1 மில்லியன் மதிப்புள்ள ‘மாஸ்க்’ தானமளித்த அர்னால்டு ..!

வாஷிங்டன் : கொரோனாவுக்கு எதிராக போராடி வரும் மருத்துவமனைகளுக்கு ஹாலிவுட் நடிகர் அர்னால்டு ஸ்வார்ஸ்னேக்கர் 1 மில்லியன் மதிப்பிலான முகக்கவசம் உள்ளிட்ட மருத்துவ உபகரணங்களை தானமாக அளித்துள்ளார்

உலகை அச்சுறுத்தி வரும் கொரோனாவுக்கு எதிராக பல்வேறு நாடுகளும் போராடி வருகின்றன. தற்போது அமெரிக்காவை மையம் கொண்டுள்ள கொரோனா ஒரே நாளில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோரை பலி வாங்கியுள்ளது. அமெரிக்காவில் மட்டும் கொரோனாவுக்கு இதுவரை 6 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இக்கட்டான நேரத்தில் கொரோனாவுக்கு எதிராக போராடி வரும் சுகாதார பணியாளர்களுக்கு பல துறைகளை சேர்ந்த பிரபலங்கள், தங்களால் இயன்ற உதவியை செய்து வருகின்றனர்.

அந்த வகையில் ஹாலிவுட் நடிகரும், முன்னாள் கலிபோர்னியா மாகாண கவர்னருமான அர்னால்டு ஸ்வார்ஸ்னேக்கர், கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கும் மருத்துவமனையில் பணிபுரிவோருக்கு 1.43 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான முகக்கவசம் உள்ளிட்ட மருத்துவ உபகரணங்களை தானமாக அளித்துள்ளார். ஒரு அறை முழுவதும் உள்ள பெட்டிகளில் என் 95 முகக்கவசங்கள் உள்ளன. இதனை ஒரு வாரத்திற்கு முன் ஆர்டர் செய்ததாகவும், கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கும் டாக்டர்கள், நர்ஸ்களுக்கு தொற்று ஏற்படாமல் இருக்க முகக்கவசங்கள் உதவுமென தனது சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ள வீடியோவில் அர்னால்டு தெரிவித்துள்ளார்.

கொரோனா அச்சுறுத்தல் நீடிப்பதால் மக்கள் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாமெனவும். எவ்வாறு தங்களை பாதுகாத்து கொள்வது என தொடர்ச்சியாக தனது சமூகவலைதளம் வாயிலாக விழிப்புணர்வை ஏற்படுத்தி வந்த அர்னால்டு, மற்ற நடிகர்களுக்கு நல்ல முன்னுதாரணமாக திகழ்ந்து வருகிறார்.

dinamalar