மே 1, 2020: கோவிட் தாக்குதல், தொழிலாளர்களுக்கு அச்சுறுத்தல்! – மே தினச் செயற்குழு

மே 1 – தொழிலாளர் தினத்தை முன்னிட்டு, மலேசிய மே தினக் கொண்டாட்ட ஏற்பாட்டு செயற்குழு நேற்று வெளியிட்ட ‘தொழிலாளர் தின அறிக்கை’யின் தமிழாக்கம் பின்வருமாறு :-  

2020, மே 1 தொழிலாளர் தினம், மலேசியாவிலும் உலகெங்கிலும் உள்ள தொழிலாளர் வர்க்கத்திற்குப் பெரும் சவாலைக் கொண்டுவந்திருக்கிறது. கோவிட்-19 தாக்கத்தினால் நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை மார்ச் 18-ம் தேதி முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது.

கோவிட்-19 தொற்றுநோய் நெருக்கடி தொழிலாளர்களுக்கு மோசமான தாக்கங்களைக் கொண்டுவந்துள்ளது. வேலைக்குச் செல்பவர்களுக்கு வைரஸ் தொற்றும் அபாயமும், வேலைக்குச் செல்லாதவர்களுக்குத் தினசரி வாழ்வுக்கானப் போராட்டத்தையும் வேலை இழக்கும் அச்சுறுத்தலையும் எதிர்நோக்கியுள்ளனர்.

முறைசாரா துறையில் பணிபுரியும் தொழிலாளர்களும் புலம்பெயர்ந்தோர் மற்றும் அகதிகளுமே இதனால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். தினக் கூலியை நம்பி இருக்கும் அவர்கள் வருமான இழப்பால் உணவு மற்றும் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு பசியால் வாடுகின்றனர்.

கோவிட்-19 தாக்கம் ஒரு சுகாதார நெருக்கடி மட்டுமல்ல; தொழில்துறை, பாதுகாப்பு, வேலையின்மை, உணவு பஞ்சம் போன்றவற்றைத் தொடர்ந்து எதிர்கொள்ளும் தொழிலாளர் வர்க்கத்திற்குப் பேரழிவை ஏற்படுத்தும் பொருளாதார நெருக்கடியையும் அது கொன்டுவரும்.

அரசாங்கம் தொடர்ந்து  தொழிலாளர் வேலை நீக்கம் நடைபெறாமல் இருப்பதை இலக்காக கொண்டிருந்தாலும், நடைமுறையில் தொழிலாளர் வேலை நீக்கம் தொடர்பிலான எண்ணிக்கை கூடிக்கொண்டுதான் இருக்கிறது. மேலும், கட்டாயமாகவும் அநீதியாகவும் தொழிலாளர்களின் ஊதியத்தை, விருப்பம் போல் பிடித்தம் செய்வதும் வேலையைக் குறைப்பதும், தொழிலாளர்களிடையே அச்சத்தை உருவாக்கியுள்ளது.

எனவே, வழக்கத்திற்கு மாறானா, 2020 தொழிலாளர் தினத்தில், நாங்கள் பின்வரும் கோரிக்கைகளை முன்வைக்கிறோம்:

 1. கோவிட்-19 சமயத்தில், தங்கள் தொழிலாளர்களின் பாதுகாப்பிற்கும் சுகாதாரத்திற்கும் முக்கியத்துவம் அளிக்காத நிறுவனங்களின் மீது அரசாங்கம் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். 
 • கோவிட் 19 அச்சுறுத்தல் முடியும் வரை, மக்கள் நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையினால் (எம்.சி.ஓ.) நிர்ணயிக்கப்பட்ட பணியிடப் பாதுகாப்பு வழிகாட்டுதல்களை ஒவ்வொரு நிறுவனமும் கடைப்பிடிக்க வேண்டும்.
 • முதலாளிகள், ஊழியர்கள் மற்றும் தொழிற்சங்கங்கள் பிரதிநிதித்துவத்துடன் கோவிட்-19 அமலாக்கக் குழுவை அமைத்து, பரிந்துரைக்கப்பட்ட அனைத்து பாதுகாப்பு நடைமுறைகளும் கண்டிப்பாக பின்பற்றப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.
 • எம்.சி.ஓ. அமலில் இருக்கும் காலத்தில், சட்டவிரோதமாக இயங்கும் அத்தியாவசியமற்ற நிறுவனங்கள் மீது அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், இவ்விவகாரத்தில், சர்வதேச வர்த்தக மற்றும் கைத்தொழில் அமைச்சு (எம்.ஐ.டி.ஐ.) தகவல்களைப் பரிமாறும்போது பொறுப்பாகவும் வெளிப்படையாகவும் செயல்பட வேண்டும்.
 • கோவிட்-19 நெருக்கடியின் போது, தொழிலாளர்களின் சம்பளம் முழுமையாக செலுத்தப்பட வேண்டும்; ஊதியம் வழங்க மறுத்தல் மற்றும் ஊதியமில்லாத விடுமுறைகளை எடுப்பதற்குத் தொழிலாளர்களைக் கட்டாயப்படுத்தவோ அல்லது மிரட்டவோக் கூடாது.
 1. கட்டாய வெளியேற்றத்தை நிறுத்தி, வசதியான வீடுகளை உறுதி செய்யுங்கள் வேண்டும்.
 • நகரமுன்னோடிகள், பழங்குடியினர், தோட்டத் தொழிலாளர்கள், அந்நியத் தொழிலாளர்கள் மற்றும் வறுமை கோட்டிற்குக் கீழ் இருக்கும் சமூகங்களை, அவர்கள் குடியிருப்புகளில் இருந்து கட்டாயமாக வெளியேற்றுவதையும் நீர், மின்சாரம் போன்ற தேவைகளைத் துண்டிப்பதையும் அரசாங்கம் நிறுத்த வேண்டும். நியாயமான மலிவு விலையில் மக்களுக்கு வீட்டுவசதி திட்டங்களைச் செயல்படுத்த வேண்டும்.
 1. அனைவருக்குமான சுகாதார உரிமைகள்
 • அரசு மருத்துவமனைகளை மேம்படுத்தவும் சீரமைக்கவும் அரசாங்கம் மருத்துவத்துறைக்குக் கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும். இது சிறந்த, இலவச மருத்துவச் சேவைகளை மக்களுக்கு வழங்கிட வழிசெய்யும். அதேவேளையில், மக்களுக்குப் போதுமான மருத்துவச் சேவை கிடைத்திட தனியார் மருத்துவமனைகளை அரசுடமை ஆக்கும் ஆலோசனையை அரசாங்கம் ஆய்வு செய்திடல் வேண்டும். முக்கியத்துவம் அளிக்கப்படாமல் இருக்கும் மருத்துவமனை துப்புரவுத் தொழிலாளர்கள், குப்பை அகற்றுபவர்கள் உட்பட, இதர முதன்நிலை தொழிலாளர்களின் வேலையை நிரந்திரமாக்கி, அவர்களின் நலனைப் பாதுகாக்கும் வகையில் சிறப்பு நிதியும் ஒதுக்க வேண்டும்.
 1. உணவுப் பாதுகாப்பு மற்றும் பொருட்களின் விலைக் கட்டுப்பாடு
 • உள்ளூர் உணவு உற்பத்திக்கு அரசு உத்தரவாதம் அளிப்பது மிக முக்கியமானதாகும். விவசாயிகளுக்கும் கால்நடை வளர்ப்பவர்களுக்கும் நில மானியங்களை அங்கீகரித்து, உள்ளூர் பயன்பாட்டிற்கு விவசாய விளைபொருட்களை வழங்க வேண்டும். விவசாயிகள் மற்றும் கால்நடை வளர்ப்பாளர்களின் நிலங்கள் பறிக்கப்பட்டு, கட்டாயமாக வெளியேற்றப்படுவதை நிறுத்த வேண்டும். அதே நேரத்தில் அத்தியாவசிய பொருட்களின் விலைகளைக் கட்டுப்படுத்தி, மக்களுக்கு மானியமாக அவற்றைத் திருப்பித் தர வேண்டும்.
 1. அந்நியத் தொழிலாளர்கள் மற்றும் அகதிகள்
 • கோவிட்-19 நெருக்கடி காலக்கட்டத்தில் சுமார் ஒரு வருடத்திற்கு அந்நியத் தொழிலாளர்களையும் அகதிகளையும் கைது செய்வதை அல்லது நாடு கடத்துவதை அரசாங்கம் நிறுத்த வேண்டும். பொருளாதாரத் தூண்டுதல் தொகுப்பு, அந்நியத் தொழிலாளர்கள் மற்றும் அகதிகளுக்கும் வழங்கப்படுவதோடு, இவர்களுக்குப் போதுமான உணவு விநியோகத்தையும் அரசாங்கம் உறுதிசெய்ய வேண்டும். அந்நியத் தொழிலாளர்கள் பாகுபாடின்றி நியாயமாக நடத்தப்பட வேண்டும். அரசாங்கம் அகதிகளுக்கு நம் நாட்டில் பணிபுரியும் உரிமை வழங்கி, அவர்களை அங்கீகரிக்க வேண்டும்
 1. RM 1,800 குறைந்தபட்ச சம்பளமும் பன்னாட்டு நிறுவனங்களுக்கான (எம்.என்.சி.) சிறப்பு வரியும்
 • மாதத்திற்கு RM1,800 குறைந்தபட்ச ஊதிய உயர்வை உறுதி செய்வதன் மூலமும், 2016-ம் ஆண்டில், பேங்க் நெகாரா பரிந்துரைத்தபடி, உயரும் வாழ்க்கைச் செலவினங்களைப் பூர்த்தி செய்ய ஒரு வாழ்க்கை கொடுப்பனவை (கோலா) அமல்படுத்துவதன் மூலமும், நாட்டின் செல்வத்தைச் சமமாக பகிர்ந்தளிக்க முடியும். கூடுதலாக, மக்களுக்கு உதவி வழங்குவதனால் ஏற்படும் செலவுகளை ஈடுகட்ட, அரசாங்கம் பன்னாட்டு தொழிற்துறை நிறுவனங்களிடம் அவசர வரி விதிக்க வேண்டும்.
 1. ஒப்பந்த வேலை முறையை நிறுத்தி, நிரந்தர பணியாளர்களாக்க வேண்டும்
 • தொழிலாளர்களுக்கான ஒப்பந்த தொழில் முறையை அரசாங்கம் அகற்ற வேண்டும். ஒப்பந்த முறை, தற்காலிக வேலைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம், அதை ஒருபோதும் துஷ்பிரயோகம் செய்யக்கூடாது.
 1. தொழிற்சங்கங்க உரிமைகள்
 • தொழிற்சங்கங்களை வலுப்படுத்துவதன் மூலமும் பேச்சுவார்த்தைகள் நடத்தும் உரிமை வழங்குவதன் மூலமும் தொழிற்சங்க நல்லிணக்கத்தின் உணர்வை மதிக்க வேண்டும். நாட்டில் தொழிற்சங்கங்களை அழிக்கும் அனைத்து நடவடிக்கைகளையும் நிறுத்த வேண்டும்.
 1. பாலினம் மற்றும் பாலியல் அடிப்படையிலான ஒடுக்குமுறைகளை நிறுத்த வேண்டும்
 • பெண் தொழிலாளர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதோடு; பாகுபாடு காட்டும் சட்டங்கள், கொள்கைகள் மற்றும் செயல்களை ஒழிக்க வேண்டும்.
 • பாலினச் சமத்துவ சட்டம் இயற்றப்பட வேண்டும். பணியிடத்தில் பெண்களுக்கு எதிரான அனைத்து வகையான பாகுபாடுகளையும் துன்புறுத்தல்களையும் நிறுத்த வேண்டும்.
 • புதிய சட்டங்களை அறிமுகப்படுத்துவதன் மூலம் வீட்டில் வேலை செய்யும் தொழிலாளர்களை அங்கீகரித்து, அவர்களின் உரிமைகளைப் பாதுகாக்க வேண்டும்.
 • பெண்களுக்கு எதிரான அனைத்து வகையான பாகுபாடுகளையும் அகற்றுவதற்கான மாநாட்டை (CEDAW) அமல்படுத்துவதோடு, விரிவான பாலியல் துன்புறுத்தல் சட்டத்தையும் இயற்ற வேண்டும்.
 • 1997 சர்வதேச தொழிலாளர் மாநாடு (ஐ.எல்.ஓ.) 100-ன் படி, அரசாங்கம் சட்டங்களைத் திருத்தம் செய்ய வேண்டும்.
 1. அடிப்படைத் தேவைகள் தனியார் மயமாக்கப்படுவதை நிறுத்த வேண்டும்
 • நீர், மின்சாரம், சுகாதாரம், பொதுபோக்குவரத்து, கல்வி போன்ற அடிப்படை தேவைகள், இலாப நோக்கிற்காக தனியார் மயமாக்கப்படக்கூடாது. இவை அரசாங்கம் தனது மக்களுக்கு வழங்க வேண்டிய அடிப்படை சேவையாகும்.
 1. பூர்வக்குடி மக்களின் உரிமை
 • பூர்வக்குடி மக்களின் (தீபகற்ப மலேசியா, சபா & சரவாக் உட்பட) நிலங்களை அவர்களின் பாரம்பரிய நிலங்களாக அங்கீகரிப்பதோடு, அந்நிலங்களுக்கான நிரந்திர நிலப்பட்டா வழங்கி, அஃது அவர்களுக்காக ஒதுக்கப்பட்ட நிலமாக வரையறுக்க வேண்டும். பூர்வக்குடி மக்களின் நில மேம்பாட்டுத் திட்டங்கள் அவர்களின் தேவைக்கும் அடிப்படைக்கும் மற்றும் விருப்பத்திற்கும் உட்பட்டு இருத்தல் வேண்டும்.
 1. சுற்றுச்சூழல்
 • சுத்தமான, மலிவான மாற்று ஆற்றலைப் பயன்படுத்துங்கள். பாக்சிட் சுரங்கங்கள், எரியூட்டிகள், அணுமின் நிலையங்கள் மற்றும் மலேசியர்களின் ஆரோக்கியத்திற்குத் தீங்கு விளைவிக்கும் பிற திட்டங்களையும் வெளிநாட்டு கழிவுகளின் இறக்குமதியையும் நிறுத்த வேண்டும். அதோடு, அக்கழிவுகளை நிலப்பரப்புகள் மற்றும் திறந்த ஏரிகளில் சேமிப்பதையும் விளைநிலங்களில் எரிப்பதையு நிறுத்த வேண்டும்.
 1. இலவசக் கல்வி மற்றும் மாணவ உரிமைகள்
 • புலம் பெயர்ந்த மற்றும் அகதிக் குழந்தைகள் உட்பட, அனைத்து மாணவர்களுக்கும் இலவசக் கல்வியை வழங்க வேண்டும். பல்கலைக்கழக, கல்லூரி சட்டம் (AUKU), மாணவர் கல்வி நிறுவனச் சட்டம் 174, தேசிய உயர் கல்வி நிதிக் கழகச் சட்டம் (PTPTN), தேசியத் திறன் மேம்பாட்டு நிதிக் கழகச் சட்டம் (PTPKN) மற்றும் மாணவர் கல்வி சுதந்திரத்தைச் சுரண்டும் அனைத்து வகை சட்டங்களையும் ஒழிக்க வேண்டும்.
 1. சமூகப் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்
 • ஓய்வூதியம் பெறுவோர், முதியோர்களுக்கான வசதிகள், மாற்றுத்திறனாளிகளின் தொழில் உரிமைகள் என அனைவரின் சமூகப் பாதுகாப்பையும் உறுதி செய்ய வேண்டும். மாற்றுத்திறனாளிகளுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கும் திட்டங்களை அமல்படுத்தப்பட வேண்டும்.
 1. சுதந்திரமும் அடிப்படை மனித உரிமையும்
 • விசாரணை இல்லாமல் தடுத்து வைப்பதற்கு அனுமதிக்கும், குற்றத் தடுப்புச் சட்டம் 1959 (போக்கா), வன்முறை தடுப்புச் சட்டம் (பொடா) மற்றும் பாதுகாப்பு குற்றங்கள் (சிறப்பு நடவடிக்கைகள்) சட்டம் 2012 (சோஸ்மா) போன்ற கொடூரச் சட்டங்கள் அகற்றப்பட வேண்டும். புதிதாக உருவாக்கப்படும் சட்டங்களில், விசாரணையின்றி தடுத்து வைக்கும் நடைமுறை இல்லாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.
 • தேசத்துரோகச் சட்டம் (1948) மற்றும் மக்களின் பேச்சு சுதந்திரத்தை நசுக்கும் ஒடுக்குமுறை சட்டங்களை அகற்ற வேண்டும். பேச்சு சுதந்திரத்தைக் கட்டுப்படுத்தும் தகவல் தொடர்பு மற்றும் பல்லூடகச் சட்டத்திருத்தத்தை இரத்து செய்ய வேண்டும்.
 • ஊடகச் சுதந்திரம் பாதுகாக்கப்பட வேண்டும். மக்களுக்கு உண்மையான தகவல்களைக் கொண்டு சேர்ப்பதில் ஊடகத்திற்கு முழு சுதந்திரம் வழங்குதல் வேண்டும். பதிப்பகம் மற்றும் அச்சு சட்டத்தின் கீழ் ஊடகச் சுதந்திரத்தை முடக்கும் சட்டங்கள் இரத்து செய்யப்பட வேண்டும்.

இந்த 2020 மே தினக் கோரிக்கைகளுக்கு அகோரா சோசைட்டி, அலிரான், மலாயாப் பல்கலைக்கழக மாணவர் படை, போர்னியோ தோழர்கள், ஒராங் அஸ்லி அக்கறை கொண்டோர் மையம் (COAC), சுதந்திரமான பத்திரிகை மையம் (CIJ), சமூக மேம்பாட்டு மையம் (சிடிசி), லாரி ஓட்டுநர்கள் கூட்டணி, ஒடுக்கப்பட்ட மக்களுக்கான கூட்டணி (ஜெரிட்), ஜொகூர் செம்பருத்தி தோழர்கள், கோமாஸ், சுவாராம், தெனாகாநீத்தா போன்ற அரசு சார்பற்ற இயக்கங்கள் மற்றும் பெமூடா சோசலிஸ், மலேசிய சோசலிசக் கட்சி போன்ற அரசியல் கட்சிகள் என 64 அரசியல் கட்சிகளும் இயக்கங்களும் ஆதரவு தெரிவித்துள்ளன.