கொரோனா வைரஸ் தொற்று: இலங்கையில் முழுமையாக முடங்கிய தமிழ் மற்றும் முஸ்லிம் கிராமங்கள்

இலங்கையின் களுத்துறை மாவட்டத்தின் அட்டுளுகம கிராமத்தை முடக்குவதற்குப் பாதுகாப்பு பிரிவினர் இன்று நடவடிக்கை எடுத்துள்ளனர்.

கொவிட் 19 வைரஸ் தாக்கத்தை இல்லாதொழிக்கும் வகையிலேயே இந்த தீர்மானத்தை எட்டியுள்ளதாகப் பாதுகாப்பு பிரிவினர் தெரிவிக்கின்றனர்.

குறித்த கிராமத்தைச் சேர்ந்த ஒருவருக்கு ஏற்கனவே கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த நபர் தனக்கு கொரோனா தொற்று உள்ளமையை அறியாது, அந்த கிராமத்திலுள்ள பல வீடுகளுக்குச் சென்றுள்ளமை பின்னர் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகப் பாதுகாப்பு பிரிவினர் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதற்கமைய, அட்டுளுகம பகுதியிலுள்ள 26 வீடுகளைச் சேர்நவர்கள் சுய கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக போலீஸார் குறிப்பிடுகின்றனர்.

குறித்த கிராமத்திலிருந்து எந்தவொரு நபருக்கும் வெளியில் செல்லவோ அல்லது வேறு நபர்களுக்குக் குறித்த கிராமத்திற்குள் பிரவேசிப்பதற்கோ பாதுகாப்பு பிரிவினரால் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

இந்த பகுதியிலுள்ள பெரும்பாலானோர் முஸ்லிம்கள் என தகவல்கள் குறிப்பிடுகின்றன.

அத்துடன், குறித்த பகுதிக்கு போலீஸ் விசேட அதிரடி படையினர் மற்றும் இராணுவத்தினர் கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுக் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.

இதேவேளை, யாழ்ப்பாணம் – தாவடி பகுதியைப் பாதுகாப்பு பிரிவினர் ஏற்கனவே முழுமையாக முடக்கியுள்ளனர்.

தாவடி பகுதியிலுள்ள ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருந்த பின்னணியிலேயே குறித்த பகுதி முழுமையாக முடக்கப்பட்டதாக பாதுகாப்பு பிரிவினர் குறிப்பிடுகின்றனர்.

தற்போது தாவடி பகுதியிலுள்ள அனைவரும் சுய கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஊரடங்கு சட்டத்தை மீறி பள்ளிவாசல் சென்றவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை

இலங்கையில் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், ஹொரொவ்பத்தானை பகுதியிலுள்ள முஸ்லிம் பள்ளவாசலொன்றில் தொழுகையில் ஈடுபட்டவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க போலீஸார் தீர்மானித்துள்ளனர்.

தொழுகை நடவடிக்கைகளின் போது பாதுகாப்பு பிரிவினர் குறித்த பள்ளிவாசலுக்கு சென்ற போது, அங்கிருந்த பெரும் எண்ணிக்கையிலானோர் தப்பிச் சென்றுள்ளதாக போலீஸார் தெரிவிக்கின்றனர்.

ஹொரொவ்பத்தானை பகுதியிலுள்ள முஸ்லிம் பள்ளிவாசலின் தலைவர் உள்ளிட்ட 18 பேருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

தொழுகையின் போது தப்பிச் சென்றதாக கூறப்படும் சந்தேகநபர்களை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை பாதுகாப்பு பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.

ஊரடங்கு சட்டத்தை மீறியவர்களுக்கு பிணை கிடையாது

போலீஸ் ஊரடங்கு சட்டத்தை மீறிய நபர்களுக்கு போலீஸ் பிணை வழங்கப்படாது என பிரதி போலீஸ் மாஅதிபர் அஜித் ரோஹண தெரிவிக்கின்றார்.

நாடு பூராகவும் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு சட்டத்தை சரியான முறையில் நடைமுறைப்படுத்துவதாக அரசாங்கம் இன்று மாலை அறிவித்திருந்தது.

இதன்படி, ஊரடங்கு சட்டத்தை மீறிய 4559 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளதாக போலீஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.

கடந்த 20ஆம் தேதி மாலை 6 மணி முதல் இன்று மாலை 6 மணி வரை இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவிக்கின்றது.

இதுவரை 1125 வாகனங்களை போலீஸார் தமது பொறுப்பிற்கு எடுத்துள்ளனர்.

வெளிநாடுகளிலுள்ள இலங்கையர்களிடம் அரசாங்கம் விசேட கோரிக்கை

கொரோனா வைரஸ் தொற்றை தாய் நாட்டில் முழுமையாக கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரும் வரை, வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்கள் தாம் வாழும் பகுதிகளிலேயே பாதுகாப்பான முறையில் இருக்குமாறு இலங்கை அரசாங்கம் வெளிநாடுகளிலுள்ள இலங்கையர்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது.

கொரோனா வைரஸ் நாட்டிற்குள் பரவுவதை தடுக்கும் வகையில் பல்வேறு திட்டங்களை அரசாங்கம் முன்னெடுத்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவிக்கின்றது.

நாட்டிற்குள் வைரஸ் பரவுவதை தடுக்கும் வகையிலும், நாட்டிற்குள் வைரஸ் வராதிருக்கும் வகையிலுமே வெளிநாட்டு பயணிகளுக்கான வருகை முற்றாக நாட்டிற்குள் தடை செய்யப்பட்டதாகவும் அரசாங்கம் சுட்டிக்காட்டுகின்றது.

ஏனைய நாடுகளிலும் இந்த நடைமுறையை பின்பற்றி நாட்டிற்குள்ளான போக்குவரத்து நடவடிக்கைகளுக்கு தடை விதித்துள்ளதுடன், விமான சேவைகளையும் அந்த நாடுகள் ரத்து செய்துள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வெளிநாடுகளுக்கு சென்றுள்ள மாணவர்கள், வர்த்தகர்கள், தொழில் வாய்ப்புக்களில் ஈடுபடுவோர் நாட்டிற்குள் வருகைத் தர கோரிக்கை விடுத்து வருவதாக கூறப்படுகின்றது.

நாட்டிற்குள் கொரோனா வைரஸ் தொற்று கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டதன் பின்னர் வெளிநாடுகளிலுள்ள இலங்கையர்களின் கோரிக்கை குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தும் என ஜனாதிபதி ஊடகப் பிரிவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெளிநாடுகளிலுள்ள இலங்கையர் தாம் இருக்கும் இடத்தை விட்டு விமான நிலையங்களுக்கோ அல்லது வேறு இடங்களுக்கோ சென்றால், இந்த வைரஸ் தொற்றுக்கு இலக்காக வேண்டிய நிலைமை ஏற்படும் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு குறிப்பிடுகின்றது.

அதனால் தமது விபரங்களை அந்த நாட்டிலுள்ள இலங்கை தூதுவராலயத்திற்கு வழங்கி பாதுகாப்பான முறையில் இருக்குமாறு அரசாங்கம் கேட்டுக்கொண்டுள்ளது.

bbc