மியான்மார் வரலாறும் ரோஹிங்கியா இன அழிப்பும்! – பகுதி 2

பர்மா விடுதலையும், தேசிய இனங்களின் போராட்டமும்!  ~ சாந்தலட்சுமி பெருமாள்

சுதந்திரத்திற்குப் பின், பர்மா ஒன்றியத்தின் இராணுவம் பர்மா – சீனா – தாய்லாந்து எல்லையோரப் பகுதிகளில் நிறுத்தப்பட்டது. இராணுவக் கட்டமைப்புகளுக்காக எல்லையோரப் பழங்குடியினரின் பூர்வீக நிலங்கள் பறிக்கப்பட்டன. இந்த ஆக்கிரமிப்பின் விளைவால், மோன் இனத்தினர் தங்கள் விடுதலைக்காக, 1948-ல் ஓர் இராணுவக் கட்டமைப்பை உருவாக்கினர்.

பாங்லாங் ஒப்பந்தத்தின் போது – தேசிய இனங்களின் தலைவர்கள்

1946-ம் ஆண்டு முதல் 1950 வரை சீனாவில் நடந்த உள்நாட்டுப் போரில், மாவோ’வின் செஞ்சீனப் படை வென்று, சீனக் குடியரசு உருவாக்கப்பட்டது. செஞ்சீனப் படையால் வீழ்த்தப்பட்ட குயோமிடாங் படைகளில் சில, சீன – பர்மா எல்லையோரங்களில் குடியேறியன. இவர்களின் ஊடுருவலைத் தடுக்க, பர்மா இராணுவம் சீன – பர்மா எல்லையோரங்களில் தனது இராணுவத்தைப் பலப்படுத்தியது. பாங்க்லாங் ஒப்பந்தத்தை மீறி, எல்லையோர தேசிய இனங்களின் நிலங்களை இராணுவம் கைப்பற்றியது. இதில் கரேன்னிகளின் தாயகப் பகுதியான, பர்மா – தாய்லாந்து எல்லையோரமான கய்யா (Kayah State) பர்மா ஒன்றியத்தில் இணைக்கப்பட்டது. அதன் விளைவாக, தங்கள் தாயகத்தை மீட்கும் பொருட்டு, 1951-ல், கரேன்னி இராணுவப் படை உருவானது. அதே காலக்கட்டத்தில், 1950-ல், வங்காளதேச எல்லையோரத்தில் வாழ்ந்த அரக்கானியர்கள், அரக்கான் விடுதலைப் படையை உருவாக்கியிருந்தனர்.

பாங்க்லாங் ஒப்பந்தத்தின்படி தங்கள் அதிகாரத்தை நிலைநாட்டவும் தங்கள் நிலங்களைக் பாதுகாக்கவும் தேசிய இனங்கள் ஆயுதமேந்திப் போராடத் தொடங்கின. உள்நாட்டுப் போர் மற்றும் இரண்டாம் உலகப் போரின் தாக்கத்தைச் சமாளிக்க முடியாத நிலையில், 1958-ல், பிரதமர் யு நு, இராணுவத் தலைவர் நி வின்-ஐ ஆட்சிப் பொறுப்பை ஏற்கச் செய்தார். 1949-ல், கரேன் இனத்தைச் சேர்ந்த ஜெனரல் ஸ்மித் டன் இராணுவத் தலைவர் பொறுப்பில் இருந்தார். அவரை அப்பதவியிலிருந்து விலக்கி, பாமர் இனத்தைச் சார்ந்த நி வின்–ஐ நியமித்த யு நு, அவருக்கு முழு அதிகாரத்தையும் வழங்கினார். தற்காலிகமாக இராணுவக் கட்டுப்பாட்டில் இருந்த பர்மா ஆட்சிப் பொறுப்பு, 1960 தேர்தல் வெற்றிக்குப் பின்னர், யு நு-விடமே ஒப்படைக்கப்பட்டது. யு நு-வின் தலைமையிலான அரசாங்கத்தின் நிர்வாக முறைகேடுகளால் நம்பிக்கை இழந்த மக்கள், எதிர்ப்பு தெரிவிக்கத் தொடங்கினர். இச்சூழலைப் பயன்படுத்தி, நி வின்னின் இராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியது; யு நு உட்பட முக்கியத் தலைவர்களைக் கைதுசெய்த நி வின், பிரதமர் பதவியேற்று, தன் ஆட்சியை சோசலிச ஆட்சியாக அறிவித்துக்கொண்டார்.

இரண்டாம் உலகப் போரில், ஜப்பானை அணு ஆயுதம் கொண்டு வீழ்த்தியபோதும், பசிபிக் போரின் தோல்வி, ஆசிய நாடுகளில் நேரடி காலனித்துவ ஆட்சிக்குச் சாத்தியமில்லை என்பதை மேற்குலக நாடுகளுக்கு உணர்த்தியது. எனவே, 1945-ல் இரண்டாம் உலகப் போர் முடிவுற்றதைத் தொடர்ந்து, ஆசியக் காலணி நாடுகளுக்கு விடுதலை கொடுத்தது மேற்குலகம்.

விடுதலைப் பெற்ற ஆசிய நாடுகளில் சில, இரஷ்யாவின் சோசலிசக் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு, தங்கள் நாடுகளிலும் அதனை நடைமுறைப்படுத்த முற்பட்டன. இது ஆசிய நாடுகளைச் சுரண்டி வாழ்ந்த அமெரிக்கா போன்ற ‘ஏகாதிபத்திய’ நாடுகளுக்குச் சிக்கலை ஏற்படுத்தியது. ஆக, இரஷ்யா ஒருபுறமும் அமெரிக்கா மறுபுறமும் ஆசிய நாடுகளைத் தங்கள் வசப்படுத்த, நேரடியாக இல்லாமல் பனிப்போரில் ஈடுபட்டன. சொந்த நாட்டில் தங்கள் விடுதலை பறிக்கப்பட்டதாக எண்ணி, சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த தேசிய இனக் குழுக்களை அவையிரண்டும் பயன்படுத்திக்கொண்டன.

பர்மாவின் இராணுவ ஆட்சிக்கு எதிரான பனிப்போரைத் தொடங்க, அமெரிக்கா தாய்லாந்துடன் கூட்டணி அமைத்தது. தாய்லாந்து எல்லைகளில் பர்மாவை எதிர்த்து போரிட்டுக்கொண்டிருந்த கரேன்னி, கரேன், ஷான், மோன் இனப் போராட்டக் குழுக்களுக்கு ஆயுதம் மற்றும் இராணுவ உதவிகளை அமெரிக்கா வழங்கியது. தன்னை சோசலிச நாடாக அறிவித்துக்கொண்டாலும், பர்மா பிற சோசலிச நாடுகளின் தொடர்பிலிருந்து தனித்தே செயல்பட்டது.

யு நு பிரதமராக இருந்தபோது சீனாவுடன் ஏற்பட்ட நல்லுறவினால், சீன முதலீடுகள் பர்மாவுக்குள் நுழைந்தன, இது சீனத் தொழிலாளர்கள் பர்மாவுக்குள் குடியேறக் காரணமாக அமைந்தது. அவர்களுக்காக அமைக்கப்பட்ட பள்ளிகளில் மாவோ தத்துவ சிந்தனைகள் போதிக்கப்பட்டன. நி வின்’னின் தேசியமயமாக்கும் கொள்கை சீனப் பள்ளிகளுக்கும் நிறுவனங்களுக்கும் நெருக்கடியைக் கொடுத்தது. நி வின் ஆட்சிக்கு எதிராகவும் பர்மாவில் வாழ்ந்த சீனர்களுக்கு எதிராகவும் பர்மா மக்கள் போராட தொடங்கினர். பர்மாவைத் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர நினைத்த சீனா, பர்மா கம்யூனிசக் கட்சிக்கு ஆயுதங்களை வழங்கியதோடு, அவர்களுக்கு இராணுவப் பயிற்சியும் அளித்தது.

ஒருபுறம் சீன-பர்மா கம்யூனிசக் கட்சி ஆதரவு கொண்ட தேசிய இனக் குழு, மறுபுறம் அமெரிக்கா-தாய்லாந்து பின்புலம் கொண்ட ஜனநாயக முன்னனியின் தேசிய இனப் போராட்டக் குழு என, 1980-களில் பர்மா எல்லையோரப் பகுதிகள் முழுவதும் போராட்டங்கள் வெடித்துகொண்டிருந்தன. 1948 முதல் 1990 வரை சுமார் 12 தேசிய இனப் போராட்டக் குழுக்கள் தங்களின் தேச விடுதலைக்காகப் போராடி வந்தன.

இவர்களின் போராட்டங்களை அடக்க, இராணுவத்திற்கு முழு அதிகாரம் வழங்கப்பட்டது. அரசு நிர்வாகங்களை இராணுவ மயமாக்கி, இராணுவ நடவடிக்கைகளுக்கு முக்கியத்துவம் வழங்கப்பட்டதால், மக்கள் அதிகம் பாதிக்கப்பட்டனர். இதனால் ஆத்திரமடைந்த மக்கள், 1988-ல், நி வின் தலைமையிலான இராணுவ ஆட்சியை எதிர்த்து போராட்டம் நடத்தினர். இப்போராட்டத்தைக் கட்டுப்படுத்த தவறிவிட்டதாகக் கூறி, நி வின் ஆட்சியை இராணுவம் கலைத்தது. நாட்டின் சட்ட, ஒழுங்கு மீட்புக் குழு என்ற பெயரில் நாட்டின் ஆட்சிப் பொறுப்பை ஏற்றுகொண்ட இராணுவம், போராட்டக்காரர்களை அடக்கியது; ஆங் சான் சுயுகி உட்பட, நாட்டின் முக்கியத் தலைவர்கள் கைது செய்யப்பட்டனர். நி வின் தலைமையிலான பர்மா சோசலிசத் திட்டக் கட்சி தடைசெய்யப்பட்டது. 1989-ல், பர்மா ‘மியான்மார் யூனியன்’ எனப் பெயர் மாற்றம் கண்டது. 1990-ல், ஆங் சான் சுயுகியின் தேசிய ஜனநாயக லீக் கட்சி வெற்றி பெற்றபோதிலும், ஜனநாயக ஆட்சிமுறை நிராகரிக்கப்பட்டு, ஆங் சான் சுயுகியின் வீட்டுக் காவல் நீட்டிக்கப்பட்டது. மியான்மாரின் ஆட்சி நிர்வாகம் முற்று முழுதாக இராணுவத்தின் கட்டுப்பாட்டுக்குள் வந்தது.

போர்க்கள மியான்மார் வணிகச் சந்தையாக உருமாற்றம்

மியான்மார் எல்லையோர தேசிய இனங்களின் போராட்டத்தைத் தங்கள் இலாபத்திற்காகப் பயன்படுத்திகொண்ட அமெரிக்காவும் சீனாவும், சோவியத் வீழ்ச்சிக்குப் பின்னர் நேரடி போராட்டத்தில் இறங்கின. சோவியத் வீழ்ச்சியினால் பலவீனமடைந்த ஆசிய நாடுகளில், அமெரிக்கா தனது வணிக அரசியல் நகர்வுகளை முன்னெடுக்கத் தொடங்கியது. தேசிய இனக் குழுக்களுக்கான தனது ஆதரவை நிறுத்திக்கொண்ட தாய்லாந்து, ‘போர்க்களத்திலிருந்து வணிகச் சந்தை’ என, மியான்மாருடன் தனது புதிய உறவுக் கொள்கையைத் தொடங்கியதோடு, அக்குழுக்களை ஒடுக்க பர்மா இராணுவத்தோடு ஒப்பந்தத்திலும் கையெழுத்திட்டது. உணவு, ஆயுதம் என அனைத்தும் நிறுத்தப்பட்ட நிலையில், போராட்டக் குழுக்களுக்கிடையே பிளவுகள் ஏற்பட்டு, பின்னடைவை நோக்கி அவை நகர்ந்தன.

இதனையடுத்து, தங்களுக்கான பொருளாதாரத் தேவைகளைப் பூர்த்தி செய்ய, தங்களுக்குட்பட்ட பகுதிகளில் கிடைத்த மூலவளங்களை அவை வணிகம் செய்யத் தொடங்கின. கொக்கேய்ன், ஹெரோயின் உற்பத்தியும், அதனையொட்டிய வணிகமும் அவர்களின் போராட்டத்தை ஒரு புதிய அரசியல், சமூக, பொருளாதாரத் தளத்தை நோக்கி நகர்த்தின. அதுமட்டுமின்றி, தங்கள் கட்டுப்பாட்டுக்கு உட்பட்ட தாய்லாந்து-பர்மா எல்லையோரப் பகுதிகளைக் கடந்துசெல்லும் பொருள்களுக்கு, அவர்கள் வரியும் வசூலிக்கத் தொடங்கினர்.

1989-ல், தாய்லாந்து மட்டுமின்றி, தனது நாட்டில் முதலீடுகள் செய்ய வெளிநாட்டு நிறுவனங்களை மியான்மார் அனுமதித்தது. ஆயுதங்களைப் பெற்றுக்கொண்டு, அதற்கு மாற்றாக எண்ணெய்யையும் எரிவாயுவையும் தாய்லாந்துக்கு ஏற்றுமதி செய்தது மியான்மார். இது மியான்மாரின் ஆளும் இராணுவத்தினரை வணிகர்களாக மாற்றியதோடு, அவை தங்களின் ஏகபோக அதிகாரத்தால், மியான்மாரின் மூல வளங்களைச் சூறையாடி, கொள்ளை இலாபம் அடிக்கவும் செய்தது.

இந்த மையப்பகுதி, பாமர் இன இராணுவத்தினரின் வணிக வெறிக்கு, தங்கம், தாமிரம், ஈயம், எண்ணெய், எரிவாயு என இயற்கை வளங்கள் பல நிறைந்த, பழங்குடியினர் வாழ்ந்த எல்லையோர மலைத்தொடர்களும் கடற்பகுதிகளும் தேவைப்பட்டன. அதுமட்டுமின்றி, மையப்பகுதிகளில் இருந்து பாமர்களின் வணிகப் பொருள்கள் சீனா, தாய்லாந்து சந்தைகளை அடைய, எல்லைப்பகுதிகளைக் கடக்கும்போது வரி செலுத்த வேண்டி இருந்தது. இது இரு தரப்பினர் இடையேயும் வணிகப் போட்டியை ஏற்படுத்தியது. ஆக, தாயகமீட்பு, ஆக்கிரமிப்பு என்ற நிலை கடந்து, நாட்டின் தாதுவளங்கள் மீதான உரிமை, முடிவெடுக்கும் அதிகாரம் என்பதை நோக்கி இவர்களின் போராட்டம் திசை திரும்பியது.

2010-ம் ஆண்டு, ஜனநாயக ஆட்சிமுறைக்கு மாறிய மியான்மார், நாட்டின் அந்நிய முதலீடுகள் மீதான சில முக்கியச் சட்ட வரைவுகளை மாற்றியமைத்ததோடு, புதிதாகவும் சிலவற்றை உருவாக்கியது. அதோடு நின்றுவிடாமல், இயற்கை வளங்கள் நிறைந்த எல்லையோரப் பகுதிகளை அந்நிய முதலீட்டாளர்களுக்குப் பெற்றுக்கொடுக்கும் பணியையும் அது தொடங்கியது. இதற்காக, 2013-ம் ஆண்டு, தேசிய இனப் போராட்டக் குழுக்களுடன் சமாதான ஒப்பந்தப் பேச்சுவார்த்தைகளை அரசாங்கம் ஏற்பாடு செய்தது.

பேச்சுவார்த்தையின் போது, அரசாங்கம் முன்வைத்த சில முக்கியக் கோரிக்கைகள் :-

  • தேசிய இனப் போராட்டக்குழுக்கள் ஆயுதங்களை வைத்திருக்கலாம்,
  • மியான்மார் இராணுவத்துடன் இணைந்து, அவை எல்லைப் பாதுகாப்பு படையாகப் பணியாற்ற வேண்டும்,
  • மியான்மார் தேர்தலில், போராட்டக் குழுக்களின் அரசியல் அமைப்புகள் பங்கெடுக்க வேண்டும்.

அதேசமயம், தேசிய இனக் குழுக்கள் தரப்பில், அதிகாரங்கள் நிறைந்த தன்னாச்சி அரசமைப்பு மற்றும் தாதுவளங்கள் மீதான வருமானம் சரிசமமாகப் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும் என்பன முக்கிய அம்சமாக முன்வைக்கப்பட்டன.

2015-ல், பல பேச்சு வார்த்தைகளுக்குப் பிறகு, 8 போராட்டக் குழுக்கள் அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. கச்சின் போராட்டக் குழுவும், வ்வா அரசு இராணுவமும் பேச்சுவார்த்தைகளில் கலந்துகொள்ளவில்லை. அதுமட்டுமின்றி, தனது எல்லைக்குட்பட பகுதிகளில் அந்நிய முதலீடுகளை அனுமதித்ததன் காரணமாக, 1994-ல் மியான்மார் அரசாங்கத்துடன் செய்துகொண்ட அமைதி ஒப்பந்தத்தையும் கச்சின் போராட்டக் குழு முறித்துகொண்டது.

அந்நிய முதலீட்டாளர்கள் விவசாய நிலங்களை அபகரித்தனர், விவசாயத்தை வாழ்வாதாரமாகக் கொண்டு வாழ்ந்த மக்கள், மீன்பிடி தொழில் பகுதிகளில் குடியமர்த்தப்பட்டனர். அந்நிய முதலீட்டாளர்கள் ஏற்படுத்திய சூழலியியல் கேடுகள், தேசிய இனப் போராட்டக் குழுக்களை மட்டுமின்றி, சாமானிய மக்களையும் பாதித்தது. இதனால், அவர்கள் அரசுக்கெதிரான போராட்டத்தில் இறங்கினர்.

அந்நிய மூலதனப் பேரரசுகளின் வணிக வெறிக்கு ஆளான தேசிய இனக் குழுக்கள், தங்கள் தாயக விடுதலைக்காக மட்டுமின்றி, தங்கள் இயற்கை வளங்களையும் வாழ்வாதாரத்தையும் பாதுகாக்கவும் போராடத் தொடங்கின. இதில், அவர்கள் அகதிகளாக்கப்பட்டது மட்டுமின்றி, படுகொலையும் செய்யப்பட்டனர். கச்சின் இன மக்களில் பல்லாயிரக்கணக்கானோர் அகதிகளாக்கப்பட்டுள்ளனர்.

மற்றப் பகுதிகளில் நடந்தது போன்று, ஒரு நீண்ட, நெடிய ஆயுதப் போராட்டம் ரோஹிங்கியா மக்கள் வாழும் ரகைன் பகுதியில் நடக்கவில்லை, எனினும், ரகைன் மாநிலத்தின் சிட்வி எரிவாயு பகுதியிலும், சீனாவின் துறைமுகத் திட்டம் அமைந்திருக்கும் கியாவ்பிக்யுவும் அந்நிய முதலீட்டு வல்லரசுகளால் சண்டை களமாக மாறி, ரோஹிங்கியா இனப்படுகொலைக்கு வித்திட்டுள்ளன. மியான்மாரில், ரோஹிங்கியாக்களைப் போல், பல தேசிய இனங்களும் இன அழிப்புக்கு ஆளாகி வந்தபோதிலும், இவர்களின் படுகொலை மட்டும் சர்வதேச விவாதத்திற்கு உள்ளாக்கப்பட்டதற்கு வல்லரசுகளின் அரசியல் நலனே காரணம். இதில், ரகைனின் பௌத்தர்கள் பகடை காய்களாக்கப்பட்டு, இஸ்லாமிய ரோஹிங்கியாக்கள் படுகொலை செய்யப்படுகின்றனர்.

ரகைன்-ரொஹிங்கியா வரலாறு தொடரும் …..

மேற்கோள்கள் :-

  1. Aamna Mohdin.(2017).A brief history of the word “Rohingya” at the heart of a humanitarian crisis. https://qz.com/search/)
  2. 2018.Who are the Rohingya? https://www.aljazeera.com/
  3. Erin Blakemor.(2019).Who are the Rohingya people? https://www.nationalgeographic.com/)
  4. Figure at a Glance.UNHCR-Malaysia 2001-2020
  5. http://www.keetru.com/ 
  6. https://en.wikipedia.org/wiki/Main_Page
  7. https://en.wikipedia.org/wiki/Rohingya_people
  8. https://www.tamilwin.com/
  9. https://www.vinavu.com/