கொரோனா தொற்று ஊரடங்கு: சேதமாகும் அபாயத்தில் புராதன ஓவியங்கள்

இலங்கையிலுள்ள தொல்பொருள் மதிப்பு மிக்க புராதன ஓவியங்கள் அழியும் அபாயத்தை எதிர்கொண்டுள்ளதாக தொல்பொருள் திணைக்களம் தெரிவிக்கின்றது. தொல்பொருள் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் பேராசிரியர் செனரத் திஸாநாயக்க  இதனைத் தெரிவித்தார்.

இலங்கையில் கொரோனா தாக்கம் அதிகரித்துள்ள பின்னணியில், கடந்த மார்ச் மாதம் 20ஆம் தேதி முதல் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, சுற்றுலா பயணிகள் மற்றும் மக்கள் அதிகளவில் ஒன்று திரளும் வகையிலான இடங்களுக்கு செல்லவும் அரசாங்கம் தடைவிதித்தது. குறிப்பாக பௌத்த விஹாரைகள், ஆலயங்கள், உள்ளிட்ட மதத்தலங்களுக்கு செல்லவும் மறு அறிவித்தல் வரை தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, சுமார் ஒரு மாதத்திற்கு மேலாக அனைத்து மதத்தலங்களும் மூடப்பட்டுள்ளதை அவதானிக்க முடிவதாக பேராசிரியர் செனரத் திஸாநாயக்க கூறுகின்றார்.

இதன்படி, இலங்கையில் பெரும்பாலும் கண்டி இராசதானி காலத்திற்கு சொந்தமான சுமார் மூவாயிரத்திற்கும் அதிகமான சுவர் ஓவியங்கள் உள்ள இடங்கள் இருப்பதாக அவர் சுட்டிக்காட்டுகின்றார்.

இவ்வாறான ஓவியங்கள் வரலாற்று சிறப்பு மிக்கவை என்பதுடன், அவை கட்டாயம் பாதுகாக்கப்பட வேண்டியவை எனவும் அவர் குறிப்பிடுகின்றார்.

இந்த நிலையில், இலங்கையின் வரலாற்று சிறப்புமிக்கதும், தொல்பொருள் பெறுமதியானதுமான ஓவியங்கள் பெரும்பாலும் பௌத்த விஹாரைகள் மற்றும் இந்து ஆலயங்களுக்குள்ளேயே காணப்படுவதாக அவர் சுட்டிக்காட்டினார்.

சுமார் 3000திற்கும் அதிகமான தொல்பொருள் ஓவியங்கள் காணப்படும் இடங்கள் அடையாளம் காணப்பட்டு, தமது திணைக்களம் அவற்றை பாதுகாத்து வருவதாகவும் பேராசிரியர் செனரத் திஸாநாயக்க தெரிவிக்கின்றார்.

இந்த நிலையில், குறித்த ஓவியங்களும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தற்போது இல்லாதொழியும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக பேராசிரியர் கவலை வெளியிடுகின்றார்.

கொரோனா அச்சுறுத்தல் நாட்டில் தலைதூக்கியுள்ள பின்னணியில், இந்த தொல்பொருள் பெறுமதிமிக்க ஓவியங்களும் அழிவடையும் அபாயத்தை எதிர்நோக்கியுள்ளன.

குறிப்பாக கண்டி இராசதானி காலத்து பௌத்த விஹாரைகள் மற்றும் இந்து ஆலயங்களிலேயே அதிகளவில் இவ்வாறான ஓவியங்கள் வரையப்பட்டுள்ளதாக அறிய முடிகின்றது.

அவ்வாறு சுவர்கள் ஈரத்தன்மையுடன் இருக்குமானால், அந்த சுவர்களிலுள்ள ஓவியங்களில் பேக்டிரீயாக்கள் படிந்து அந்த ஓவியங்கள் அழிவடையும் அபாயத்தை எதிர்கொள்ளும் என பேராசிரியர் கூறுகின்றார்.

அதுமாத்திரமன்றி, இவ்வாறான தொல்பொருள் பெறுமதிமிக்க இடங்கள் நாளாந்தம் கண்காணிக்கப்பட்டு, அவை சுத்தம் செய்வது வழக்காமானது என கூறிய அவர், தற்போதைய சூழ்நிலையில் அவ்வாறான நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியாது போயுள்ளதாகவும் குறிப்பிடுகின்றார்.

ஓவிய சுவர்கள் சுத்திகரிக்கப்படாதுள்ளமையினால், அந்த பகுதிகளில் சிலந்தி வலைகள் கட்டப்படுவதுடன், தூசிகளும் படியும் அபாயம் காணப்படுவதாக அவர் தெரிவிக்கின்றார்.

இவ்வாறான நிலைமை ஏற்படுமாக இருந்தால், அதனூடாகவும் சித்திரங்களில் பேக்டிரீயாக்கள் படியும் நிலைமை ஏற்படும் என அவர் எச்சரிக்கை விடுக்கின்றார்.

அவ்வாறு பேக்டிரீயாக்கள் படிவது மாத்திரமன்றி, கரையான் பூச்சுக்களினால் பாதிப்புக்கள் ஏற்படும் அபாயமும் நிலவுவதாக அவர் கவலை வெளியிடுகின்றார்.

இதுவரை எந்தவித ஓவியங்களும் பாதிப்படைந்துள்ளதாக பதிவாகவில்லை என கூறிய அவர், இந்த ஊரடங்கு நிலைமை தொடருமாக இருந்தால் ஓவியங்கள் பாதிப்படையும் நிலைமை ஏற்படும் எனவும் சுட்டிக்காட்டினார்.

இந்நிலையில், ஓவியங்களை பாதுகாக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் பேராசிரியர் செனரத் திஸாநாயக்க தெளிவூட்டினார்.

குறித்த ஓவியங்களுக்கு நாளாந்தம் சிறிது நேரமாவது காற்று கிடைக்கும் வகையிலான சந்தர்ப்பம் அமையுமாக இருந்தால் இந்த ஓவியங்களை பாதுகாப்பதற்கான இயலுமை தமக்கு கிடைக்கும் என அவர் குறிப்பிடுகின்றார்.

மூடப்பட்டுள்ள பௌத்த விஹாரைகள் மற்றும் இந்து ஆலயங்கள் உள்ளிட்ட மதத்தலங்களை குறிப்பிட்ட நேரமாவது திறந்து வைக்க வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

இதன்படி, நாளாந்தம் காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரையாவது குறித்த ஓவியங்கள் உள்ள இடங்களை திறந்து வைக்க நடவடிக்கை எடுக்குமாறு மதத் தலைவர்களிடம் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

அவ்வாறு திறக்க முடியாத நிலைமை காணப்படுமாக இருந்தால், ஜன்னல்களையாவது திறந்து காற்று கிடைக்கும் வகையில் சந்தர்ப்பத்தை ஏற்படுத்துமாறு அவர் கோருகின்றார்.

அதுமாத்திரமன்றி, தொல்பொருள் பெறுமதிமிக்க ஓவியங்களுக்கு சேதம் ஏற்படாத விதத்தில், அவற்றை சூழவுள்ள தூசிகள் மற்றும் சிலந்தி வலைகளை சுத்திகரிக்குமாறும் பேராசிரியர் கோரிக்கை விடுக்கின்றார்.

காற்று கிடைக்கும் வகையில் வரையப்பட்டுள்ள புராதன பெறுமதிமிக்க ஓவியங்களுக்கு இந்த ஊரடங்கினால் பாதிப்பு ஏற்படாது என அவர் நம்பிக்கை வெளியிடுகின்றார்.

காற்று தொடர்ச்சியாக கிடைக்குமானால் பேக்டிரீயா படிவதற்கான வாய்ப்பு கிடையாது என கூறிய அவர், திறந்தவெளிகளில் வரையப்பட்டுள்ள ஓவியங்கள் பாதிப்படையாது எனவும் சுட்டிக்காட்டினார்.

கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக புராதன பெறுமதிமிக்க ஓவியங்கள் சிதைவடையும் பட்சத்தில், அவற்றை மீள பழைய நிலைமைக்கு கொண்டு வர பாரிய பிரயத்தனங்களை மேற்கொள்ள வேண்டிய நிலைமை ஏற்படும் என அவர் கூறுகின்றார்.

அவ்வாறு சிரமங்களை எதிர்நோக்கி ஓவியங்களை பழைய நிலைமைக்கு கொண்டு வந்தாலும், 100 சதவீதம் பழைய நிலைமைக்கு அவற்றை கொண்டு வர முடியாது என தொல்பொருள் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் பேராசிரியர் செனரத் திஸாநாயக்க தெரிவிக்கின்றார்.

BBC