்திக்கொள்ளும் நோக்கத்தில் மர்சுக்கியை முஹிடின் பதவி நீக்கம் செய்தார் என்று நம்பப்படுகிறது. ஏனென்றால் மர்சுக்கி மகாதிரின் ஆதரவாளர்.

கட்சியின் அவைத்தலைவர் என்ற முறையில் தம்முடன் முஹிடின் இது குறித்து கலந்தாலோசித்திருக்க வேண்டும் என்று குறிப்பிட்ட மகாதிர், தமது ஒப்புதல் இல்லாமல் மர்சுக்கியை தன்னிச்சையாக அவர் நீக்கியது செல்லாது மட்டுமின்றி அது சட்டவிரோதமானதும் கூட என்று கடிந்துகொண்டார்.

எனினும் முஹிடினின் வாதமோ வேறு. கட்சித் தேர்தல் நடைபெறும் வரையில் தாமே இடைக்கால அவைத் தலைவர் பொறுப்பையும் வகிப்பதாக பிரகடனப்படுத்திக்கொண்டார்.

கடந்த 2015ஆம் ஆண்டில் அம்னோவிலிருந்து நீக்கப்பட்ட முஹிடினின் அரசியல் வாழ்க்கை ஏறக்குறைய அஸ்தமனம் ஆகிவிட்டது. அந்நிலையில் அவரை அரவணைத்து பெர்சத்து கட்சியை அமைத்து அவருக்கு மீண்டும் அரசியல் உயிரூட்டியது மகாதிர்தான் என்பதை யாரும் மறுக்க முடியாது.

ஆனால் அதே முஹிடின் தற்போது மகாதிரை பறம் தள்ளி மக்களால் ஒதுக்கப்பட்டவர்களுடன் சேர்ந்து அரசாங்கத்தை அமைத்தது மகாதிரின் அரசியல் வாழ்க்கையில் மிகப் பெரியதொரு பின்னடைவு என்பதும் நாம் அறிந்த ஒன்றுதான்.

ஆக அக்கட்சியின் நிலைமை இழுபறியாக இருக்கும் இத்தகைய சூழலில், நாட்டை மிரட்டிக்கொண்டிருக்கும் பூதாகரப் பிரச்னை மீது அவர்களால் முழு கவனம் செலுத்த முடியாமல் இருப்பது மிகவும் வேதனையான விசயம். ஏனென்றால் இவர்களுடைய அரசியல் விளையாட்டினால் பாதிக்கப்படுவது பொது மக்கள்தான்.