கோவிட்-19: மேலும் நான்கு இறப்புகள், 73 சுகாதார உறுப்பினர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்

கோவிட்-19: மேலும் நான்கு இறப்புகள், 73 சுகாதார உறுப்பினர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்

கோவிட்-19 பாதிப்பு தொடர்பான மேலும் நான்கு இறப்புகள் இன்று பதிவாகியுள்ளன. இறப்பு எண்ணிக்கை இப்போது 19-ஆக உள்ளது என்று மலேசிய சுகாதார அமைச்சின் இயக்குநர் ஜெனரல் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா தெரிவித்தார்.

இன்று பிற்பகல் 1 மணிக்கு பிரதமர் முகிதீன் யாசின் அறிவித்தபடி, இன்று பிற்பகல் கோவிட்-19 பாதிப்புகளின் எண்ணிக்கை 1,796 என்று அவர் மேலும் தெரிவித்தார்.

16-வது மரண ‘நோயாளி 1334’ என அடையாளங்காணப்பட்டுள்ளது. அவர் 75 வயதான மலேசிய குடிமகன்; நீண்டகால நோய் வரலாற்றைக் கொண்டுள்ளவர்.

“17-வது மரண பதிவு 66 வயதான மலேசிய குடிமகன் (‘நோயாளி 1251’). இவருக்கும் நீண்டகால நோயின் வரலாறு உள்ளது. இவருக்கு, ஒரு கோவிட்-19 பாதிப்பு கொண்டவரோடு தொடர்பு கொண்ட வரலாறும் இருப்பதாக சந்தேகிக்கப்படுகிறது.

“18-வது மரண பதிவு ‘நோயாளி 1625’, 56 வயதான மலேசிய குடிமகன். நீண்டகால நோயின் வரலாறும் அவருக்கு இருந்தது.

“19-வது மரண பதிவு ‘நோயாளி 1246”, 68 வயதான மலேசிய பெண். அவர் மார்ச் 19, 2020 அன்று ஜோகூரின் சுல்தானா நோரா இஸ்மாயில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது உடல்நிலை மோசமடைந்தது. அவருக்கு ஐ.சி.யுவில் சுவாச உதவி வழங்கப்பட்டது. பின்னர் அவர் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது,” என்று அவர் கூறினார்.

டாக்டர் நூ ஹிஷாம் 172 புதிய பாதிப்புகளையும் அறிவித்தார்.

புதிய பாதிப்புகளில், 71 கோலாலம்பூர் ஸ்ரீ பெட்டாலிங்கில் உள்ள தப்லீக் கூட்டத்தைச் சேர்ந்தவை என அடையாளம் காணப்பட்டுள்ளது.

மீதமுள்ள 101 பாதிப்புகளுக்கான நோய்த்தொற்றின் ஆதாரம் இன்னும் விசாரணையில் உள்ளது என்று டாக்டர் நூர் ஹிஷாம் கூறினார்.

கோவிட்-19 பாதிப்பினால், 73 சுகாதார உறுப்பினர்களும் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் அறிவித்தார். அதன்படி, கோவிட்-19ஐக் கண்டறிய 1,895 சுகாதாரப் பணியாளர்கள் சுகாதார பரிசோதனைகளை மேற்கொண்டதாக அவர் கூறினார்.