நடமாட்டக் கட்டுப்பாடு ஆணை: சிறைத்தண்டனை வழங்குவதை பரிசீலிக்குமாறு சொல்கிறார் தலைமை நீதிபதி

நடமாட்டக் கட்டுப்பாடு உத்தரவுகளை பின்பற்றாதவர்களுக்கு தண்டனை வழங்கும்போது சிறைச்சாலையின் பிரச்சினை குறித்து பரிசீலிக்குமாறு தலைமை நீதிபதி தெங்கு மைமுன் துவான் மாட் நீதிபதிகளை வலியுறுத்தியுள்ளார்.

சிறைச்சாலையில் நெரிசல் ஏற்படுத்தி மேலும் சிரமத்தை ஏற்படுத்தும் என்பதால், குற்றவாளிகளை சிறையில் அடைக்க வேண்டாம் என்று சிறைச்சாலைத்துறை நீதிமன்றத்தை கோரிய பின்னர் அவர் இதைத் தெரிவித்துள்ளார்.

அதன்படி, தெங்கு மைமுன் கூறியது போல், சிறைச்சாலையின் பாதிப்புகளைக் கருத்தில் கொள்ளுமாறு அனைத்து நீதிமன்ற அதிகாரிகளுக்கும் மத்திய நீதிமன்றத்தின் தலைமை பதிவாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

“தற்போதுள்ள சட்டத்தின் கீழ் தண்டனைகளை வழங்குவதோடு மட்டுமல்லாமல், கோவிட்-19 பாதிப்பை மலேசியாவின் சிறைச்சாலைகளுக்கு பரப்புவதற்கான ஆபத்து குறித்த பிரச்சினையும் கவனத்தில் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது” என்று அந்த அதிகாரி ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

52,000 கைதிகள் தங்கும் வளாகத்தில் இப்போது 73,000 கைதிகள் உள்ளனர் என்பதை நேற்று சிறைத்துறை செய்தித் தொடர்பாளர் ஒருவர் கூறியிருந்தார்.

நடமாட்டக் கட்டுப்பாடு அமலாக்கத்துடன், முக்கிய அலுவல்களைத் தவிர, பொதுமக்கள் வீட்டிற்கு வெளியே அனுமதிக்கப்படுவதில்லை.

உத்தரவை மீறுபவர்களை ஆறு மாதங்கள் வரை சிறையில் அடைக்கலாம் அல்லது RM1,000 வரை அபராதம் விதிக்கலாம், அல்லது இரண்டுமே விதிக்கப்படலாம்.

எவ்வாறாயினும், கடமையில் இருக்கும் ஒரு அரசு ஊழியரைத் தடுப்பது போன்ற மற்ற குற்றங்களும் குற்றவாளி மீது சுமத்தப்படலாம். இக்குற்றங்களுக்கு இரண்டு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அல்லது RM10,000 வரை அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.

நேற்று வழக்கறிஞர் ஹனிப் காத்ரி, குற்றவாளிக்கு சமூக சேவை செய்ய தண்டனை வழங்கப்பட வேண்டும் என்று பரிந்துரைத்தார், இது நடமாட்டக் கட்டுப்பாடு ஆணை முடிவடைந்த பின்னர் செய்யப்படலாம்.