எதிர்க்கட்சியை எதிர்கொள்ள முகிதீன் பயப்படுகிறார் – தெரசா கோக்

முதல் நாடாளுமன்ற அமர்வு ஒரு நாள் மட்டுமே நடைபெறும் என்று மின்னஞ்சல் அறிவிப்பைப் பெற்ற எதிர்க்கட்சி எம்.பி.க்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர் என்று செபுத்தே எம்.பி. தெரசா கோக் தெரிவித்தார்.

இதுவரை 86 இறப்புகளைப் பதிவு செய்துள்ள கோவிட்-19 பரவலை எதிர்த்து நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவை அமல்படுத்தியதால், இந்த அமர்வு மார்ச் 9 ஆம் தேதி முதலில் திட்டமிடப்பட்டு பின் மே 18 ஒத்திவைக்கப்பட்டது.

“இது முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது. நீண்ட காலமாக இருந்து வரும் நாடாளுமன்ற ஜனநாயகம் என்ற கருத்துக்கு முரணானது”.

“நாடாளுமன்ற அமர்வை ஒரு நாளுக்கு கட்டுப்படுத்துவதற்கு தேசிய கூட்டணி அரசாங்கத்திற்கு முறையான அடிப்படை ஏதும் இல்லை. கோவிட்-19 தொற்றுநோயைத் தொடர்ந்து நடமாட்டக் கட்டுப்பாடு இருந்தபோதிலும், சமீபத்தில் இங்கிலாந்து மற்றும் அமெரிக்கா போன்ற பல ஜனநாயக நாடுகள் வழக்கமான நாடாளுமன்ற அமர்வுகளை நடத்துவதை கண்டுவருகிறோம்”.

“தென் கொரியா கடுமையான தொற்றுநோய்களின் கீழ் ஒரு பொதுத் தேர்தலை கூட (புதன்கிழமை) நடத்தியுள்ளது” என்று கோக் நேற்று இரவு ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

சபையின் செயலாளர் ரிடுவான் ரஹ்மத் அனுப்பிய மின்னஞ்சலில், அந்த ஒரு நாள் அமர்வில் “வாய்வழி கேள்வி-பதில், எழுதப்பட்ட கேள்விகள், மற்றும் சிறப்பு மாநாடு” ஏதும் இருக்காது என்று கூறியுள்ளார்.

“நாடாளுமன்றத்தின் கடிதத்தில் கூறப்பட்ட காரணங்கள் நியாயமற்றது” என்று கோக் கூறினார்.

பிரதம மந்திரி முகிதீன் யாசின், சட்டபூர்வமான நாடாளுமன்றக் அமர்வில் பக்காத்தான் ஹராப்பான் எம்.பி.க்களைச் சந்திப்பதில் பயப்படுகிறார் என்பது தெளிவாகத் தெரிகிறது. பிரதமராக அவர் மீது நம்பிக்கையில்லா வாக்கெடுப்பை எதிர்க்கட்சி கொண்டுவரக்கூடும் என்று அவர் பயப்படுகிறார்.

இதற்கிடையில், அம்மின்னஞ்சல் குறித்து அதிர்ச்சியடைந்ததாக இஸ்கந்தார் புத்ரி நாடாளுமன்ற உறுப்பினர் லிம் கிட் சியாங்கும் கூறியுள்ளார்.

“இது ஏற்றுக்கொள்ள முடியாதது. இது நாடாளுமன்றத்தை நாடக மேடை ஆக்குகிறது” என்று லிம் கூறினார்.

கோவிட்-19 தொற்றுநோயை எதிர்கொள்வதில் ஒற்றுமையைக் காண்பிப்பதில் பாராளுமன்றம் முக்கிய பங்கு வகிக்க வேண்டும் என்பதால் இந்த முடிவை பிரதமர் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றார்.

கோவிட்-19 நெருக்கடியைத் தீர்ப்பதற்கான மிகச் சிறந்த திட்டத்தை நாடாளுமன்றம் தீர்மானிக்க வேண்டும் என்றும் நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுக்க சிறந்த திட்டத்தை வகுக்க வேண்டும் என்றும் லிம் கூறினார்.