குறை கூறுவதை நிறுத்தி விட்டு, தொற்றுநோயை கையாளும் முயற்சியில் ஈடுபட வேண்டும் – டாக்டர் சுல்கிப்லி

கோவிட்-19 பாதிப்புக்கு தீர்வு காண PH அரசாங்கத்தின் நடவடிக்கை குறித்து பேசுகையில் முன்னாள் சுகாதார அமைச்சர் டாக்டர் சுல்கிப்லி அகமட், “ஷெரட்டன் நகர்வு” நடவடிக்கைகளும், பிரதமர் முகிதீன் யாசின் தனது அமைச்சரவையை நியமிக்க எடுத்து கொண்ட நேரமும், தொற்றுநோயை கையாளும் கவனத்தை திசைத் திருப்பிவிட்டது என்று கூறியுள்ளார்.

முன்னாள் உள்துறை அமைச்சராக இருந்த முகிதீன் யாசின், கோலாலம்பூர் ஸ்ரீ பெட்டாலிங் மசூதியில் நடந்த தப்லீக் சபைக் கூட்டம் பற்றி நன்றாகவே அறிந்திருந்தார் என்றும் டாக்டர் சுல்கிப்லி கூறினார்.

“அவர் அந்த நேரத்தில் ‘வேறு ஒரு வேலையில்’ தீவிரமான இருந்ததால் அக்கூட்டம் பற்றி அவர் கவனிக்கவில்லை போலும்”.

“தப்லீக் கூட்டத்தை கட்டுப்படுத்த PH அரசாங்கம் தவறிவிட்டது என்ற குற்றச்சாட்டுகள் குறித்து சுகாதார அமைச்சர் (டாக்டர் ஆதாம் பாபா) அவரிடம் தான் கேட்க வேண்டும்” என்று அவர் நேற்று ஒரு பேஸ்புக் பதிவில் தெரிவித்தார்.

மலேசியாவில் கோவிட்-19 பாதிப்பின் இரண்டாவது அலைக்கு காரணமாக இருந்த தல்பீக் கிளஸ்டரைக் கட்டுப்படுத்தத் PH அரசாங்கம் தவறிவிட்டது என்ற ஆதாமின் கூற்று குறித்து டாக்டர் சுல்கிப்லி இவ்வாறு கூறியுள்ளார்.

டாக்டர் ஆதாம், PHஐ குறை கூறுவதை நிறுத்த வேண்டும், என்று டாக்டர் சுல்கிப்லி கூறினார்.

மலேசியாவில் இதுவரை 40 சதவீத நேர்மறையான பாதிப்புகள் இந்த ஸ்ரீ பெட்டாலிங் மசூதியில் தப்லீக் கூட்டத்தில் இருந்து வந்தவை என மதிப்பிடப்பட்டுள்ளது. பிப்ரவரி 27 முதல் மார்ச் 1 வரை நீடித்த இந்த பேரணியில் சுமார் 16,000 பேர் கலந்து கொண்டுள்ளனர்.

பிப்ரவரி 24 முதல் 29 வரை மலேசியாவுக்கு இடைக்கால பிரதமராக டாக்டர் மகாதீர் முகமது தலைமை வகித்தார். அந்த காலகட்டத்தில் நாட்டிற்கு எந்த அரசாங்கமும் இல்லை. மார்ச் 1 ஆம் தேதி முகிதீன் யாசின் எட்டாவது பிரதமராக பதவியேற்றார். புதிய அமைச்சரவை – சுகாதார அமைச்சர் உட்பட – மார்ச் 10 அன்று தான் பதவியேற்றனர். இரண்டு வாரங்களுக்கும் மேலாக, கோவிட்-19 பாதிப்பை கையாள அரசியல் மற்றும் தலைமை நிர்வாகம் ஏதும் இல்லை என்று டாக்டர் சுல்கிப்லி கூறினார்.

“துரதிர்ஷ்டவசமாக, கோவிட்-19 நெருக்கடியை நிர்வகிப்பதின் கவனம் ‘ஷெரட்டன் நகர்வு’ நடவடிக்கைகளினால் ‘திருடப்பட்டன’,” என்று அவர் மேலும் கூறினார்.

இப்போது சிலாங்கூர் கோவிட்-19 பணிக்குழுவிற்கு தலைமை தாங்கும் டாக்டர் சுல்கிப்லி, சுகாதார இயக்குநர் ஜெனரல் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லாவின் தலைமைக்கு தனது பாராட்டுகளைத் தெரிவித்தார். டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா “மலேசிய அரசியலில் இருள் சூழ்ந்த நாட்களில்” கூட மிகவும் சிறப்பாக செயலாற்றியுள்ளார் என்று வர்ணிக்கப்பட்டார்.

குறை கூறுவதை நிறுத்தி விட்டு, தொற்றுநோயை கையாளும் முயற்சியில் நூர் ஹிஷாமுடன் தலைமைத்துவம் எடுக்குமாறு நேற்று அவர் டாக்டர் ஆதாமைக் கேட்டுக் கொண்டார்.