பிளட்ஷாட் – விமர்சனம்

கொலம்பியா பிக்சர்ஸ் மற்றும் வெலியன்ட் காமிக்ஸ் தயாரிப்பில் டேவிட் வில்சன் இயக்கத்தில் வின் டீசல், எய்சா கான்சலஸ்,சாம் ஹி

கொலம்பியா பிக்சர்ஸ் மற்றும் வெலியன்ட் காமிக்ஸ் தயாரிப்பில் டேவிட் வில்சன் இயக்கத்தில் வின் டீசல், எய்சா கான்சலஸ்,சாம் ஹியூகன் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகி இருக்கும் சூப்பர் மேன் படம் பிளட்ஷாட். ரே காரிசன் (வின் டீசல்)… ஒரு மர்மமான கும்பலால் கடத்தப்பட்டு மனைவி, தான் உட்பட கொலை செய்யப்படுகிறார்.

மீண்டும் உயிர் பிழைத்து எழுந்திருக்கும் ரே விஞ்ஞானி  எமில் கார்டிங் வழியாக கம்ப்யூட்டர் கோடிங் மூலம் செயற்கை முறையில் தான் மீண்டும் புதிதாக உருவாக்கப்பட்டிருப்பதை புரிந்து கொள்கிறார். மேலும் கத்தியால் கிழித்தாலும் சரி துப்பாக்கியால் சுட்டாலும் சரி அவ்வளவு சுலபமாக மரணம் ஏற்படாத வகையில் தான் உருவாக்கப்பட்டிருப்பதை புரிந்து கொள்கிறார் ரே.

ரேயின் நினைவுகளில் தன்னையும் தன் மனைவியையும் கொலை செய்த வில்லனின் முகம் மட்டும் மறக்காமல் அப்படியே ஞாபகம் இருக்க ஆராய்ச்சிக் கூடத்தின் கட்டுப்பாடுகளை மீறி அந்த வில்லனை தேடிச்சென்று கொலையும் செய்கிறார். ஆனால் இது அத்தனையுமே திட்டமிடப்பட்ட சதி என்பது ரேவுக்கு கொஞ்சம் கொஞ்சமாக தெரிய வருகிறது.

அது என்ன சதி அதை எப்படி பிளட்ஷாட் என்னும் சூப்பர் மேனாக இருக்கும் ரே முறியடித்தார் என்பது கிளைமாக்ஸ். மார்வெல், டிசி காமிக்ஸ்களை அடிப்படையாகக்கொண்ட சூப்பர் மேன் படங்கள் வரிசையில் புதிதாக சேர்ந்திருக்கிறது வேலியன்ட் கமிக்ஸ். இந்த வேலியன்ட் காமிக்ஸில் முதல் சூப்பர்மேன் படம்தான் பிளட்ஷாட்.

ஆக்ஷன் சேசிங் பரபர காட்சிகள் என்றாலே வின் டீசலுக்கு அல்வாதான். இந்தப்படத்திலும் தனது கிளாஸ் மாஸ் ஆக்ஷன் நடிப்பை கொடுத்திருக்கிறார். நாயகி எய்சா கான்சலஸ் செம ஸ்டைலிஷ். ஆக்ஷன் காட்சிகளிலும் அலப்பறை காட்டுகிறார். எனினும் இந்தப் படத்தில் காதல் ரொமான்ஸ் பாகங்கள் எய்சாவுக்கு இல்லை. ஒருவேளை அடுத்தடுத்த பாகங்களில் இருக்கலாம் என்றே தோன்றுகிறது. ஜாக்குவெஸ் ஜஃப்ரெட் ஒளிப்பதிவில் லிப்ட் சண்டைக்காட்சிகள், சப்வே சூட்டிங் காட்சிகள் என சில இடங்கள் கண்களுக்கு விருந்தாக அமைக்கப்பட்டுள்ளன.

மேலும் ஸ்டீவ் ஜாப்லன்ஸ்கி பின்னணி இசையில் காட்சிகளுக்கு கூடுதல் பிரம்மாண்டம் சேர்க்கப்பட்டிருக்கிறது. எனினும் சூப்பர் மேன் கதைக்கு இன்னும் ஏதோ ஒன்று குறைகிறது. ஒருவேளை அடுத்தடுத்த பாகங்கள் வெளியானால் இந்த குறை மறையும் என நம்பலாம். கதை சொல்லலில் நிறைய தடுமாற்றம் தெரிகிறது. நாயகனின் மனைவி ஏன் பிரிந்தார் என்பதற்கான காரணம் இல்லை. ஊருக்குள் இத்தனை பெரிய அளவில் பிரச்னைகள் உண்டாகும் போது போலீஸ் ராணுவம் என யாருமே கண்டு கொள்ளாமல் இருப்பதும் சற்று நெருடலாகவே தெரிகிறது. மொத்தத்தில் பிளட் ஷாட் மார்வெல், டிசி படங்கள் அளவிற்கு இல்லையென்றாலும் ஒரு நல்ல ஆக்சன் திரைப்படமாக பார்வையாளர்களை கவரும்.

dinakaran