உயர்கல்விக்கூடங்களில் உள்ள மாணவர்கள் ஏப்ரல் 27 முதல் வீடு திரும்ப அனுமதிக்கப்படுவார்கள்

ஏப்ரல் 27, திங்கட்கிழமை தொடங்கி, பொது மற்றும் தனியார் உயர்கல்விக்கூட வளாகத்தில் உள்ள மாணவர்கள் வீடு திரும்ப அனுமதிக்கப்படுவார்கள்.

இருப்பினும், பாதுகாப்பு அமைச்சர் இஸ்மாயில் சப்ரி யாகோப், இந்த இயக்கம் கடுமையாக கட்டுப்படுத்தப்படும் என்றும், இப்போதைக்கு மாணவர்கள் சிவப்பு மண்டலத்தில் தங்காவிட்டால் மட்டுமே பச்சை மண்டலத்திற்கு திரும்ப முடியும் என்றும் அவர் கூறினார்.

பச்சை மண்டலம் என்பது கோவிட்-19 நோய்த்தொற்று இல்லாத பகுதி ஆகும். சிவப்பு மண்டலம் என்பது 41 அல்லது அதற்கு மேற்பட்ட கோவிட்-19 பாதிப்புகள் கொண்ட பகுதியாகும்.

“27 ஏப்ரல் 2020, திங்கள் தொடங்கி, மாணவர்கள் வீடு திரும்ப தொடங்க அனுமதிக்கப்படுவர். பயண நேரம் கட்டுப்படுத்தப்படுவதை உறுதி செய்வதற்காக, இரவு 9 மணி முதல் காலை 9 மணி வரை மட்டுமே பயண நேரம் தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதிக எண்ணிக்கையிலான நடமாட்டம் அனுமதிக்கப்படாது” என்று அவர் இன்று செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.

இன்று காலை நடைபெற்ற நடமாட்டக் கட்டுப்பாடு உத்தரவு அமலாக்கம் தொடர்பான சிறப்பு கூட்டத்தில் இந்த விவகாரம் முடிவு செய்யப்பட்டுள்ளதாக இஸ்மாயில் தெரிவித்தார்.

“பாலிடெக்னிக் மற்றும் சமுதாயக் கல்லூரிகள் உள்ளிட்ட உயர்கல்வி அமைச்சின் கீழ் உள்ள பொது மற்றும் தனியார் உயர்கல்விக்கூட மாணவர்களை தங்களின் வீடுகளுக்கு அனுப்புவது குறித்து உயர்கல்வி அமைச்சர் டாக்டர் நோராய்னி அகமது ஒரு சீர்தர இயக்கச் செய்முறையை (SOP) வழங்கினார்”.

“பஸ்ஸில் ஏறுவதற்கு முன்பு மாணவர்கள் கோவிட்-19 பிணிப்பாய்வு சோதனைக்கு உட்படுத்தப்படுவதை உறுதிசெய்தல், உணவு மற்றும் முகக்கவரிகளை வழங்குவதை உறுதிசெய்தல் ஆகியவற்றை அந்த SOP உள்ளடக்கியுள்ளது”.

“கூடல் இடைவெளிக்கு இணங்குவதை உறுதி செய்வதற்காக பேருந்தில் பயணிகளின் மொத்த தொகையில், பாதிக்கு கட்டுப்படுத்தப்படும்”.

“பின்னர் மாணவர்கள் தங்கள் வீட்டிற்கு அருகிலுள்ள மாவட்ட காவல்துறை தலைமையகம் அல்லது மாவட்ட அலுவலகத்திற்கு அழைத்துச் செல்லப்படுவார்கள். பின்னர் நியமிக்கப்பட்ட அரசு நிறுவனத்தின் உறுப்பினர்கள் அவர்களை தங்கள் வீட்டிற்கு அனுப்புவார்கள்”.

இதற்கிடையில், தங்கள் சொந்த வாகனத்தைப் பயன்படுத்த விரும்பும் மாணவர்கள், அவர்கள் வேறு மாநிலத்தை கடக்காதவாறு பயணம் செய்யும் வகையில் இருந்தால் மட்டுமே அவ்வாறு செய்ய அனுமதிக்கப்படுவார்கள்.

அவர்கள் தங்களின் கல்வி நிருவனம் மற்றும் அருகிலுள்ள காவல் நிலையத்திடமிருந்தும் அனுமதி பெற வேண்டும்.

சபா அல்லது சரவாக் திரும்ப விரும்பும் மாணவர்களுக்கு, அவர்கள் திரும்பும் விமானம் அரசாங்கத்தால் வழங்கப்படும்.
அவர்கள் தங்கள் வீடுகளுக்கு அருகிலுள்ள விமான நிலையத்திற்கு கொண்டு செல்லப்படுவார்கள், மேலும் 14 நாள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படுவார்கள்.

உயர்கல்விக்கூட வளாகத்தில் தங்க விரும்பும் மாணவர்களுக்கு வழக்கம் போல் உணவு மற்றும் பானங்கள் வழங்கப்படும் என்று இஸ்மாயில் கூறினார்.

“மாணவர் இயக்கங்கள் குறித்து மேலும் விரிவான அறிவிப்புகள் உயர்கவி அமைச்சால் வழங்கப்படும்,” என்றும் அவர் கூறினார்.