வீரர்கள் யார் என்றால் நாட்டுக்காக உழைப்பவர்களே

இது எங்கள் எல்லோருக்குமே கஷ்டமானதொரு காலம். சுதந்திரமாக சுவாசித்து, சுதந்திரமாக வாழ்ந்த நாங்கள் இப்பொழுது பயத்துடனும் சந்தேகத்துடனும் வாழ்கிறோம். எனினும், வெளியில் எந்த நிலைமையாக இருந்தாலும் வீட்டிற்குள் நாம் பாதுகாப்பாக இருக்கிறோம் என்ற உணர்வு நிம்மதி தருகிறது. எதையாவது சாப்பிட்டேனும் குடும்பத்தினரோடு ஒன்றாக இருக்க முடிவது எந்தளவு நிம்மதியானது,ஆறுதலானது? அநேகமானோருக்கு கிடைத்துள்ள அந்த நிம்மதியும்ஆறுதலும்நமது நாட்டின் வீரர்களுக்கு கிடைக்கவில்லை.

அவர்கள் எந்த நாளுமே வெளியில் இருக்கிறார்கள். உண்மையில் யார் வீரர்கள் என்றால்அபாயத்தை உணர்ந்திருந்தாலும் நாட்டை முன்னிட்டு கடமையை தொடர்பவர்களே. அந்த வகையில், இராணுவத்தினர்,சுகாதார சேவைகளை முன்னெடுப்பவர்கள் உட்பட நாட்டின் பசியைப் போக்குவதற்காக இந்த அவசரகாலத்திலும் மண்ணோடு போராடுகின்ற எமது விவசாயிகளும் வீரர்களே.

அந்த விளைச்சலை எமது வீட்டிற்கே கொண்டு வருகின்ற,எங்களுக்காக காலையிலிருந்து இரவுவரை சுப்பர் மார்க்கட்களில் அதிக களைப்புடன் வேலை செய்யும் எமது இளைஞர்,யுவதிகளும் அவ்வாறான வீரர்களே. அவர்களை நாம் எப்படி மறந்துவிட முடியும்?

நாள்தோறும் நூற்றுக்கணக்கான தொலைபேசி அழைப்புகளுக்கு பதில் தந்து,வாடிக்கையாளர்களின் கோபமான வார்த்தைகளை பொறுமையாகக் கேட்டு,எப்பொழுதேனும் அவர்களது ஆசீர்வாதத்தையும் பெற்று,தம்மால் முடிந்த அளவு வீடுகளுக்கு சென்று உணவுப் பொருட்களை விநியோகிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளும் அவர்கள் உண்மையில் அதிக கவனத்தைப் பெறாத வீரர்கள் என்றுதான் சொல்ல வேண்டும்.

‘நோய் தேடிக் கொள்ளாம,கிடைக்குறத சாப்பிட்டுக் கொண்டு ஊரிலேயே இருங்க மகன்’என்ற தங்களது பெற்றோரின் அக்கறையான வார்த்தைகளையும் கடந்து அவர்கள் கொழும்புக்கு வந்து இந்த நடவடிக்கையுடன் இணைந்திருப்பது தங்களை மாத்திரம் நினைத்து அல்ல.உண்மையில் நமது நாட்டில் அதிகமானோர்தற்பொழுது வீட்டில், தமது குடும்பத்தினரோடுஇருக்கிறார்கள்.

இருந்தாலும் அவர்களுக்கு கிடைத்துள்ள சுதந்திரம் இந்த வெளியில் தெரியாதவீரர்களுக்கு இல்லை. குடும்பத்தினரை விட்டு,அன்புக்குரியவர்களைப் பிரிந்து, தூர இடங்களுக்கு வந்து, அவர்களது நலம் விசாரிக்க முடியாமல், அன்பை வெளிப்படுத்த முடியாமல், அவர்களுக்காக சற்று நேரத்தைக் கூட ஒதுக்க முடியாத இந்த வாழ்க்கை உண்மையில்எந்த வீரர்களாலும் தாங்கிக் கொள்ள முடியாத ஒன்று எனலாம்.

இத்தருணத்தில் அவர்கள் அனைவரதும் நோக்கம் ஒன்றே. அதற்காக அவர்கள் அனைவரும் ஒரே கஷ்டத்தைப் பகிர்ந்து கொள்கிறார்கள். அனைத்தையும் புன்னகையோடு தாங்கி தொழிலை தொடர்கிறார்கள். தாய் நாட்டிற்கு தமது கடமையை நிறைவேற்றுகிறார்கள். சுஜித் வெத ஆரச்சி என்பவரும் அவர்களில் ஒருவரே. அவர்தான் இந்த கவனம் பெறாத வீரர்கள் அனைவரதும் பிரதிநிதி.

பாரியதொரு பிரதேசத்தை உள்ளடக்கியதாக உணவுப் பொருட்களை பகிர்ந்தளிக்கும் கட்டுப்பெத்த காகில்ஸ் பிக் சிட்டி முகாமையாளர் இத்தருணத்தில் வியர்வையில் நனைந்தவாறு வேலை செய்து கொண்டிருக்கிறார். இந்தக் குழுவினரில் அவரும் ஒரு அங்கத்தவர். இது அவரின் குரல்.

‘தற்பொழுது நாங்கள் 13 பேர் இந்த பிக் சிட்டியில் வேலை செய்கின்றோம். மூன்று பேர் மாத்திரமே இங்குள்ளவர்கள். மற்ற எல்லோருமே தூர இடங்களைச் சேர்ந்தவர்கள். எனினும், யாருமே ஊருக்குப் போகாமல் தங்குமிடங்களில் இருந்துகொண்டு ஒவ்வொரு நாளும் வேலைக்கு வருகிறார்கள். விடுமுறையில் ஊருக்குப்போக யாருக்கு ஆசை இருக்காது, இருந்தாலும் இந்த நேரத்தில் நாங்கள் நினைப்பது வேறு. இது நாட்டுக்கு நான் தேவைப்படும் தருணம். நான் பின்வாங்கப் போவதில்லை. நான் மக்களின் பசியைப் போக்கும் போராட்டத்தில் இணைந்திருக்கிறேன்.இப்படி நினைக்கும்போதுபடைவீரன் ஒருவனைப் போன்ற உணர்வுஏற்படுகிறது. எந்த ஒரு நிலைமையிலும் வேலை செய்வதற்குத் தேவையான தைரியம் கிடைக்கின்றது.

இந்த பிக் சிட்டிக்கு நாளொன்றுக்கு ஆயிரக்கணக்கான அழைப்புகள் வருகின்றன. அனைத்து ஓடர்களையும் ஏற்றுக்கொள்வதற்கே நாம்முயல்கிறோம்.நாங்கள் 13 பேரில் 6 பேர் பெண் பிள்ளைகள். அவர்களும் இரவு, பகல் பாராமல் தொடர்ந்து வேலை செய்கிறார்கள்.

காலையில் எட்டு மணிக்கு ஆரம்பித்தால் நாங்கள் வீட்டுக்கு செல்லும்போது இரவு ஒன்பது, பத்து மணி ஆகிறது. வட்ஸ்அப் மூலம் கிடைக்கும் அனைத்து ஓடர்களையும் நாம் முடிந்தளவு இரண்டு நாட்களுக்குள் வீட்டிற்கே சென்று தருவோம்.

ஸ்டோரிலிருந்து இறாக்கைகளுக்கு பொருட்களை அடுக்குவதும் இவர்களே. அடுத்தடுத்து ஓடர்கள் வரும்போது பொருட்களை தேர்ந்தெடுத்து,உற்பத்திகளை விலைப்பட்டியலின் அடிப்படையில் கார்ட்டில் நிரப்புவதும் இவர்களே. இறாக்கைகளில் பொருட்கள் குறையும்போது அவற்றை மீள்நிரப்புதல், பில் செய்த ஓடரை வாகனத்தில் ஏற்றுதல்மற்றும் வீட்டுக்கு சென்று பொருட்களை வழங்குதல் என அனைத்து வேலைகளையும் செய்வது இவர்கள் மட்டுமே.

இவை அனைத்தையும் முடித்து எமது அங்கத்தவர்கள் சாப்பிடும்போது நான்கு, ஐந்து மணி ஆகிவிடுகிறது. சில நாட்களில் பால் பக்கற் ஒன்று மட்டும்தான். அதற்கு காரணம் பசியாக இருந்தாலும் சாப்பிடத் தோன்றுவதில்லை. அனைவரும் ஒன்றாக பாடுபடுகிறார்கள்.

எமது பக்கமும் தாமதங்கள் ஏற்படலாம். இருந்தாலும் நாம் அதிகபட்ச அக்கறையுடன் செயற்படுகின்றோம். நாள்தோறும் காலையில் வேலையை ஆரம்பிக்க முன்பு நாம் கலந்துரையாடுவோம். குழுவினராக எமது யோசனைகளைப் பரிமாற்றிக் கொள்வோம். இந்த கஷ்டமான காலம் முடியும்வரை நாம் நாட்களை எண்ணிக் கொண்டிருக்கிறோம். அப்படி செய்து மனதிற்கு தைரியத்தை வரவழைக்கின்றோம். சிறு பிள்ளைகள் இருக்கும் வீடுகளுக்கு பொருட்களை விநியோகிக்கும்போது அவர்கள் எங்களை பாராட்டுகிறார்கள். ஒருநாள் மருத்துவர் ஒருவர் இப்படி கூறினார்.

‘இன்று நீங்கள் வந்திருக்காவிட்டால் எனது பிள்ளைக்கு பால்கிடைத்திருக்காது, இந்த நேரத்தில் நீங்கள் எனக்கு கடவுள் போல’ என்று அவர் என்னை ஆசீர்வதித்தார். மக்களிடமிருந்து கிடைக்கும் இவ்வாறான வார்த்தைகள்தான் எமது களைப்பை போக்குகின்றன. உண்மையில்இது சம்பளத்துக்காக செய்யும் ஒரு தொழில் எனஇப்பொழுது எங்களுக்குத் தோன்றுவதில்லை. நமது கடமையை,நமது பொறுப்பை நாங்கள் செய்கின்றோம் என்ற உணர்வுதான் எம்மிடம் உள்ளது.

சிலர் எம்மிடம் நீங்கள் சாப்பிட்டீர்களா,கொஞ்சம் சாப்பிடுகிறீர்களா என்றும்கேட்பார்கள். காசு இருந்தாலும் உணவுப் பொருட்களைபெறுவது கடினமாகவே உள்ளது. அந்த சந்தர்ப்பத்திலும் எங்களைப் பற்றி யோசிக்கும் சிலர் உண்மையில் நல்ல உள்ளம் படைத்தவர்கள். இவற்றின்போது எமக்கு கிடைப்பது தைரியம். நான் மென்மேலும் எனது நாட்டுக்கு சேவையாற்ற வேண்டும் என்கின்ற உணர்வு. உண்மையில் அவ்வாறு என்னை நினைக்க வைத்த நிறுவனத்தில் வேலை செய்வது எனக்குப் பெருமையாக இருக்கிறது.

நாட்டைப் பற்றி நினைக்கும்போது தங்களை மறந்துவிடுவது வீரர்களின் குணம். சுஜித் அவ்வாறு தான். உறுதியானமனதோடு இருந்தாலும் தமது குடும்பத்தினரைப் பற்றி யாராவது கேட்கும்போது அவரது கண்கள் கலங்குகின்றன. அந்தக் கண்ணீரைமறைத்துக்கொண்டு எங்களுக்காக, நாட்டுக்காக அனைத்தையும் பொறுத்துக்கொள்ளும் தன் கதையைசுஜித் சொன்னார்.

‘நான் இரவு 10 மணிக்கு வீட்டிற்கு போனாலும் எனது மகள் நான் வரும்வரை தூக்கமின்றி பார்த்துக் கொண்டிருப்பாள். வெளியில் குளித்துவிட்டு வீட்டுக்குள் நுழையும்போது அப்பாவைத் தேடி ஓடி வருவாள். எனக்கும் அவளை அணைத்துக் கொண்டு,கொஞ்சுவதற்கு ஆசையாக இருந்தாலும் நான் எதுவுமே செய்வதில்லை. பிள்ளையின் அருகிலும் செல்வதில்லை. தூரத்திலிருந்துபார்த்து ஆறுதல் பட்டுக்கொள்வேன்.

இந்த தீவிர நிலைமை பற்றித் தெரியாத அவர் அழுவார். அவரிடம் காட்டிக் கொள்ளாவிட்டாலும்,நானும் மனதிற்குள் அழுவேன். இன்று நான் வேறொரு அறையில் தனியாக தூங்குகிறேன். நாட்டுக்காக கடமையாற்றும் ஒவ்வொருவரது நிலையும் இப்படித்தான். அதனால் மனதை சமாதானப்படுத்திக்கொள்ள என்னால் முடிகிறது. வீட்டை விட்டு வரும்போது அந்த துக்கத்தை நான் மறந்து விடுகின்றேன்.

ஏனெனில் நாள்தோறும் செய்ய வேண்டிய ஆகப்பெரிய ஒரு கடமை என் முன்னால் இருக்கிறது.’ இதுதான் சுஜித்தின் கதை.

சரியாக சொன்னால் பல கதைகளில் ஒன்று மட்டுமே. எங்களுக்காக இவர்கள் முகம் கொடுக்கும் கஷ்டமான வாழ்க்கையைப் பற்றி, அவர்களது அக்கறையை பற்றிநீங்கள் சற்று சிந்தித்திருக்கிறீhகளா? எமது மனங்களில் அவர்கள் நிரந்தர வீரர்களாக இருக்க வேண்டும் என்பது இதனாலேயே. அவர்களைப் போலவே இந்த மண்ணோடுதினமும் போராடி, நாட்டுக்காக பயிரிட்டு எமக்கு உணவளிக்கும் விவசாயிகளும் நிரந்தர வீரர்கள் என்பதை நாம் மறந்துவிட முடியாது. முடியுமான அளவு காய்கறிகளைப் பெற்று அவர்களைப் பாதுகாப்பதுஇத்தருணத்தில் எமது கடமை.

சுவையான உணவுகள் இல்லாவிட்டாலும் கூடபசியின்றி நாம் இன்று வாழ்வதற்கு காரணம் அவர்களே என்பதை நாம் எப்படி மறந்துவிட முடியும்?

TamilMirror