பி.எஸ்.எம். : பாதிக்கப்பட்ட ரோஹிங்கியா மக்களுக்கு என்னதான் தீர்வு?

நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை விளைவாக வருமானத்தை இழந்த மக்களின் சுமையை குறைக்க நமது அரசாங்கம் மேற்கொண்டுவரும் நடவடிக்கைகளைப் பார்க்கையில், ஒரு மலேசியராக இருப்பதில் எனக்குப் பெருமையாக இருக்கிறது. ஒரு நாகரீகம் அடைந்த சமூகம் இதைத்தான் செய்யும் – தேவைப்படுபவர்களுக்கு உதவி செய்யும்.

ஆனால், சில நாட்களுக்குப் பின், கடந்த ஏப்ரல் 19-ம் தேதி, லங்காவி தீவு கடற்பரப்பிலிருந்து, 200 ரோஹிங்கியாக்களை ஏற்றி வந்த ஒரு படகு, நம் அரச மலேசியக் கடற்படையினரால் விரட்டியடிக்கப்பட்ட செய்தி கிடைத்தபோது, அந்த நேர்மறை உணர்வு குறைந்து போனது என மலேசிய சோசலிசக் கட்சியின் தேசியத் தலைவர் டாக்டர் ஜெயக்குமார் தேவராஜ் இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

அதேநாளில், வங்காளதேசக் கடலோரக் காவற்படை 2 மாதங்களுக்கு முன்பு, அந்நாட்டிலிருந்து மலேசியாவிற்குப் புறப்பட்டுச் சென்று, மலேசியாவில் ஏற்றுக்கொள்ளப்படாத மற்றொரு அகதிகள் படகை மீட்டது. அப்படகில், 396 அகதிகள் பசியால் மயக்கமடைந்த நிலையில், வங்காள தேசக்கரைக்குக் கொண்டுவரப்பட்டனர். ​​கடல் பயணத்தின் போதே 60 பேர் இறந்துபோன நிலையில், கடலில் தாங்கள் அனுபவித்த 2 மாத சோதனையை அவர்கள் விவரித்தது வேதனையானது என ஜெயக்குமார் கூறியுள்ளார்.

அதுமட்டுமின்றி, ரோஹிங்கியா அகதிகள் சமூகத்தின் மீது, சமூக ஊடகங்களில் நம் மக்கள் தொடர்ச்சியான இனவெறித் தாக்குதல்களை நடத்தி வருவதைப் பி.எஸ்.எம். வன்மையாகக் கண்டிப்பதாகவும் அவர் சொன்னார்.

“இத்தொற்றுநோய் நெருக்கடி காலத்தில் கூட, சில குறுகியப் பார்வை கொண்ட மலேசியர்கள் ரோஹிங்கியாக்கள் மற்றும் வெளிநாட்டவர்களின், சுகாதாரமற்ற வாழ்க்கை முறைகளால் வைரஸ் பரவுவதாக அவர்கள் மீது குற்றம் சாட்டுகின்றனர். ஆனால், இந்நிலைக்கு உண்மையான காரணம் என்ன?”

“அகதிகளை அங்கீகரிக்காமல், அவர்களுக்குச் சட்டப்பூர்வமான வேலைகளை வழங்க நம் அரசாங்கம் மறுத்து வருவதே இன்றைய அவர்களின் இந்த மோசமான வாழ்க்கை நிலைக்குக் காரணம். அவர்களை ஏற்றுக்கொண்டு, சட்டப்பூர்வமாக வேலை செய்ய அனுமதித்தால், அவர்களும் வசதியான வாழ்க்கை முறையை அமைத்துகொண்டு, கண்ணியமாக வாழ முடியும். ஆனால், துரதிர்ஷ்டவசமாக இன்றைய அவர்களின் வாழ்க்கைச் சூழல் கைதுசெய்யப்படலாம் என்ற அச்சத்தில் ஓடி ஒளிந்து, இட நெருக்கடியான நிலையில் வாழ வேண்டிய கட்டாயம்,” என ரோஹிங்கியா அகதிகள் எதிர்நோக்கி வரும் சிக்கல்களை ஜெயக்குமார் தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.

அதேசமயம், இந்த நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையினால் பாதிக்கப்பட்ட ரோஹிங்கியா மற்றும் பிற நாட்டு அகதிகளுக்குப் பல மலேசியர்கள் உணவு மற்றும் அத்தியாவசியப் பொருட்களைத் திரட்டி, விநியோகித்து வருவது மனதைக் கவருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

“2.5 மில்லியன் ரோஹிங்கியா மக்கள், உலகிலேயே மிகவும் ஓரங்கட்டப்பட்ட மற்றும் வறிய குழுவினர். மியான்மாரில் உள்ள பல சிறுபான்மையினருக்கும் கடுமையான பிரச்சினைகள் இருந்தபோதிலும், அவர்களைவிட ரோஹிங்கியாக்கள் மிக மோசமான சூழ்நிலையில் உள்ளனர். காரணம் மியான்மார் அவர்களைக் குடிமக்களாக ஏற்றுக்கொள்ளவில்லை. அவர்கள் வங்காளதேசத்தில் இருந்து குடியேறியவர்கள் என்றே இன்றும் கூறுகின்றனர். அதேசமயம், வங்காளதேச அரசாங்கம் அவர்களைக் குடிமக்களாக ஏற்க மறுத்து வருகிறது.”

“தென்கிழக்கு வங்காளதேசத்தில் உள்ள கொக்ஸ் பஜாரின் அகதிகள் முகாம்களில் இப்போது கிட்டத்தட்ட ஒரு மில்லியன் ரோஹிங்கியா அகதிகள் உள்ளனர். இந்த முகாம்களின் நிலைமைகள் மிகவும் கொடுமையானவை, பெரும்பாலான அகதிகளுக்கு வேலை இல்லை. அவர்கள் கிட்டத்தட்ட முற்றிலும் சர்வதேச நிறுவனங்களின் உதவியையே நம்பியுள்ளனர்.

“இதன் காரணமாகவே, அவர்களில் சிலர், இங்கு நிலைமை சிறப்பாக இருக்கும் என்ற நம்பிக்கையில், தாய்லாந்து மற்றும் மலேசியாவிற்கான ஆபத்தான கடல் பயணத்தில் தங்கள் உயிரைப் பணயம் வைக்கவும் தயாராக உள்ளனர்,” என ஜெயக்குமார் தனது அறிக்கையில் விளக்கியுள்ளார்.

கோவிட்-19 தொற்றுநோய் உலகின் அனைத்து நாடுகளுக்கும் பெரும் அச்சுறுத்தலாக உள்ளதைக் காரணங்காட்டி, இந்த ரோஹிங்கியாக்களைக் கண்மூடித்தனமாகத் திருப்பி அனுப்புவது சரியல்ல எனக் கூறியுள்ள டாக்டர் ஜெயக்குமார், மலேசிய அரசாங்கத்திற்குச் சில பரிந்துரைகளையும் முன் வைத்துள்ளார். அவை :-

  1. அகதிகள் படகுகளை மீண்டும் கடலுக்குத் திருப்பி அனுப்புவதை நிறுத்த வேண்டும். அது மனிதாபிமானமற்றது மட்டுமல்ல உயிர் இழப்புக்கும் வழிவகுக்கும். கோவிட்-19 நெருக்கடியை அரசாங்கத்தின் இந்தக் கடுமையான கொள்கைக்குச் சாக்குப்போக்காக பயன்படுத்த வேண்டாம்.
  2. மலேசியாவில் ரோஹிங்கியா அகதிகளின் பதிவை விரைவுபடுத்த வேண்டும். தற்போது யு.என்.எச்.சி.ஆர். அவர்களின் விண்ணப்பங்களைச் செயல்படுத்தி வருகிறது, ஆனால், அச்செயல்முறை அதிக நேரத்தை எடுப்பதால், அவர்கள் யு.என்.எச்.சி.ஆர். அகதிகள் சான்றிதழைப் பெற்று, முறையாக இங்குத் தங்க, அரசாங்கம் யு.என்.எச்.சி.ஆர். -உடன் இணைந்து செயல்பட வேண்டும்.
  3. மலேசியாவில் ரோஹிங்கியாக்கள் வேலை செய்ய அனுமதிக்க வேண்டும். தற்போது அவர்கள் வேலை செய்ய முடியாது, அதேசமயம் யாரும் உதவி செய்யாத பட்சத்தில் – யு.என்.எச்.சி.ஆர். அல்லது நமது அரசாங்கம் – அவர்கள் “சட்டவிரோதமாக” வேலை செய்ய நிர்பந்திக்கப்படுகிறார்கள். இது அவர்கள் ஏமாற்றப்படவோ அல்லது வேறு வழிகளில் துஷ்பிரயோகம் செய்யப்படவோ வழிவகுக்கிறது. அவர்கள் மலேசியர்களின் வேலைகளைப் பறித்துகொள்வார்கள் என நாம் கவலைப்படத் தேவையில்லை. மலேசியாவில் 5.5 மில்லியன் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் உள்ளனர், ரோஹிங்கியாக்கள் சுமார் 200,000 பேர் மட்டுமே, அவர்களில் 60 விழுக்காட்டினர் மட்டுமே வேலை செய்யும் வயதுடையவர்கள். 120,000 ரோஹிங்கியாக்கள் மலேசிய அந்நியத் தொழிலாளர்களில் 2 விழுக்காட்டிற்கும் குறைவானவர்கள். அவர்களுக்கு வேலை செய்வதற்கான உரிமையையும் நமது தொழிலாளர் சட்டங்களின் பாதுகாப்பையும் வழங்குவது, அவர்களின் நலனுக்குப் பெரிதும் உதவும், மேலும் மலேசியர்களுக்கு எந்த வகையிலும் இது பாதகத்தை ஏற்படுத்தாது.
  4. இந்த நேரத்தில், மலேசியா மற்ற ஆசியான் நாடுகளுடன் இணைந்து கோக்ஸ் பஜாரில் உள்ள அகதிகள் முகாம்களுக்கு நிதி வழங்குவது முக்கியம். இதன்வழி, நெரிசலான அகதிகள் முகாம்களில் இருக்கும் அவர்களுக்கு முறையான பரிசோதனைகளை வழங்கி, கோவிட்-19 தொற்றுநோயில் இருந்து அவர்களைப் பாதுகாக்க முடியும்.
  5. ரோஹிங்கியா அகதிகளை மீண்டும் மியான்மாருக்குள் ஏற்றுக்கொள்ள மியான்மாரை வற்புறுத்த ஐக்கிய நாடுகள் சபை முயற்சித்து வருகிறது. ஆனால் அகதிகள் தங்களது குடியுரிமை நிலை தீர்க்கப்படாமலும், அவர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படாமலும் திரும்பி போவதற்கு அச்சப்படுகிறார்கள். தற்போது மியான்மாரில் உள்ள 600,000 ரோஹிங்கியாக்களில் பலர் தங்கள் கிராமங்களிலிருந்து விரட்டப்பட்டு முகாம்களில் அடைக்கப்பட்டுள்ளனர். மேலும், ஆசியான் உறுப்பு நாடுகள், ரகைன் மாகாணத்தின் பொருளாதார வளர்ச்சியில் பங்கேற்பதன் மூலம் நிலைமையை மேம்படுத்த உதவ முடியும், இதில் இராஜதந்திரத்துடன் சீனாவையும் ஈர்க்க வேண்டும். ரகைன் மாகாணப் பிரச்சினைகளைத் தீர்ப்பதுதான், ரோஹிங்கியா மக்களுக்கான நீண்டகாலத் தீர்வு.

ஒரு சமூகத்தின் தார்மீகம், அதற்குள் இருக்கும் பலவீனமான மற்றும் ஓரங்கட்டப்பட்ட குழுக்களை நடத்தும் விதத்தில் வெளிப்படுகிறது என்று கூறப்படுகிறது. ரோஹிங்கியாக்கள் அத்தகைய பலவீனமானக் குழுவைச் சார்ந்தவர்கள், அவர்களின் துன்பத்தைத் தணிக்கவும், அவர்களின் இக்கட்டான நிலையைத் தீர்க்கவும் மலேசிய அரசாங்கம் முற்பட வேண்டும் என டாக்டர் ஜெயக்குமார் தனது அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார்.