கோவிட்-19 : மகாதீர் கையாண்டு இருந்தால் எப்படி இருந்திருக்கும்? – ஒரு பார்வை

கோவிட்-19 தொற்றுநோய் நெருக்கடியை மலேசியா கையாண்ட விதத்தைப் பல தரப்பினர் பாராட்டியுள்ளனர். கடந்த மார்ச் மாதம் 18-ம் நாள், நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை (எம்.சி.ஓ.) நடைமுறைக்கு வந்ததிலிருந்து, நேற்று (ஏப்ரல் 17) பதிவான புதிய வழக்குகளின் எண்ணிக்கைதான் மிகக் குறைவு, அதாவது 69 மட்டுமே. இது உண்மையில் மகிழ்ச்சியளிக்கும் ஒரு செய்தி என்றாலும், உலகப் பொருளாதாரத்தை முடக்கிய, உலக சக்திகளை அடிமைப்படுத்திய கோவிட்-19 வைரஸ் அச்சுறுத்தலை எதிர்கொள்வதில் நாம் தொடர்ந்து விழிப்புடனும் ஒழுக்கத்துடனும் இருங்கள்.

குறிப்பாக, மலேசிய சுகாதார இயக்குநர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா, இந்த விஷயத்தைக் கையாண்ட விதத்தைப் பலர் பாராட்டியுள்ளனர். கோவிட்-19-க்கு எதிரான போராட்டத்தில், அவரை உலகின் மூன்று சிறந்த மருத்துவர்களில் ஒருவராக சீனா குளோபல் டெலிவிஷன் நெட்வொர்க் (சிஜிடிஎன்) அறிவித்துள்ளது. பாராட்டு தனக்கு மட்டுமல்ல, கோவிட்-19 சம்பவத்தைக் கையாள்வதில், நாட்டில் பலரின் கூட்டு முயற்சி இது என்று தாழ்மையுடன் கூறினார்.

இப்போது நான் இதனை சற்று பின்னோக்கிப் பார்க்கிறேன், துன் மகாதீருக்கு இதுபோன்ற பாராட்டுக்கள் கிடைத்தால்………. கற்பனை செய்து பார்க்கிறேன். “அவர்கள் அனைவரும் என்னை நேசிக்கிறார்கள், நான் காற்றில் மிதப்பதைப் போல உணர்கிறேன்,” என்று சற்றும் தயங்காமல் கூறியிருப்பார்.

இன்று, கோவிட்-19 பிரச்சினையை அரசியல்வாதிகள் மற்றும் தலைவர்கள் சிலர் எவ்வாறு எதிர்கொள்கிறார்கள் என்பதையும், அவர்களின் ஆணவம் மற்றும் திமிர் மக்களை எவ்வாறு பாதிக்கிறது என்பதையும் இன்று உலகம் பார்த்துகொண்டிருக்கும் வேளையில், நானும் இந்த இழிநிலையைச் சற்று கணித்து பார்க்கிறேன். இத்தகைய தலைவர்கள் மக்களின் உயிரைக் காப்பாற்றுவதை விட, பொருளாதாரத்தைக் காப்பாற்றுவதில்தான் அதிக அக்கறை கொண்டுள்ளனர்.

போரிஸ் ஜான்சன், ஜெய்ர் போல்சனாரோ, டொனால்ட் டிரம்

இதற்கு முன்னர், இங்கிலாந்தின் பிரதமர் போரிஸ் ஜான்சன், வைரஸைக் கையாள்வதற்கான சிறந்த வழி, பெரும்பான்மையான மக்களிடையேப் பரவுவதை அனுமதித்து, அதே நேரத்தில் வயதான மற்றும் சுகாதாரப் பாதிப்புக்குள்ளாகக்கூடிய சிறுபான்மை குழுவை மட்டும் அரசாங்கம் பாதுகாத்தால் போதும் என்று வாதிட்டார். ஆயிரக்கணக்கான மக்கள் இறக்க நேரிடும் என்பதைவிட, பொருளாதாரத்தைக் காப்பாற்றுவது சிறந்தது என்று கருதப்பட்டது. இருப்பினும், இறுதியில், அதே வைரஸ் காரணமாக, தீவிர சிகிச்சை பிரிவில் (ஐ.சி.யூ) அவரை அனுமதிக்க வேண்டியிருந்தது.

ஆனால், இங்கிலாந்து பிரதமரின் ஆணவத்திற்கு முன், நிச்சயமாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் ஆணவம் நிற்காது. கோவிட்-19 நெருக்கடி குறித்த ஆகக் கடைசி தகவல்களை வழங்க, தினசரி அவர் வாய் திறக்கும் போது, பலர் வருத்தப்பட்டபோதிலும் டிரம்ப் மகிழ்ச்சியுடன் இருந்ததாகக் கூறப்படுகிறது. அமெரிக்காவில், தற்போது (ஏப்ரல் 17, 2020) பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 685,005-ஐ எட்டியுள்ளது, 35,481 பேர் இறந்து போயுள்ளனர். இந்த எண்ணிக்கை செப்டம்பர் 11, 2001-ல், பயங்கரவாத தாக்குதலில் கொல்லப்பட்ட 2,977 பேரைவிட பன்மடங்கு அதிகம். ஏ.எஃப்.பி நடத்திய ஓர் ஆய்வில், கிட்டத்தட்ட மூன்றில் இரண்டு பங்கு அமெரிக்க குடிமக்கள், கொரோனா வைரஸ் தொற்றுநோயை நிவர்த்தி செய்வதற்கான நடவடிக்கைகளை, டிரம்ப் மிகவும் மெதுவாக எடுத்து வருவதாக கூறுகின்றனர்.

வைரஸின் அச்சுறுத்தல் டிரம்பின் கவனத்திற்குக் கொண்டுவரப்பட்ட போது, இது ஒரு பெரிய அச்சுறுத்தல் அல்ல, சாதாரண சளி, காய்ச்சல் போன்றதுதான் என்று அவர் ஆணவத்துடன் கூறியுள்ளார். ஈஸ்டர் கொண்டாட்டத்திற்கு முன்னதாக, அமெரிக்க பொருளாதாரத்தை மீண்டும் திறந்துவிடும் உற்சாகத்தில் டிரம்ப் இருந்தார். ஆனால் இன்று, உலக வல்லரசான அமெரிக்காவில், பல பெரும் பலவீனங்கள் இருந்தபோதிலும், ஊடகங்கள், சீனா, உலக சுகாதார அமைப்பு (WHO) மற்றும் ஜனநாயகக் கட்சி போன்றவற்றைதான் ட்ரம்ப் திமிருடன் குற்றம் சாட்டுகிறார்.

லூயிஸ் ஹென்ரிக் மாண்டெட்டா

பிரேசிலில், ட்ரம்பின் ‘பிரேசில் பதிப்பு’ -ஆக அறியப்படும் அதிபர் ஜெய்ர் போல்சனாரோ, “மீண்டும் பிரேசிலை சிறந்ததாக்குவோம்”என்ற முழக்கத்துடன், பொருளாதாரத்தை மீண்டும் திறந்துவிடுவதற்காக, தனது சொந்த மக்களைத் தியாகம் செய்யத் தயாராக இருக்கும் மற்றொரு பெருமைமிக்க உலகத் தலைவராவார்.

நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுப்பதன் முக்கியத்துவத்தை அறியாத ஒரு மருத்துவர் எனக் குற்றஞ்சாட்டி, பிரேசிலிய பிரபல சுகாதார அமைச்சரைப் பதவியிலிருந்து நீக்கிவிட்டார். இந்த வைரஸ் ஒரு “சிறிய காய்ச்சல்” என்றும் போல்சரானோ கூறினார், மேலும் மருத்துவ நிபுணரான, சுகாதார அமைச்சர் லூயிஸ் ஹென்ரிக் மாண்டெட்டாவை ஆதரித்து, நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையை அமல்படுத்திய மாநில ஆளுநரையும் அவர் விமர்சித்தார். தற்போது, 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பிரேசிலியர்கள் இந்தத் தொற்றுநோய்க்கு பலியாகி உள்ளனர்.

இப்போது நாம் மலேசியாவிற்கு வருவோம். இந்தப் பிரச்சனையைச் சிறப்பாக நிவர்த்தி செய்வதற்கான ஒரு முக்கியக் காரணம் என்னவென்றால், சுகாதார இயக்குநர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லாவுக்கு, இந்த நெருக்கடியைக் கட்டுப்படுத்தவும் ஒருங்கிணைக்கவும் அரசாங்கத்தால் முழு நம்பிக்கை அளிக்கப்பட்டிருப்பது கூட இருக்கலாம்.

தினசரி அறிக்கைகளை அவர் எவ்வாறு முன்வைக்கிறார், செய்தி ஊடகங்களின் கேள்விகளுக்கு அவர் எவ்வாறு பதிலளிக்கிறார் என்பதைப் பார்த்தால், ஒரு நம்பகமான தொழில்திறன்முறை அவரிடம் இருப்பதை நம்மால் உணர முடிகிறது. அரசியல் விளையாட்டின் கூறுகளையோ, ஆளும் கட்சிக்கு ஆதரவாகப் பேசுவதையோ அல்லது கூஜா தூக்குவதையோ நாம் அவரிடம் காணவில்லை.

அதுமட்டுமின்று, அவர் எந்த இனப் பாகுபாடும் காட்டாமல், அனைத்து நோயாளிகளையும் மனிதர்களாகவேப் பார்க்கிறார். ஒரு மருத்துவ நிபுணராக, அவர் தனது வேலையை நன்கு புரிந்துகொண்டுள்ளார். அம்னோ அரசியல்வாதியான, சுகாதார அமைச்சர் டாக்டர் ஆடாம் பாபா-உடன் ஒப்பிடும்போது; டாக்டர் ஹிஷாம் இந்தச் சிக்கலை எவ்வாறு கையாண்டார் என்பதையும் நாம் வேறுபடுத்தி அறியலாம்.

இந்த நெருக்கடியைச் சமாளிக்க, பிரதமர் உட்பட, தேசியக் கூட்டணி (பி.என்) அரசாங்கம் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா மீது நம்பிக்கை வைத்து, முழு சுதந்திரத்தை வழங்கியது உண்மை என்றால், அது ஒரு புத்திசாலித்தனமான முடிவாகவும் நல்ல நிலைப்பாடாகவும் இருக்கும்.

இப்போது சற்று பின்னோக்கிப் பார்ப்போம், துன் மகாதீர் இன்னும் நம் நாட்டை வழிநடத்துகிறார் என்றால், ஊடகங்களுடன் பேசுவதில் அவர் கொண்டிருந்த ஆர்வத்தை என்னால் கற்பனை செய்துபார்க்க முடிகிறது. எல்லாவற்றையும் அறிந்த ஒரு பிரதமரிடமிருந்து தாங்கள் வேறுபட்டுவிடக் கூடாது என்ற பயத்தில், மற்றவர்கள் பேசகூடத் தயங்கி இருப்பார்கள். மகாதீரின் ஆணவம் பேரழிவைக் கொண்டுவந்திருக்குமா?

நாணய நெருக்கடி மற்றும் பொருளாதார மந்தநிலையின் போது, ​​மகாதீர் நாட்டை மீட்டெடுப்பார் என்று புகழ்ந்து பேசப்பட்டதை நாம் அறிவோம். இருப்பினும், உண்மை என்னவென்றால், அவரால் தன் மகன் உட்பட, தனது நண்பர்களை மட்டுமே காப்பாற்ற முடிந்தது. அந்த நேரத்தில், தொழிலாளர்கள் தன்னிச்சையாக பணிநீக்கம் செய்யப்படுவது போன்ற பல பிரச்சினைகளைப் பொது மக்கள் எதிர்கொண்டனர், ஆனால் தொழிலாளர்களின் நலனில் அரசாங்கம் எந்தவொரு முக்கியப் பங்கையும் ஆற்றவில்லை. வங்கி கடன்களை ஒத்திவைப்பதற்கான பி.எஸ்.எம்.-இன் முன்மொழிவும் அரசாங்கத்தால் புறக்கணிக்கப்பட்டது.

நிச்சயமாக, துன் மகாதீர் இன்னும் நம் நாட்டை வழிநடத்திச் சென்றிருந்தால், அவர் தொழிலாளர்களைத் தியாகம் செய்யச் சொல்லியிருப்பார். சமீபத்தில் ஒரு நேர்காணலில், தொழில் நிறுவனங்களின் வருமானம் வீழ்ச்சியடைந்த பின்னர், வேலை இழக்கும் அபாயத்தையும் வருமானம் குறையும் என்ற உண்மையையும் மக்கள் ஏற்றுக்கொள்ள வேண்டியிருக்கும் என்று துன் மகாதிர் கூறினார். எனவே, மக்கள் வாழ்க்கை முறையை மாற்றிக்கொள்ள வேண்டும், குறைந்த வருமானத்துடன் வாழ தயாராக இருக்க வேண்டும் என்றும் அவர் அழைப்பு விடுத்தார்.

அவரின் அந்த அழைப்பைக் கேட்ட பின்னர், வைரஸ் நெருக்கடியை நாம் எதிர்கொண்டிருக்கும் இந்த நேரத்தில், துன் மகாதீர் பிரதமராக இல்லை என்பதில் நான் நிம்மதியும் மகிழ்ச்சியும் அடைகிறேன். நாட்டு மக்களைக் குறிப்பாக, குறைந்த வருமானம் பெருபவர்களைக் காப்பாற்ற அறிவியல், தொழில்முறை, இனவெறியற்ற மற்றும் அக்கறையுள்ள அணுகுமுறைகள் நமக்குத் தேவை.

டிரம்ப், போல்சனாரோ மற்றும் மகாதீர்….. இவர்களின் ஆணவத்திற்கும் மேலதிகமாக, அவர்களின் சூத்திரம்….. சாதாரண மக்களின் நலன்களைவிட, முதலாளித்துவ நலன்களே அவர்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்தவை.

எழுத்து :- எஸ் அருட்செல்வன் , பி.எஸ்.எம்., தேசியத் துணைத் தலைவர்

தமிழாக்கம் :- சாந்தலட்சுமி பெருமாள்