விமான நிறுவனங்கள் பணத்தை திருப்பித் தர வேண்டும் – Matta

கோவிட்-19 தொற்றுநோய்களின் போது ரத்து செய்யப்பட்ட விமானங்களுக்கு விமான நிறுவனங்கள் பணத்தை திருப்பித் தர வேண்டும் என்றும் “கடன்” வழங்கக்கூடாது என்றும் மலேசியாவின் பயண முகவர்கள் சங்கம் (Matta) தெரிவித்துள்ளது.

பணத்தைத் திருப்பித் தர மறுத்த விமான நிறுவனங்கள் மீது அரசாங்கம் மெளனம் சாதிப்பது குறித்து மட்டா (விமானப் போக்குவரத்து) துணைத் தலைவர் ஷாஸ்லி அஃபுவத் கசாலியும் அதிருப்தி தெரிவித்தார்.

“கடன் குறிப்புகளை (nota kredit) வெளியிடுவதற்குப் பதிலாக விமான நிறுவனங்கள் பணத்தை திருப்பித் தருவதே உகந்ததாகும். விமான நிறுவனங்கள் திவாலாகிவிட்டால், அக்கடன் குறிப்புகளின் மதிப்பு சிறியதாகவோ அல்லது மிகக் குறைவாகவோ இருக்கலாம்.

“தொற்றுநோய்க்குப் பின்னர் அந்நிறுவனங்கள் மீட்கப்பட்டு அல்லது தங்கள் நடவடிக்கைகளைத் தொடர கடன் கொடுக்கப்பட்டாலும், அவர்கள் முதலில் பொதுமக்களின் நம்பிக்கையை பெற பணத்தை திருப்பிச் செலுத்த வேண்டும்,” என்று அவர் இன்று ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

“வழங்கப்படாத சேவைகளுக்காக வாடிக்கையாளர்களிடமிருந்து வசூலிக்கப்பட்ட கட்டணங்களை திருப்பித் தருவது ஒரு கொள்கையாகும்.”

மலேசிய ஏவியேஷன் கமிஷன் (Mavcom), வாடிக்கையாளர்களின் பணத்தை திரும்பப் பெறுவதை கண்காணிக்க வேண்டும் என்று ஷாஸ்லி கூறினார்.

“போக்குவரத்து அமைச்சு மற்றும் மாவ்காம் உள்ளிட்ட அதிகாரிகளின் மெளனம் குறித்து நாங்கள் ஏமாற்றமடைகிறோம்”.

கோவிட் -19 பரவுவதைத் தடுக்கும் முயற்சியில், மார்ச் 18 அன்று நாடு முழுவதும் நடமாட்டக் கட்டுப்பாடு உத்தரவு செயல்படுத்தப்பட்ட பின்னர் சில விமான நிறுவனங்கள் விமான சேவைகளை நிறுத்தியுள்ளன.

இதனால் மலேசியர்கள் நாட்டை விட்டு வெளியேற அனுமதிக்கப்படாத நிலையில் வெளிநாட்டினருக்கும் நாட்டிற்குள் நுழைய அனுமதி இல்லை.