பொருளாதாரம் தொடர்பான முடிவுகள் சுகாதார அமைச்சு ஈடுபாட்டுடன் எடுக்கப்படுகின்றன – அஸ்மின் அலி

நடமாட்டக் கட்டுப்பாடு உத்தரவின் போது, சேவைகள் இயங்குவது உட்பட, எடுக்கப்பட்ட அனைத்து பொருளாதார முடிவுகளும், சுகாதார அமைச்சின் (MOH) ஈடுபாட்டுடன் எடுக்கப்படுகின்றன என்று அனைத்துலக வாணிபம் மற்றும் தொழில்துறை அமைச்சர் அஸ்மின் அலி கூறினார்.

இரண்டு வாரங்களுக்கு முன்பு நடைபெற்ற, ‘பொருளாதாரம் மற்றும் தொழிலாளர் சந்தையில் COVID-19 பாதிப்பு’ குறித்த சிறப்பு அமைச்சரவைக் குழுவில் MOH பிரதிநிதிகளும் கலந்து கொண்டதாக அஸ்மின் கூறினார்.

கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவு பின்னர் ஏப்ரல் 6 மற்றும் 10 ஆம் தேதிகளில் அமைச்சரவைக்கு எடுத்துச் செல்லப்பட்டது என்றார்.
“இந்த செயல்முறை MOH மூலமாகவே இருக்க வேண்டும். MOH, அனைத்துலக வாணிபம் மற்றும் தொழில்துறை அமைச்சு (Miti), மற்றும் பிற அமைச்சகங்களுக்கு வழிகாட்டுதலையும் ஆலோசனையையும் வழங்க வேண்டியது அவசியமாகும். கோவிட்-19ஐ எதிர்கொள்ள, MOH உடன் இணைந்து நாம் செயல்பட வேண்டும்,” என்று அவர் இன்று புத்ராஜெயாவில் செய்தியாளர் சந்திப்பின் போது கூறினார்.

பாதிப்பை தடுப்பதற்கான முயற்சிகளுக்கும் நெருக்கடியைக் கையாள்வதில் Miti-க்கு உதவியதற்கும் MOHக்கு அவர் தனது நன்றியை தெரிவித்தார்.

அச்சிறப்புக் குழுவுக்கு அஸ்மின் மற்றும் பாதுகாப்பு அமைச்சர் இஸ்மாயில் சப்ரி யாகோப் தலைமை தாங்கினர்.

கடந்த வாரம், நடமாட்டக் கட்டுப்பாடு உத்தரவின் மூன்றாம் கட்டத்தின் போது மீண்டும் தொடங்க அனுமதிக்கப்பட்ட கூடுதல் சேவைகள் பட்டியலில் முடிதிருத்தும் சேவைகளைச் சேர்த்ததற்காக Miti பல விமர்சனங்களைப் பெற்றது. டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லாவும் இந்த முடிவை ஏற்கவில்லை.

இதனிடையே, கட்டுமானம் மற்றும் தொடர்புடைய சேவைகள், இயந்திரங்கள் மற்றும் உபகரணங்கள் தொழில், மின் மற்றும் பொறியியல் ஆகிய மூன்று துறைகளையும் மீண்டும் செயல்பட அனுமதிக்கும் முடிவு குறித்து அம்னோ இளைஞர் தலைவர் அஸ்ரஃப் வாஜ்தி துசுகி கேள்வி எழுப்பினார்.

இன்று செய்தியாளர் சந்திப்பின் போது அஸ்மின் இந்த விஷயத்தைப் பற்றி பேசவில்லை.

எவ்வாறாயினும், சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் ஊழியர்களின் எண்ணிக்கையை “குறைந்தபட்ச எண்ணிக்கையில் அல்லது தற்போதைய தொகையில் 50 சதவீதத்திற்கு மிகாமல்” குறைப்பது உட்பட பல கடுமையான வழிகாட்டுதல்களைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று அஸ்மின் கூறியுள்ளார்.

மேலும், எந்தவொரு ஊழியரும் கோவிட்-19 நோயால் பாதிக்கப்பட்டிருந்தால், தொடர்பு கண்காணிப்பை மேற்கொள்வதில் அந்நிறுவனம் MOHக்கு முழு ஒத்துழைப்பை வழங்க வேண்டும், என்றார்.

நடமாட்டக் கட்டுப்பாடு உத்தரவு காலத்தில் செயல்பட அனுமதிக்கப்பட்ட நிறுவனங்கள், தங்கள் ஊழியர்கள் பெர்கேசோ பேனல் கிளினிக்கில் கோவிட்-19 ஸ்கிரீனிங் சோதனைக்கு உட்படுத்தப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்றும் அவர் கூறினார்.