MCO – சாலைத் தடைகளுக்கு காவல்துறையினரைக் குறை கூறுவதை நிறுத்துங்கள் – ஐ.ஜி.பி_

நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணைக்கு (MCO) இணங்குவதை உறுதி செய்வதற்காக சாலைத் தடைகள் அமைக்கப்பட்டுள்ளதால் போக்குவரத்து நெரிசலுக்கு காவல்துறையை குற்றம் சாட்டுவதை பொதுமக்கள் நிறுத்த வேண்டும் என்று அப்துல் ஹமீத் படோர் தெரிவித்தார்.

நாட்டில் கோவிட்-19 நோய்த்தொற்றின் சங்கிலியை உடைப்பதற்கான மக்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த அமல்படுத்தப்படும் எம்.சி.ஓ விதிமுறைகளுக்கு பொதுமக்கள் இணங்குவார்கள் என்று நம்புவதாக அவர் கூறினார்.

“கோவிட்-19 பரவுவதைத் தடுக்கவும், மக்கள் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்தவும் நாடு முழுவதும் சாலைத் தடைகளை நாங்கள் அமைக்க வேண்டியுள்ளது”.

“அத்தியாவசிய சேவைத் துறையில் இல்லாதவர்கள், எம்.சி.ஓ விதிமுறைகளைப் புரிந்து கொள்ளவும், அவர்கள் சாலைத் தடைகளை எதிர் நோக்க வேண்டும் என்றும் நான் பொதுமக்களுக்கு அறிவுறுத்துகிறேன்,” என்று அவர் இன்று புக்கிட் அமனில் கூறினார்.

வீட்டை விட்டு வெளியேற அனுமதிக்கப்பட்டவர்கள் மட்டுமே கடந்து செல்ல முடியும் என்பதை உறுதி செய்வதற்காக காவல்துறையினர் தங்கள் பணியைச் செய்து வருவதால், சாலைத் தடைகளின் போது போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டால் பொதுமக்கள் பொறுமையாக இருக்க வேண்டும் என்று அப்துல் ஹமீத் கூறினார்.

“நெடுஞ்சாலைகளில் அல்லது நகர மையங்களில் 10 முதல் 15 நிமிடங்கள் போக்குவரத்து நெரிசல் போன்ற அற்ப விஷயங்களைப் பற்றி மக்கள் புகார் செய்ய வேண்டிய அவசியம் இல்லை”.

“MCO அமல்படுத்தப்படுவதற்கு முன்னர் அவர்கள் நெடுஞ்சாலைகளிலும் கோலாலம்பூரிலும் உள்ள போக்குவரத்து நெரிசலைப் பற்றி சிந்திக்க வேண்டும் … MCO-வின் போது உள்ள போக்குவரத்து நெரிசலுக்கும் சாலைத் தடைகளைப் பற்றியும் இப்போது குறை கூற வேண்டாம்,” என்று அவர் சில உறுப்பினர்களின் அணுகுமுறை குறித்து வருத்தம் தெரிவித்தார். நாடு முழுவதும் சாலைத் தடைகளை அதிகரிப்பதற்காக காவல்துறையினரை பொதுமக்கள் விமர்சித்துள்ளது குறுத்து அவர் வருத்தம் தெரிவித்து இதைக் கூறியுள்ளார்.

சாலைத் தடைகளில் பணிபுரியும் தனது பணியாட்களை பார்க்க அவர் சென்றுள்ளார் என்றும், அவர்களைப் பொறுமையாக இருக்கவும், தங்கள் பணிகளை தொழில் ரீதியாக செய்யுமாறு அறிவுறுத்தியதாகவும் அப்துல் ஹமீத் கூறினார்.

“இந்த பிரச்சினையை கையாள்வதில் அவர்கள் அதிக அளவு பொறுமையைக் காட்டுகிறார்கள் (விமர்சனங்களை ஏற்றுக்கொள்வதும் உட்பட). பணி புரிந்துகொண்டிருக்கும் காவல்துறையினர், ஆயுதப்படை உறுப்பினர்கள் மற்றும் சாலைத் தடைகளில் கடமையில் இருக்கும் பிற அதிகாரிகளும் கோவிட்-19 ஆபத்தில் இருப்பதை மக்கள் நினைவில் கொள்ள வேண்டும்.

“அவர்கள் அனைவரும் தொற்றுநோய் பரவுவதைத் தடுக்க உதவுகிறார்கள்,” என்று அவர் கூறினார்.