காலீத்: மற்ற நாடுகளில், நடமாட்டக் கட்டுப்பாடு உத்தரவை மீறும் அமைச்சர்கள் ராஜினாமா செய்கிறார்கள்

நடமாட்டக் கட்டுப்பாடு உத்தரவை மீறிய துணை சுகாதார அமைச்சர் நூர் அஸ்மி கசாலி, ஒரு சிறந்த உதாரணத்தை வெளிபடுத்த தவறிவிட்டதாக அம்னோ துணைத் தலைவர் முகமட் காலீத் நோர்டின் விமர்சித்துள்ளார்.

மற்ற நாடுகளில் இதுபோன்ற விதிகளை மீறிய அரசாங்க தலைவர்கள் ராஜினாமா செய்துள்ளதாக அவர் கூறினார்.

“அதுவும் ஒரு துணை சுகாதார அமைச்சர் இப்படி செய்வது ஒரு நல்ல முன்மாதிரி இல்லை.

“நியூசிலாந்து போன்ற பிற நாடுகளில், சுகாதார அமைச்சர் ஊரடங்கு விதிகளை மீறியதற்காக ராஜினாமா செய்துள்ளார். அதேபோல் ஊரடங்கு விதிகளை மீறியதற்காக இங்கிலாந்து நாட்டு பொதுமக்களும் இங்கிலாந்து வீட்டுவசதி அமைச்சர் மீது கடும் கோபம் கொண்டனர். தென்னாப்பிரிக்கா மக்கள், தங்களின் தகவல் தொடர்பு அமைச்சர் மீது கோபத்தை வெளிப்படுத்தினர்”.

“நாங்கள் வெவ்வேறு விதிகளை அமலாக்கம் செய்ய விரும்பவில்லை. தலைமைத்துவத்தில் உள்ளவர்கள் சிறந்த உதாரணத்தை வெளிபடுத்த வேண்டும்,” என்று அவர் இன்று தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பதிவில் எழுதினார்.

நியூசிலாந்து சுகாதார அமைச்சர் டேவிட் கிளார்க், தடை உத்தரவின் போது தனது குடும்பத்தை கடற்கரைக்கு அழைத்து சென்றுள்ளார். தடை உத்தரவை மீறிய குற்றத்தை ஒப்புக்கொண்ட பின்னர் அவர் ராஜினாமா செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

கிளார்க் தனது சொந்த நாட்டில் கோவிட்-19 பிரச்சாரத்திற்கு தலைமை தாங்குவதால் அவரின் ராஜினாமாவை நிராகரித்த போதிலும், நியூசிலாந்து பிரதமர் ஜசிந்தா ஆர்டன், கிளார்க்கை இணை நிதி அமைச்சர் பதவியிலிருந்து நீக்கினார்.

துணை சுகாதார அமைச்சர் நூர் அஸ்மி கசாலியும் பேராக் மாநில எக்ஸ்கோ ரஸ்மான் ஜகாரியாவும் ஒரு விழாவில் குழுவுடன் இரவு உணவை உண்டு மகிழ்ந்த படத்தை காலீத் பதிவேற்றினார்.

முன்னதாக சமூக ஊடகங்களில் அந்த இரு அரசியல் தலைவர்களும் லெங்காங்கில் உள்ள ஒரு தஃபிஸ் மையத்தில் தங்கள் குழுவுடன் மதிய உணவு சாப்பிடுவதாக நம்பப்படும் புகைப்படங்களும் பகிரப்பட்டன.

நடமாட்டக் கட்டுப்பாடு விதிமுறைகளை தெளிவாக மீறிய இந்த செயல் குறித்து நெட்டிசன்களின் விமர்சனத்தைப் பெற்றது.

மேலும், நடமாட்டக் கட்டுப்பாடு உத்தரவு காலத்தின் போது, திரங்காணு மந்திரி புசார் அகமட் சம்சூரி மொக்தார், முன்னாள் மந்திரி புசார் அஹ்மத் சையத்தை கெமாமான் தெலுக் கலோங்கில் உள்ள அவரது இல்லத்தில் சந்திக்கச் சென்ற புகைப்படங்களும் பகிரப்பட்டு இதேபோன்ற விமர்சனங்களைப் பெற்றன.

இந்த விமர்சனத்தைத் தொடர்ந்து, புறநகர் மேம்பாட்டு துணை அமைச்சர் அப்துல் ரஹ்மான் முகமது ஒரு குழுவுடன் தனது அரசியல் சகாவின் வீட்டிற்குச் சென்று மதிய உணவை உண்ட நிகழ்வும் விமர்சனத்தைப் பெற்றுள்ளது.