கோவிட்-19: 3,662 பதிப்புகள், இறப்பு எண்ணிக்கை 61

கொரோனா வைரஸ் | மலேசியாவில் இன்று 179 புதிய கோவிட்-19 பாதிப்புகள் பதிவாகியுள்ளன. மொத்த எண்ணிக்கை இப்போது 3,662 நோய்த்தொற்றுகள் என்று சுகாதார அமைச்சக இயக்குநர் ஜெனரல் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா தெரிவித்துள்ளார்.

179 புதிய பாதிப்புகளில், 46 பாதிப்புகள் பிப்ரவரி மாத இறுதியில் நடந்த ஸ்ரீ பெட்டாலிங் தப்லீக் கூட்டத்துடன் இணைக்கப்பட்டுள்ளன.

ஹிஷாம் நான்கு புதிய இறப்புகளையும் அறிவித்தார். இதனால், இதுவரை மலேசியாவில் மொத்தம் 61 பேர் உயிரிழந்தனர்.

தீவிர சிகிச்சை பிரிவில் (ஐ.சி.யூ) கோவிட்-19 நோயாளிகளின் எண்ணிக்கை 99 பேர்.

இதற்கிடையில், ஐ.சி.யுவில் வென்டிலேட்டர்களால் சுவாசிக்க வேண்டிய நோயாளிகள் 50-ல் இருந்து 48-க்கு குறைந்தது.

இன்று அறிவிக்கப்பட்ட நான்கு புதிய மரணங்கள் பின்வருமாறு:

‘நோயாளி 2,210’ (58வது மரணம்)

72 வயதான மலேசிய நபர். நீரிழிவு நோய் மற்றும் உயர் இரத்த அழுத்தம் கொண்டவர். அவர் ‘நோயாளி 1011’ உடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தார். மார்ச் 27 அன்று சரவாக் பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். ஏப்ரல் 4 ம் தேதி மதியம் 1.37 மணிக்கு காலமானார்.

‘நோயாளி 3,484’ (59வது மரணம்)

நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட 68 வயதான மலேசிய நபர். மார்ச் 27 அன்று கோலாலம்பூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். ஏப்ரல் 4 ம் தேதி பிற்பகல் 3.40 மணிக்கு காலமானார்.

‘நோயாளி 3,073’ (60வது மரணம்)

53 வயதான மலேசிய நபர். மார்ச் 31 அன்று சரவாக் பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். ஏப்ரல் 5 ஆம் தேதி அதிகாலை 12.39 மணிக்கு காலமானார்.

‘நோயாளி 2,200’ (61 வது மரணம்)

நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம் மற்றும் சிறுநீரக நோய் வரலாறு கொண்ட 66 வயதான மலேசிய நபர். மார்ச் 26 அன்று சபாவின் கெனிங்காவ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். ஏப்ரல் 4 ஆம் தேதி இரவு 9.36 மணிக்கு காலமானார்.

பாதிக்கப்பட்டவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு சுகாதார அமைச்சின் இரங்கலை நூர் ஹிஷாம் தெரிவித்தார்.